காந்தி: மனிதர் மகாத்மா ஆனார்!
1916 ஆம் ஆண்டு . உலகமே கிறிஸ்துவஸ் கொண்டாட பொருட்களை வாங்கியபடி இருந்தது. லக்னோவில் அப்போது பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. அங்கிருந்த ரிஃபா ஆம் கிளப்பில் காங்கிரஸ் கட்சியின் 31 ஆவது மாநாடு நடைபெற்றது. அதில் தங்களுக்கு நீதிகிடைக்க யாராவது பேசமாட்டார்களா என்ற ஆதங்கத்தில் பீகாரின் சம்பரானிலிருந்து வந்த விவசாயிகளும் அடக்கம்.
விவசாயிகளை அங்கு கூட்டிச்சென்றவர் வழக்குரைஞரான ராஜ்குமார் சுக்லா. அவரோடு அவரின் நண்பர்களான பிராஜ்கிஷோர் பிரசாத், சான்ட் ரௌத், பீர் முகமது முனிஸ், ஹர்பன்ஸ் சகாய், மற்றும் கணேஷ் ராம் ஆகியோரும் வந்திருந்தனர்.
காங்கிரஸ் தலைவர் மதன்மோகன் மாளவியா விவசாயிகளை காந்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். "பிரிட்டிஷ்காரர்கள் அவுரி பயிரிடச்சொல்லி செய்யும் அடக்குமுறைகளால் எங்கள் கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறிவிட்டனர். எங்களிடமிருந்த கால்நடைகளும் வெகுசொற்பமாகிவிட்டன" என தன் அவலத்தை சொல்லி சுக்லா கரைந்தழுதார். நான் அந்த இடத்தை பார்த்தபிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என காந்தி தீர்மானமாக சொல்ல, சுக்லா, அதற்கு ஒரு நாள் செலவிட்டால் போதும் என்றார். பின் காந்தியிடம் விடைபெற்ற சுக்லா, காந்தியிடன் தேதி கேட்க சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தார்.
ஆனால் காந்தி கொல்கத்தாவில் உள்ள பூபென் பாபவின் வீட்டிற்கு கிளம்பினார். ஆனால் அங்கு முன்னரே வந்து காத்திருந்த சுக்லா, அவரை சம்பரானுக்கு அழைத்து சென்றார்.
சம்பரான் பகுதியில் அவுரியை விளைவித்த ஆங்கிலேயர்கள் அதனை மிக குறைவான விலைக்கு விற்க விவசாயிகளை வற்புறுத்த விவசாயிகள் கடன்வலையில் சிக்கினர். பலரும் ஆங்கிலேயரின் வரிகளை தாங்கமுடியாமல் ஓட்டம் பிடித்தனர். அதையும் மீறி வழக்கு தொடர்ந்தால் ஆங்கிலேய அரசின் ஆசி பெற்ற நீதிமன்றங்கள் உரிய நீதியை வழங்கி விடுமா என்ன?
காந்தி சம்பரான் போராட்டத்தில்தான் அப்பகுதியில் தீவிரமாக கடைபிடிக்கப்படும் தீண்டாமையை ஆன்மாவில் ஆழமாக உணர்ந்தார். இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவரான ராஜேந்திர பிரசாத்தை காந்தி சம்பரானில்தான் சந்தித்தார். ஆனால் காந்தியின் வருகை அங்குள்ள ஆங்கிலேய அதிகாரிகளுக்கு பதட்டத்தை தர, அவரை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டனர். மீறினால் சிறை என மிரட்ட காந்தி அதை அலட்சியம் செய்தார். பின்னர் காந்தி சட்டத்திற்கு உட்பட்டு மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜராக பின்னணியில் ஆயிரக்கணக்கான மக்கள் காந்திக்கு ஜே என முழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது லேவாதேவிக்காரர் சான்ட் ரௌத், காந்தியை மகாத்மா என முதல்முறையாக அழைத்தார். பின்னர் காந்தி சுதந்திரதாகம் மிக்க மக்களுக்கு மகாத்மாவாக தெரியத் தொடங்கினார்.
நீதிமன்றத்தில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதாரங்களை வழக்குரைஞர்களான ராஜேந்திர பிரசாத், பிரஜ்கிஷோர் பிரசாத் எடுத்து வைக்க, காந்தி தண்டனையை ஏற்கிறேன் என்று கூற நீதிபதிக்கு தலையே கிறுகிறுக்க காந்தியை விடுதலை செய்தார். இடைக்கால கமிஷன் உருவாக்கப்பட்டது. காந்தி அங்கு கல்வி மையங்கள் அமைத்தார். சுகாதார திட்டங்களை தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தார். இந்த வெற்றி அகிம்சை மீதான நம்பிக்கையை காந்தியிடம் ஆழமாக உருவாக்கியது.
தமிழில் ச.அன்பரசு
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்