போலிப்பொருட்கள் உஷார்!
ஏமாறாதே! ஏமாற்றாதே! - அதிகரிக்கும் டூப் பிஸினஸ்-உஷார் ரிப்போர்ட்
என் நண்பர் ராமமூர்த்திக்கு பரிசுத்த தரத்திலான பாடல்களை ஆன்மா அதிர காதில் கேட்க ஆசை. அதற்காக வங்கிக் கணக்கு, தபால் வங்கி, உண்டியல் என அடித்துப் பிடித்து காசு சேர்த்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் அத்தனையும் வழித்து துடைத்து எடுத்து இணையத்தில் வயர்லெஸ் 'போஸ்' ஸ்பீக்கர்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காலரை மேலே தூக்கிவிட்டார். அதற்கப்புறம் நடந்த விஷயங்களெல்லாம் வேற லெவல்.
டெலிவரியான ஸ்பீக்கரை கௌரவமாக கையில் வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தவர், போனில் இணைத்து இசையைக் கேட்டபின்தான் நொந்துபோனார். பேக்கில் அச்சிட்டிருந்த கம்பெனி பெயரெல்லாம் சரிதான். ஆனால் ஸ்பீக்கரிலிருந்து கம்பெனி பெயரின் எழுத்தில் மட்டும் ஒரே ஒரு எழுத்து கூடியிருந்தது. யெஸ். டூப் ஸ்பீக்கர். இது ராமமூர்த்திக்கு மட்டுமல்ல நாளைக்கு உங்களுக்கும் இதுபோல நடக்கலாம்.
இந்தியாவின் பிரபல இ-வணிக தளங்களில் அண்மையில் டஜன் கணக்கிலான டூப் பொருட்கள் டெலிவரியாகி கம்பெனி பெயரை கைமா ஆக்கி வருகின்றன. ஐம்பது காசு ஆசை சாக்லெட், பத்து ரூபாய் பிரிட்டானியா வரை டூப்ளிகேட்டுகள் கொட்டும் காலத்தில் காஸ்மெடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் என கோடிக்கணக்கில் காசு புரளும் பிஸினஸை மட்டும் விட்டுவைத்தால் சாமி கண்ணைக் குத்தாதா? போலிப்பொருட்களின் ராஜாங்கம் சக்கைப்போடு போடுவது இணையதளங்களில்தான்.
அண்மையில் முன்னாள் அமைச்சரும் எழுத்தாளருமான சசிதரூரை ஏர்போர்ட்டில் சந்தித்த வாசகர், சசிதரூரின் An Era of Darkness என்று புத்தகத்தில் ஆட்டோகிராஃப் கேட்டிருக்கிறார். புத்தகத்தை விரித்து கையெழுத்திட்ட சசிதரூர் பதறிப்போனார். விற்பனையிலுள்ள அவரது புக்கின் அச்சு அசல் டூப்ளிகேட் அது. அமேஸான் இணையதளத்தில்தான் வாங்கினேன் என வாசகர் துடித்துப்போனார். யெஸ்! அசல் நூலுடன் டூப்ளிகேட் நூலும் அத்தளத்தில் விற்கப்படுகிறது என அறிந்த பலருக்கும் பகீர் அதிர்ச்சி.
2015 ஆம் ஆண்டு ஸ்கீச்சர்ஸ்,லகோஸ்ட், டாமி ஹில்ஃபிகர், கெல்வின்கிளைன், லீவிஸ், ஸ்கீச்சர்ஸ் உள்ளிட்ட மெகா பிராண்ட் நிறுவனங்கள் இ-தளங்கள் மீது போலிப் பொருட்கள் விற்பதாக புகார் கொடுத்தன. உடனே டெல்லியிலுள்ள டூப்ளிகேட் பொருள் தயாரிப்பு மையங்களில் அதிரடி ரெய்டுகள் நடந்தன. போலிகளின் பெருக்கத்தினால் ஃபிளிப்கார்ட் போன்ற தளங்கள் விற்பனையாளர்களிடம் தரமான தயாரிப்பு என சான்றிதழ் பெற்றே தளத்தில் பொருட்களை விற்க அனுமதிக்கின்றன. ஆனாலும் அடைமழையாய் பொழியும் போலிப்பொருட்களின் வரவை இவை கட்டுப்படுத்த முடிவதில்லை. "நாங்கள் பிராண்ட் மற்றும் நீதிமன்றத்தில் வழிகாட்டுதல்படியே செயல்படுகிறோம். ஆனால் சிலசமயங்களில் சவால்களை சந்திக்க நேருகிறது" என்கிறார் ஷாப்க்ளூஸ் தளத்தின் துணைத்தலைவர் ஆம்பர் தீப்.
போலிகள் எங்கே உருவாகின்றன? இ-விற்பனைதளங்கள் அளிக்கும் அளவில்லாத ஆஃபர்கள் விற்பனையாளர்களுக்கு பேராசையைத் தர அசல்களோடு நகல்களையும் நைசாக கலந்துவிட்டு லாபம் பார்க்கின்றனர்.
இணையதளங்கள் வியாபாரிகளுக்கும் பயனர்களுக்கும் இடையிலான இடைமுகம் என்பதால் புகார்கள் வரும்போதுதான் பிரச்னையின் விஸ்வரூபமே அவற்றுக்கு தெரியவரும். ஆனால் அதற்குள் பிராண்ட் மற்றும் இ-தளங்களின் மீதான நம்பிக்கை மக்களிடையே போயே போயிருக்கும். லாபம்? டூப்ளிகேட்டை தயாரித்தவருக்கு; நஷ்டம் வேறுயார்? மக்களாகிய நமக்கே நமக்குத்தான்.
"போலி பொருட்கள் பற்றிய பிரசாரம், தரமான பேக்கேஜ், தயாரிப்பாளர் மீதான கடும் நடவடிக்கை ஆகியவற்றை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்கிறார் ஃபிளிப்கார்ட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். அண்மையில் பேடிஎம் நிறுவனம், 85 ஆயிரம் போலி தயாரிப்பாளர்களை தன் தளத்திலிருந்து அதிரடியாக விலக்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஐடி ஆக்ட் 2000 படி போலிப்பொருட்களை விற்ற நிறுவனங்கள் மீது மக்கள் வழக்கு தொடரும் வாய்ப்பும் உள்ளது. தயாரிப்பாளரின் பொருட்கள் மீது புகார் தந்தால் அமேஸான் அவர்களை கருப்புபட்டியலுக்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கிறது. பின்னே பணத்தை அமேஸான், பாதிக்கப்பட்டவருக்கு திருப்பித் தரவேண்டுமே? "நினைத்துப் பார்க்கமுடியாத அளவு ஆஃபர்களை இணையத்தில் அள்ளிதருவது டூப்ளிகேட்டுகள் பெருகுவதற்கு முக்கியக்காரணம்." என்கிறார் இணைய விற்பனையாளரான மிஷ்ரா.
அழகு சாதனப் பொருட்களுக்கான சந்தை மதிப்பு அதிகரித்து வருவதால் அதிலும் தற்போது போலிகள் கூடிவிட்டன. கடந்தாண்டில் மட்டும் அமேஸானில் காஸ்மெடிக் பொருட்கள் வாங்கிய 340 பேர் அதன் தரத்தின் மீது புகார் தர, அவர்களுக்கு பணத்தை அமேஸான் மற்றும் யுனிலீவர் இணைந்து திருப்பியளித்துள்ளன. இணையத்தின் சுதந்திரத்தை முழுக்க நம்பியிருக்காமல் பொருட்களை கவனித்து சரிபார்த்து வாங்குவது பணத்திற்கும் நிம்மதிக்கும் கேரண்டி தரும்.
ஏமாறாதே ஏமாறாதே!
அன்லிமிடெட் தள்ளுபடி சலுகைகள் கம்பெனிக்கே புதைகுழி தோண்டும். ஆசையைத் தூண்டும் பரபர விளம்பரங்களை நம்பவே நம்பாதீர்கள்.
போலியாக இருந்தால் திரும்ப பெற்று மாற்றித்தரும் வசதி உண்டா என்பதை சரிபாருங்கள்.
பொருளை வாங்கும்போதே அதன் லோகோ, பேக்கேஜ், கேரண்டி, வாரண்டி என விவரங்களைத் துருவி படியுங்கள், விசாரியுங்கள். பொருட்களின் பிரச்னைக்கு இணையதளங்கள் பொறுப்பேற்குமா என்பதை கவனிப்பது அவசியம்.
வாடிக்கையாளர்களின் கருத்துக்களை படியுங்கள். ரேட்டிங்குகளை சரிபார்த்த பின்னர் நிதானமாக தேவையை உறுதிசெய்து யோசித்து வாங்குங்கள்.
எலக்ட்ரானிக்ஸ், விளையாட்டு பொருட்கள், ஏன் கத்தி வரையிலும் டூப்புகள் உண்டு என்பதால் குண்டூசியை இணையத்தில் வாங்கினாலும் உஷார் ப்ளீஸ்.
பொருட்களைத் தவறாக வாங்கி ஏமாந்து பணத்தை திரும்ப பெற்றால் அதனை இணையதளத்தில் பதியுங்கள். விற்பனை நிறுவனத்திற்கும், பயனருக்கும் அது எச்சரிக்கை தரும்.