மயக்கமா, கலக்கமா?
மயக்கமா, கலக்கமா?
மயிலாப்பூரில் தங்கியிருக்கிறேன் என்று கூறும்போதெல்லாம் நண்பர் மணிக்கு காது விடைகும். எங்களுக்கும் ஆசைதான் ஆனால் எங்கே? என்பார்கள். அலுவலகம் மாறியதிலிருந்து அனைத்தும் தலைகீழாகிவிட்டது. எல்லாருக்குமா ஆம், இல்லை என்ற வார்த்தைகளை சொல்ல முடிகிறது?
சரி என்ற ஒரே பட்டன் இருக்கும்போது அதைத்தானே அழுத்தவேண்டியிருக்கிறது.
திருவல்லிக்கேணியில் இரவெல்லாம் பிரியாணி கிளறும் ஒலிகளும், கரண்டி அண்டாவின் ஆழம் தொட்டு சோற்றுப்பருக்கைகளை இறைச்சியுடன் தட்டுக்கு கொண்டுவரும் முயற்சிக்கான இரைச்சல்களும் இடையறாது கேட்கும். அதுவும் தெலுங்கு நண்பர்களின் ரூமில் தங்கினால் நரகம் நடுராத்தியிரியில் ஓபன் ஆகும். சினிமா வெறியர்கள் என்பதால், மிட்நைட் படத்தை பார்த்துவிட்டு வந்து கதவைத்தட்டி கனவில் பெண்தோழிகளுடன் தொடங்கிய விளையாட்டுகளை டிஸ்டர்ப் செய்வார்கள். மயிலாப்பூரில் இதெல்லாம் கிடையாது என்றாலும் ஒளி மாசு அதிகம்.
லேப்டாப், கேமிரா, போன் என ஜேம்ஸ் எப்போது உறங்குகிறான் என்றே என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. தினசரி வித்தியாசமான கலாசார நிகழ்ச்சி வீடியோக்களை, ஆங்கில படங்களை கண்கள் அவியும் வரை பார்ப்பது. அதுவிட்டால் ட்யூப்லைட் எரிய நடுராத்திரியில் விட்டத்தை பார்த்து படுத்திருப்பான். அல்லது எங்களது படுக்கை மீது வேகமாக நடந்தபடியிருப்பான். என்ன மூளையோ, காலையில் எழுந்தால் அது மதிய உணவுக்காகத்தான்.
சூரிய ஒளியே படாத அவனது உடலில் தோல்ப்பிரச்னைகள், மலச்சிக்கல்கள், ஆஸ்துமா கோளாறுகள் என ஒரு டஜன் பிரச்னைகள் உண்டு. அவனின் உடல் கோளாறுகளை தாண்டி மிரட்டுவது அவனின் காட்டு எருமை குணம். சட்டென கோபம் வந்து விடும். காலேஜில் பீஸ் கட்டுவது தாமதமாகிவிட ரூமில் இருந்த பொது கண்ணாடியை உடைத்துவிட்டு ரத்தம் வழிய படுக்கையில் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தான். வெங்கட்டிடன் சொல்ல, அவன் அறை நண்பர்களுக்கு பகிர, அன்றைய பொழுதுபோக்குக்கு ஜேம்ஸ் ஊறுகாயானான்.
ஏன் இரவில் பத்து, பதினொரு மணிக்கு தூங்குவதில்லை என அறைநண்பரிடம் கேட்டேன். தூக்கம் வருவதில்லை என்று சொல்லிவிட்டு ஓகே ப்ரோ சொல்லிவிட்டு பப்ஜி விளையாட பறந்துவிட்டான். அடுத்து அவன் வர இரவு 2மணி யாகும். ஜேம்ஸிடம் எப்படி ஹல்க் பலமும், ஃபிளாஷ் வேகமும் இருக்கிறதோ அதேபோல வெங்கட் கண்களில் தூக்கம் அதிகமாக இருக்கும். மெல்லிய தள்ளாட்டத்துடன் வந்து படுத்து வாய்திறந்து உறங்குவான். கால்கள் ஹீரோயின்கள் தாய்மாமன் கடிதத்தை படிக்கும்போது எப்படியிருக்கும்? அதோ பொசிஷனில் இருக்கும்.
அமாவாசையின் அரண்மனை லட்சியத்தை விட பெரிய கனவுகள் இவர்கள் இருவருக்குமே உண்டு. ஆனால் அந்த வேகத்தில் உடலை பார்க்க மறந்துவிட்டால் என்னாகும்?