எம்.முகுந்தனின் தாய்ப்பால் எப்படி? - புத்தகத்திருவிழா 2019 ஸ்பெஷல்




Related image





புத்தக விமர்சனம்

தாய்ப்பால்

மலையாள மூலம்: எம்.முகுந்தன்
தமிழில்: தி.சு. சதாசிவம்

சாகித்திய அகாதெமி


எம்.முகுந்தனின் கடவுளின் குறும்புகள் என்ற நூலை மட்டுமே முன்னர் படித்த நினைவு. ஆனால் இச்சிறுகதைகள் வேறு ரகம். இருபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் நேரடியான கதை சொல்லும் முறை போல படிக்கும் போது தோன்றும். இடையில் அப்படியே கதையை மூடுபனியாக சில உணர்ச்சிகள் மறைக்க வாசகனுக்கு எழும் திகைப்புதான் முகுந்தனின் வெற்றி .

தாய்ப்பால் கதை தரும் திகைப்பு வேறுவிதமானது. சிறுவனுக்கு பாலூட்டி, குழந்தைக்கும் பால் கொடுப்பதால் தாயின் உடல்நலம் கெடுகிறது. மருத்துவர் இது தவறான அணுகுமுறை என தடுத்தும் அம்மாவின் பாசம் அனைத்தையும் வெல்கிறது. ஆனால் கணவருக்கு பாசவெறியின் இறுதிக்கட்டம் கண்ணில் தெரிய மகனை தனியறையில் அடைத்து தாய்ப்பால் வெறியை தணிக்க முனைகிறார். என்ன ஆனது என்பது திகைக்க வைக்கும் இறுதிப்பகுதி. தொகுப்பிற்கு தாய்ப்பால் என்பது ஏன் பொருத்தமான பெயர் என அதிலேயே தீர்மானித்து கொள்ளலாம்.


புகைப்படத்தின் மையம் இன்றைய மீடூ காலத்திற்கு முன்பே எழுதப்பட்ட அதிரடி கதை. புகைப்படம் எடுக்கும் ஆசை சிறுமியை எப்படி பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்குகிறது என நைச்சியமான சொற்களில் வர்ணிக்க வயிற்றுக்குள் அமிலம் பரபரவென சுரக்கிறது. பெண் குழந்தைகளை எப்படி கழுகுகள் வேட்டையாடுகின்றன என்பதை நிதானமான எழுத்துக்களின் முகுந்தனால்தான் எழுத முடியும்.

இயல்பான கதையில் திடீரென புனைவு புக, கதைக்குள் கதை என பாயும் எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு கனவா, நிஜமா என திகைக்க வைக்கிறது. அவர்கள் பாடுகின்றனர், புரட்சியும் காமமும்  ஆகிய கதைகள் இவ்வகையில் வரும்.

தலைப்பு கிடக்கிறது என பார்த்தால் பாலச்சந்திரன் பயணம் செய்து சாப்பிடாமல் இறப்பது, வெளிநாட்டில் தோழியைச் சந்திக்க சென்று வாழ்வை இழக்கும் முதியவர், ரயிலில் சந்தித்த கல்லூரி மாணவரை காதலித்து வாழ்வை ரோலர் கோஸ்டராக்கிய பெண்மணி ஆகிய கதைகளை படித்தால் கதை முடிந்தபின்னர் மற்றொரு கதை அதைவிட வேகமாக நம் மனதில் தொடங்கும். எம்.முகுந்தனைத் தேர்ந்தெடுக்க இது ஒரு முக்கியமான காரணம்.

ஆங்கில நாவல்களை படிப்பவர்கள், முகுந்தனை எளிதாக நிராகரிக்க காரணமாக மாறுவது அவரின் இயல்பில் புனைவை புகுத்தி அதனை மறக்க வைப்பதுதான்.

இயல்பில் புனைவு புகுந்து புது சூழ்நிலையை உருவாக்கி உணர்ச்சிகரமான சூழலில் கதை முடிவது தொண்டையில் மீன் முள் மாட்டியது போன்ற தவிப்பை உருவாக்கிவிடுகிறது. தவிப்பில் தொடங்கி நடுவில் சந்தோஷத்திற்கான சூழலை உருவாக்கி அதை ஓங்கி தரையில் அடித்து உடைத்தால், முகுந்தன் அதனை மகிழ்ச்சியாக அதிவேகமாக செய்கிறார். அதிர்ச்சியில் கண்ணீர் சிந்துவது வாசகர்கள்தான்.

புதிய அனுபவங்கள் தேவை என்பவர்கள் நிச்சயம் முகுந்தனைத் தேர்ந்தெடுக்கலாம். இவரின் வாசிப்பும் கதையில் பல்வேறு பரிசோதனைகளுக்கு உதவியிருக்க கூடும். வாசகர்களை ஏதோவொரு இழையில் எழுத்தாளர் தொடுகிறாரா என்றால் முகுந்தன் அதனை தன் ஒவ்வொரு கதையில் மாறாமல் செய்கிறார்.
நூலை வாசித்தபின் அதனை நீங்களே உணர்வீர்கள்.

கா.சி.வின்சென்ட்

சென்னை புத்தகத்திருவிழா 2019, நந்தனம்  YMCA

நன்றி: ரமேஷ் வைத்யா, விவேகானந்தா காபி ஸ்டால்