வறுமையின் எல்லைக்கோடு மறைகிறதா?




Related image




வறுமையின் எல்லைக்கோடு மறைகிறதா?

 இந்தியா விரைவில் மக்களின் வறுமை நிலை குறித்த ஆய்வறிக்கையை  வெளியிட உள்ளது.

இந்திய மக்களின் பொருளாதாரம், பெருமளவில் விவசாயம் மற்றும் அதன் துணைத்தொழில்களைச் சார்ந்தே உள்ளது. விவசாயம் இயற்கைப் பேரிடர், நீர்வளம் குறைவு, நிலவளம் போதாமை மற்றும் அரசுகளின் திட்டச்செயலின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. விவசாயத்தை மீட்க இந்திய அரசு நலிந்த விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவருகிறது. மானிய உதவிகள், பயிர்காப்பீட்டுத் திட்டம், அதிக மகசூலுக்கான கலப்பின பயிர்கள் உருவாக்கம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.

சுடும் வறுமை

மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்திய அரசு பல்லாயிரம் கோடி செலவழித்தாலும் அதற்கான பலன்களை பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. உலகவங்கி இந்திய அரசுடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு இந்திய மக்களின் வறுமைநிலை குறித்த அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டது. அதில் 28.6 கோடிப்பேர் வறுமை நிலையில்  தத்தளிப்பதாக தெரிய வந்தது. இப்பிரிவினரின் தினசரி வருமானம் தோராயமாக 135 ரூபாய் மட்டுமே.

”நடப்பு ஆண்டின் ஜூனில் இந்திய அரசு தாக்கல் செய்யவிருக்கும் வறுமை நிலை ஆய்வு அறிக்கையில் ஏழைமக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எட்டு ஆண்டுகள் இடைவெளியில் அரசு நிறைவேற்றிய பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஏழ்மை நிலையை மாற்றி இருக்கும்” என நம்பிக்கை தெரிவிக்கிறார்  இந்தியாவின் தலைமை புள்ளியியல்  ஆய்வாளரான பிரவீன் ஸ்ரீவஸ்தவா.

எப்படி கணக்கிடுவது?

இந்தியர்கள் தினசரி வாங்கும், பயன்படுத்தும் பொருட்களிலிருந்து இந்திய அரசு அவர்களின் பொருளாதார நிலையைக் கணக்கிடுகிறது.

உலக வங்கியின் தகவல் ஆய்வகம், உலகம் முழுக்க உள்ள பொருளாதார நிலைகளை ஆராய்ந்து வறுமை நிலை குறித்த ஆய்வறிக்கைகளை கவனமுடன் தயாரித்து வழங்குகிறது. இந்தியாவில் முதல் வறுமை குறித்த அறிக்கை வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், புதிய அறிக்கையில் ஏழை மக்களின் எண்ணிக்கை தோராயமாக 5 கோடிக்கும் குறைவாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

”வெளிவரும் அறிக்கையில் இந்திய மக்களிடையே நிலவும் கொடூர வறுமைநிலை குறைந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. 2004-05 காலத்தை விட மக்களின் பொருளாதாரம் மேம்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது” என்கிறார் பேராசிரியர் என்.ஆர்.பானுமூர்த்தி.
நலம் தரும் அரசு திட்டங்கள்!
விளைவித்த பொருட்களுக்கு சரியான விலை, கடனுதவி, பயிர்கள், உரம் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாக விவசாயம் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெறும் விவசாயப் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்திய அரசு, இதற்காக மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத்திட்டம், பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா உள்ளிட்ட திட்டங்களைத் தீட்டி கிராம மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தையேனும் அளிக்க முயற்சித்து வருகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வறுமை குறித்த ஆய்வறிக்கை தாமதமாக வெளியாக முக்கியக் காரணம், மாறி வரும் அரசுகள் இதில் காட்டும் அலட்சியம்தான்.


"அரசின் பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் கிராம மேம்பாட்டுத் திட்டங்கள் சரியானபடி மக்களைச் சென்று சேர்ந்திருந்தால் வறுமை நிலை  3 சதவீதமாக குறைந்திருக்கும். வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 4 கோடியாகக் குறைந்திருக்கும்” என உறுதியாகப் பேசுகிறார் முன்னாள் புள்ளியியல் துறை ஆய்வாளரான பிரனாப் சென்.

இந்தியாவின் லட்சியம் 2030 க்குள் இந்தியாவின் வறுமையில் துயரப்படும் மக்கள் இருக்கக்கூடாது என்பதே. இதன்மூலம் ஏழைநாடுகள் பட்டியலிலிருந்து இந்தியா வெளியேறும் நல்வாய்ப்பு கிடைக்கலாம்.

நன்றி: தினமலர் பட்டம், டைம்ஸ் ஆஃப் இந்தியா