வாராக்கடனில் தவிக்கும் முத்ரா திட்டம்!
முத்ரா திட்டத்திலும் வாராக்கடன்!
இந்திய அரசு தன் சாதனைத்திட்டங்களில்
ஒன்றாக மார்தட்டும் பிரதான்மந்திரி முத்ரா யோஜனா(2015,ஏப்.8) திட்டத்திலும் அபரிமிதமாக
வாராக்கடன் அளவு அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில்
7.28 கோடி மக்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு விண்ணை எட்டியதாக பிரதமர்
மோடி தமது அரசை தானே உச்சிமுகர்ந்து பாராட்டிக்கொண்டார். ஆனால் இத்திட்டத்தில்
13.85 லட்சம் பேர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.11 ஆயிரம் கோடி வாராக்கடனாக மாறியுள்ளதை தகவலறியும்
உரிமைச்சட்டத்தில் தேசிய நாளிதழ் பெற்ற அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
முத்ரா யோஜனாவில் ஷிக்சு(ரூ.50
ஆயிரம்), கிஷோர்(ரூ.5 லட்சம் வரை), தருண்(ரூ.10 லட்சத்திற்குள்) என மூன்று பிரிவுகளின்
கீழ் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களை வங்கிகள் தொழில்முனைவோர்களுக்கு வழங்கின. இதில்
ரூ.10 ஆயிரத்து 915 கோடி வாராக்கடனாக மாறியுள்ளதை அரசு வெற்றி என்ற ஒற்றைச்சொல்லில்
மறைக்க முயல்கிறது. வாராக்கடன் அதிகம் உள்ளது ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை
மக்களுக்கு வழங்கிய ஷிக்சு பிரிவு ஆகும். “ஹரியானா முதல்வர் தேவிலால் இதுபோன்ற திட்டத்தை
மாநிலத்தில் அமுல்படுத்தி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதிலிருந்து இந்திய அரசு இன்னும்
பாடம் கற்கவில்லை” என்கிறார் பொருளாதார கொள்கை ஆலோசகர் தேவிந்தர் சர்மா.