இந்துவின் பொங்கல் மலர் எப்படியிருக்கு? ஜாலி அலசல்



Image result for இந்து பொங்கல் மலர் 2019




இந்து தமிழ்திசை வழங்கும்

பொங்கல் மலர் 2019

ரூ.120



பொதுவாக பொங்கல் மலரில் எதுவெல்லாம் இருக்குமோ அதை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு படைப்பாளர்கள், கலைஞர்களின் ஸ்பெஷலாக பொங்கல் மலரை கொண்டு வந்துள்ளது இந்து தமிழ் திசை.

கருப்பசாமி அருவா 40 அடி, கோவில்பட்டி இனிப்பு மிட்டாய் என ஜவ்வு மிட்டாயாக எழுதி வைக்காமல் விடுதலை அளித்ததற்கு ஆசிரியர் அசோகனுக்கு ரைட் ஹேண்டில் வணக்கம் வைக்கலாம்.

இதழின் சிறப்பாக  புதிய தலைமுறை இயக்குநர்களை நம்பிக்கையுடன் அறுவடைத் திருவிழா அன்று அறிமுகப்படுத்தியதை சொல்லலாம். இதில் விக்ரம் சுகுமாறன், பிரசாத் முருகேசன் பற்றிய பதிவுகள் பிரமாதமாக இருந்தன. தேடல் புதிது, எழுத்து புதிது பக்கம், விரைவில் இந்து இலக்கிய இதழைக் கூட வெளியிடுவார்களோ என்று எண்ணும் படி தரமாக இருந்தது.

காந்தி பிறந்து 150 ஆண்டுகளானதை ஒட்டி அவர் குறித்த சிறிய பக்கங்களை ஒதுக்கியது மகாத்மாவுக்கு பொங்கல் நாள் முன்னோர் மரியாதை.

பட்டம்மாள், பால சரஸ்வதி ஆகிய இரு ஆளுமைகளுக்கும் நூறாவது ஆண்டு அஞ்சலியாக பத்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். நேர்த்தியான பணி.

பொங்கல் பற்றிய நினைவுகளை சொல்லுவதில் வடசென்னைப் பொங்கல் புதிது. பாரத தேவி, கண்மணி குணசேகரன், கி.ச.திலீபன் ஆகியோரின் கட்டுரைகள் பொங்கலுக்கான கருப்பட்டி மிட்டாய்.

இலக்கியம்தான் இந்து பொங்கல் மலரின் ஸ்பெஷல் ஏரியா. போகனின் ராணி கிளினிக் பகடியாக மாமாவின் வாழ்க்கை பற்றி பேசி சுவாரசியமாக்குகிறது.

இதற்கு நேர்மாறாக, நகரத்தில் சாதி அடையாளத்தை இழந்து நிம்மதியாகும் பெருமையை அரக்கு கலர் சட்டையும் மஞ்சள் கலர் டவுசரும் கதை(ஆகாச முத்து) பேசுகிறது. இக்கதை சாதியைப் பேசுகிறது என்றால் ஷீலா ராஜ்குமார் மேங்கோ மிட்டாய் மூலம் மாதவிடாய் எப்படி பெண்களை ஒடுக்க கொடூர ஆயுதமாகப் பயன்படுகிறது என எழுதியிருக்கிறார்.

பள்ளிச்சூழல் என்பது ஆசுவாசம் தந்தது. மற்றபடி எழுத்தில் பெரிய ஆர்வமாக படிக்கும் விஷயங்கள் இல்லை.

புகல் - இலங்கையின் பின்னணியைக் கொண்டது. அப்போது புலிகளும், சிங்கள ராணுவமும் இல்லாமலா? போர், அதன் விளைவுகள், அங்கிருந்து தப்பிச்செல்பவரின் நிலை ஆகியவற்றை அகரமுதல்வன் திகுதிகு வேகத்தில் எழுதிச்செல்கிறார். படிக்க படிக்க போரின் பீதி, ஷெல் அடிக்கும் திகில் மனதில் படிவது கதையில் வெற்றி.

கொடியேற்றம் கதை(சாம்ராஜ்), சமூகம் நம்பும் அனைத்தும் உடைத்தெறியும் அருளின் கதாபாத்திரம் மரபு மனங்களுக்கு ஆபத்தாகவே தெரியும். பலரும் பயப்பட்டு பம்பும் மனங்களுக்கு அருள் புரட்சிக்காரன்தான்.  தொழிற்சாலையில் அருள் செய்யும் அலம்பல்களுக்கு உதவி புரியும் தொழிலாளர்கள் வழியாக இதனை எழுத்தாளர் நமக்கு புரிய வைக்கிறார்.

புதிய இளம் எழுத்தாளர்கள் இதில் கட்டுரைகள் எழுதவில்லை என்பது பெரும் குறை. மற்றபடி இந்துவின் பொங்கல் மலர் ஸ்டான்டர்டாக பொங்கல்தான்.


- கோமாளிமேடை டீம்
நன்றி: ஆதவன்












பிரபலமான இடுகைகள்