கங்கையை அழிக்கும் அரசியல்!


கங்கை ஏன் அழுகிறாள்? –


Image result for ganga


பாஜக அரசு இந்தியாவுக்கு வரும் பல்வேறு வெளிநாட்டு அதிபர்களுடன் கங்கைக்கு பயபக்தியாக ஆரத்தி எடுத்து ரூ.4 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை செயல்படுத்தினாலும் முன்பைவிட கங்கையின் மாசுபடும் அளவு அதிகரித்து வருவது முகத்திலறையும் நிஜம். குடிக்க, குளிக்க, வீட்டுப்பயன்பாடு என எதற்கும் லாயக்கில்லாத நீராக கங்கை மாறியுள்ளதற்கு என்ன காரணம்? இயற்கை கெட்டாலும் வணிக பெருக்கும் பேராசை லட்சியம்தான்.  

அண்மையில் பேராசிரியரும் சுற்றுச்சூழலியலாளருமான  ஜி.டி.அகர்வால், கங்கையை சுத்தப்படுத்த அரசை வற்புறுத்தி 112 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தது அரசின் கண்முன்னே நடந்த அவலம். மக்களின் நலன்களைப் பற்றி கவலைப்படாத அரசு, குற்றுயிராக துடிக்கும் நதிக்காக மட்டும் என்ன செய்துவிடும்? ரூ.5 ஆயிரத்து 523 கோடி ஒதுக்கப்பட்ட கங்கைக்கான நிதியில் 2014-18 வரையில் ரூ.3 ஆயிரத்து 867 கோடிரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலை பெருக்கம் காரணமாக கங்கை நீரிலுள்ள ஆக்சிஜன் அளவு(DO) தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் விளைவாக, இதில் வாழும் மீன்கள், தாவரங்கள் அனைத்தும் அழிந்து வருகின்றன. ஒரு லிட்டர் நீரிலுள்ள வேதிப்பொருட்களின்(BOD) அளவு 3 மில்லிகிராமுக்கும் குறைவாகவும், ஆக்சிஜனின் அளவு 4 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம். வேதிப்பொருட்களின் அளவு 3 மி.கி தாண்டினால் வீட்டுபயன்பாட்டுக்கு தகுதியானது அல்ல; மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2 ஆயிரத்து 525 கி.மீ நீள கங்கையில் 82 இடங்களில் சாம்பிள் எடுத்து சோதித்து அறிக்கை தயாரித்து மாசுபாட்டை உறுதிபடுத்தியுள்ளது.

கங்கை உருவாகி வரும் கங்கோத்ரி, ருத்ரபிரயாக், தேவபிரயாக், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் வேதிப்பொருட்களின் அளவு 1 மி.கி/லி ஆக்சிஜன் அளவு 9-10 மி.கி/லி என உள்ளது. வாரணாசி, அலகாபாத், ராஜ்மஹால், பாட்னா, தக்ஷினேஷ்வர், ஹௌரா என கங்கை பாய்ந்து செல்லும் இடங்களில் மாசுபடுதல் அளவு அதிகரிப்பதை ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன.

2015 ஆம் ஆண்டு மட்டும் பாஜக அரசு, ரூ.22 ஆயிரத்து 238 கோடி மதிப்பிலான 221 திட்டங்களை கங்கையை தூய்மைப்படுத்துவது, தொழிற்சாலை மாசுகளை அகற்றுவது, மரக்கன்றுகளை நடுவது ஆகியவற்றை முன்வைத்து தொடங்கினர். இதில் வெறும் 26 திட்டங்களே நிறைவடைய, 67 திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. கடந்தாண்டு வெளியான சிஏஜி அறிக்கையும் கங்கை தூய்மை திட்டத்தின் நம்பகத்தன்மையை(NMCG) கேள்வி எழுப்பியுள்ளது. புனித நதியான கங்கையும் இறுதியில் வணிகத்திற்காக நம்கண்முன் பலியாக வாக்களித்த குற்றத்திற்காக ஊமை சாட்சியாக அதனை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

- ச.அன்பரசு
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா

பிரபலமான இடுகைகள்