அமர்சித்ர கதை! - கனவுலகின் வரலாறு!
குழந்தைக் கனவுலகின் கதைசொல்லி- அமர சித்திர கதை வரலாறு!-ச.அன்பரசு
இணையத்தில் நொடிக்கு நொடி வீடியோக்கள்,
அனிமேஷன் தொடர்கள் ரிலீசாகும் இன்றைய காலத்திலும் காமிக்ஸ் புத்தகங்கள் ஹிட் அடிப்பது சாத்தியமா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். டவுட்டே வேண்டாம் நாங்கள் சாத்தியப்படுத்தியிருக்கிறோம் என தம்ஸ்அப் காட்டுகிறது அமர்சித்ர கதா நிறுவனம்.
இருபது
மொழிகளில் நானூறுக்கும் மேலான காமிஸ் வெளியீடுகளோடு
இந்தியாவெங்கும்
9 கோடி காமிக்ஸ்
பிரதிகள் விற்பனை என அமர்சித்ரகதா
நிறுவனம் சக்கைப்போடு போட்டு வருகிறது அரிய
சாதனைதானே! புத்தகத்தோடு சுணங்காமல் இன்றைய ஜென் இசட் தலைமுறைக்கேற்ப யூட்யூப் சேனல்கள், டிவி, மொபைல் கேம்கள், தனக்கென ஸ்பெஷல் ஆப்களையும் கொண்டு நவீனத்திற்கேற்ப டிஜிட்டலாக
மாறி குழந்தைகளின் ஆகாயத்தை
கலர்ஃபுல்லாக்கி வருகிறது அமர்சித்ர கதைகள்.
இன்றைய
அமர்சித்ர காமிக்ஸ் கதைகளின் வளர்ச்சி ஒரே நாளிலோ, ஓரிரவிலோ வந்துவிடவில்லை. 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காமிக்ஸ்கள் பொது அறிவுத்தகவல்களின்
திரட்டாய் குழந்தைகளை ஈர்க்க ஒரே காரணம்,
ஆனந்த் பாய் என்ற நிறுவனத்தின் தலைவரைத்தான்.
அங்கிள்
பாய் என குழந்தைகளால் அன்போடு அழைக்கப்படும் அமரர்
ஆனந்த் பாய்க்கு இவ்வாண்டு ஏழாவது நினைவுதினம். அமர்சித்ர கதைகளின் மூலம் குழந்தைகளின் உலகை அழகிய புராண கற்பனைக்கதைகளால் குழந்தைகளோடு இணைந்து வண்ணம் தீட்டி மகிழ்ந்த இனிய ஆன்மா ஆனந்துடையது. அன்பு, புத்திசாலித்தனம், தந்திரம், நகைச்சுவை, தியாகம், என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்ட படக்கதைகளின் வழியே சின்னஞ்சிறு குழந்தைகளின் மனதில் அறக்கருத்துகளை
விதைத்த
அமர் சித்ர கதைகள், விற்பனையில் விண்முட்டும் அளவில் சாதித்தன.
கும்பிடத்தோன்றும் கடவுள்கள், சமயோசித விலங்குகள், தியாக நெகிழ்ச்சி
தரும் விடுதலை வீரர்கள் என
இந்தியக்
கலாசாரத்தை காமிக்ஸ் வடிவில்
குழந்தைகளுக்கு புகட்டியதே, அமர்சித்ரகதா நிறுவனம் இன்று
ஆலமரமாய் கிளைவிரித்து விழுது
பரப்பி நிற்க
ஒரே காரணம். "சஃபாரி சூட் அணிந்து ஸ்போர்ட் ஷூக்கள் அணிந்த கதைசொல்லி" என குறும்பாக
சுட்டிக்காட்டி ஆனந்த் பாயை நினைவுகூர்கிறார் அமர்சித்ர கதா காமிக்ஸ் இயக்குநரான ரீனா ஐ
பூரி.
பள்ளிகளிலுள்ள குழந்தைகளைக் கண்டு கொஞ்சிப்பேசி ஏராளமான கடிதங்களை எழுதி வந்த ஆனந்த் மாமா
(எ) ஆனந்த் பாயின் பிம்பம் மலைக்க வைக்கிறது.
"ஆனந்த் பாய் உருவாக்கிய பல்வேறு கதாபாத்திரங்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோரும் கற்பதற்கான விஷயங்களைக் கொண்டிருந்தன. நாங்கள் இன்று காமிக்ஸில்
ஃபாலோ செய்வது
அவரின் கதை சொல்லும் முறையைத்தான்." என புன்னகையோடு பேசுகிறார் ரீனா.
ஆனந்த் பாய் புதிய கேரக்டர்களை
உருவாக்கியதோடு, சுப்பாராவ், லூயிஸ் ஃபெர்னான்டஸ், தேவ் நட்கர்னி உள்ளிட்ட எழுத்தாளர்களையும்
ராம் வயீர்கர், வி.பி. ஹல்பே, பிரதீப் சதி உள்ளிட்ட ஓவியர்களையும் அறிமுகப்படுத்தினார்.
இதன் விளைவாக கிருஷ்ணா, ராணி பத்மினி, ஷிகாரி சாம்பு, சுப்பாண்டி ஆகிய அற்புத சாகாவரம்
பெற்ற கேரக்டர்கள் குழந்தைகளுக்கு கிடைத்தனர். "எங்களது புதிய எடிட்டர் குழுவினர்
சமகால பாலினம், சூழல், விலங்குகள் பாதிப்பு, விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள் என
பரந்துபட்டு யோசித்து காமிக்ஸிற்கு ஐடியா பிடிக்கின்றனர்" என்கிற ரீனா தன் மகனின்
விருப்பத்திற்கேற்ப டிங்கிள் இதழை 1991 ஆம் ஆண்டு புதிய கதைகளோடு மீண்டும் புதுப்பித்திருக்கிறார்.
இன்று காமிக்ஸிற்கான பின்னணிகள் அனைத்தும் டெம்பிளேட்டாக ரெடி செய்யப்பட்டு கதைகள்
டிஜிட்டலாக கணினியில் வரையப்பட்டு நொடியில் அச்சுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நவீனத்திற்கேற்ப
சுப்பாண்டி மற்றும் ஷிகாரி சாம்புவின் கதையிலும் உடைகளிலும் நிறைய அப்டேட்களைச் செய்துள்ளனர்.
எ.கா. சுப்பாண்டியின் தோழி, சாம்புவின் மனைவி. ராம் வயீக்கர் வரைந்த சுப்பாண்டியின்
கேரக்டரை ராமின் மகன் சஞ்சீவ், சஞ்சீவின் மகள் என அப்டேட் செய்து வரைவது ஆச்சர்யம்.
குழந்தைகளைக் கடந்து பெரியவர்களை
அணுகும் வகையில் தொடங்கப்பட்ட டிங்கிள் டைஜெஸ்ட் இன்றும் விற்பனையில் சாதித்து வருகிறது."அமர்சித்ர
கதைகளின் ரசிகனான எனக்கு டிங்கிளில் வேலை கிடைத்தது மறக்க முடியாத அனுபவம்" என்கிறார்
டிங்கிள் எடிட்டரான நீல் தீப்தத் பால். ஸ்வட்ச் பாரத் அபியான், தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்காக
நீல் உருவாக்கிய விழிப்புணர்வு காமிக்ஸ் புகழ்பெற்றவை. இன்று பனிரெண்டு வயதுக்குட்பட்ட
சிறுவர்களிடையே புகழ்பெற்றுவிளங்கும் டிங்கிள் இதழின் விற்பனை மட்டும் 3 லட்சம்.
இதோடு
மற்றுமொரு புதுமையாக டிங்கிளின் விங்ஸ்டார் சூப்பர் ஹீரோ, மும்பை, டெல்லி உள்ளிட்ட
நகரங்களில் வாழ்ந்து மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுபவரல்ல; வடகிழக்கு மாநிலத்தை
சேர்ந்தவர் என்பது பலரும் வியக்கும் செய்தி. "பலரும் விங்ஸ்டார் வடகிழக்கு மாநிலத்தை
மட்டும் காப்பாற்றுவாரா என்று கேட்கின்றனர். அங்குள்ள மக்களின் உடலமைப்பு போல ஹீரோ
இருக்க மெனக்கெட்டோம். சூப்பர்ஹீரோ ஒரேமாதிரி இருக்கவேண்டாம் என்பதால் எடுத்த முடிவு
இது" என்று பேசுகிற உதவி ஆசிரியர் சீன் டிமெலோ, கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன்,
டிங்கிளில் பணிக்கு சேர்ந்து புதிய கேரக்டர்களை வரைந்து தள்ளிக்கொண்டிருக்கிறார். அமர்சித்ரகதா
தன் பல்வேறு காமிக்ஸ் பாத்திரங்கள் மூலம் அரைசதம் அடுத்து, நூற்றாண்டைத்தொடும் என்பதை
ஆசிரியர் குழுவின் அர்ப்பணிப்பான உழைப்பும், வாசிக்கும் குழந்தைகளின் உற்சாகமுமே சாட்சி.
காமிக்ஸ் ஹிஸ்டரி
1947 ஆம் ஆண்டு தெலுங்கு
தயாரிப்பாளரான நாகிரெட்டி, அல்லூரி சக்ரபானி இருவரும் இணைந்து சந்தமாமா என்ற குழந்தைகள்
இதழை தெலுங்கில் தொடங்கினர். கான்செப்ட், மகாபாரம், ராமாயணம். பின் தமிழில் வெளியான
சந்தமாமா 1949 ஆம் ஆண்டு கன்னடம், இந்தி, பின் சந்தால் மொழியையும் தொட்டது.
வெளிநாட்டு
காமிக்ஸ்களுக்கு இணையாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் இந்திரஜால் காமிஸ் 1960 இல் ரிலீசானது.
பிறகு டெல்லியைச் சேர்ந்த கார்டூன்பிரான்குமார் டாபு என்ற காமிக்ஸ் தொடரைத் தொடங்கி
வெற்றிகாண, இந்தியா புக் ஹவுசின் ஹெச்.ஜி.மிர்சந்தானியும் ஆனந்த் பாயும் இணைந்து அமர்சித்ரகதா
காமிக்ஸை உருவாக்கினர். 1969 இல் இவர்களின் கிருஷ்ணா காமிக்ஸ் நூல் மெகா வெற்றிபெற்றது.
தமிழில் லயன் காமிக்ஸ்(1971), ராணி காமிக்ஸ்(1984), அம்புலிமாமா, வாண்டுமாமா, ரத்னபாலா,
பாலமித்ரா ஆகியவை வெளியாகி புகழ்பெற்றன.