தடுப்பூசிக்கு எதிர்ப்பு? - என்னாகும் உலகின் நிலை?




Image result for தடுப்பூசி




அண்மையில் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசிகளை எதிர்க்கும் குழுவினரின் நடவடிக்கைகளை வேதனையுடன் சுட்டிக்காட்டியது. தடுப்பூசிக்கு எதிரான வதந்திகள் எதிர்காலத்தில் தொற்றுநோய்களை தடுப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தும் என உலக நாடுகளை எச்சரித்துள்ளது. நாடுகளுக்கு மக்களின் வதந்தி பிரசாரங்களோடு, நுண்ணுயிரிகளின் பரிணாம வளர்ச்சி அபாயம், மாசு, வெப்பமயமாதல் ஆகியவற்றையும் எதிர்கொள்ளும் தேவை உள்ளது. இதில் முக்கியமானது, யதார்த்த நிலைமையை மக்களுக்கு புரியவைப்பதுதான்.

தடுப்பூசிக்கு எதிர்ப்பு!

கி.மு. பத்தாம் நூற்றாண்டில்  சீனாவில் சாங் மன்னரின் ஆட்சி நடந்தபோது, அந்நாட்டில் தடுப்பூசிகள் அமலில் இருந்துள்ளன. பின்னர், 1763 ஆம் ஆண்டு தடுப்பூசியை பிரான்ஸில் மருத்துவர் கட்டி(Gatti) அறிமுகப்படுத்தினார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தடுப்பூசிகளுக்கு எதிராக இங்கிலாந்தைச் சேர்ந்த ரெவரெண்ட் எட்மண்ட் மாசே (Edmund Massey), ”இறைவனின் தீர்ப்புக்கு எதிரானது தடுப்பூசிகள் என பிரசாரம் செய்தார். இவரைப் பின்பற்றி தடுப்பூசிகளுக்கான எதிர்ப்பியக்கம் இங்கிலாந்தில் வேரூன்றியது.

1796 ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னரால் கண்டுபிடிக்கப்பட்ட சின்னம்மை தடுப்பூசி, மருத்துவ வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது.  1853 ஆம் ஆண்டு அமலான கட்டாய தடுப்பூசிச் சட்டம் 3 மாத குழந்தையிலிருந்து 14 வயது சிறுவர்கள் வரை தடுப்பூசியைப் பெறுவதை கட்டாயமாக்கியது. தடுப்பூசியை மறுப்பவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக  தடுப்பூசிகளைத் தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை என்ற கோஷத்துடன் தடுப்பூசிக்கு எதிரான குழுவினர் போராடினர்.
அமெரிக்காவில் 1879 ஆம் ஆண்டு தடுப்பூசிக்கு எதிரான சங்கம் உருவானது. தனிநபர் உரிமை, தடுப்பூசியின் பக்கவிளைவுகள், அதிலுள்ள நச்சுகள் ஆகியவற்றை குறித்து இந்த அமைப்பினர் பிரசாரம் செய்கின்றனர். 1924 ஆம் ஆண்டு தொடங்கி தட்டம்மை, போலியோ, டைபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றைப் பெற்று பல்வேறு நாட்டு அரசுகள் மக்களுக்கு வழங்கி நோய் பாதிப்புகளை குறைத்து வருகின்றன.

அபாய வதந்திகள்!

போலியோ, பிளேக், அம்மை ஆகிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றி 2.1  கோடிக்கும்  மேற்பட்ட மக்களின் இறப்பைத் தடுத்துள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பதினேழு ஆண்டுகளில் 80 சதவீத தொற்றுநோய் மரணங்கள் குறைந்தன என்பது ஆய்வு உண்மை. அண்மையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வில் மக்களுக்கு தடுப்பூசிகள் மீதான நம்பிக்கை சரிந்துவருவது தெரியவந்துள்ளது.  2017 ஆம் ஆண்டு உலக சுகாதார மையம் செய்த ஆய்வில் பல்வேறு நாடுகளில் தட்டம்மை பரவல்(30%) அதிகரித்து வருவது தற்செயலான நிகழ்வல்ல.

 ஆண்டுதோறும் உலகில் தொற்றுநோய் பாதிப்புக்கு வாய்ப்புள்ள முப்பது லட்சம் வாழ்வை தடுப்பூசிகள் காப்பாற்றி வருகின்றன. நோய்களுக்கு ஏற்ப கூட்டு மருத்துவ சிகிச்சைகளை மக்கள் தேர்ந்தெடுப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் தடுப்பூசியின் பயன்களை முற்றாக மறுத்து ஆராய்ச்சி வளர்ச்சி இல்லாத மருத்துவமுறைகளின் பின்னே மக்கள் பயணிப்பது அடுத்த தலைமுறைக்கு பேரழிவை ஏற்படுத்தும்.


தகவல் உதவி: https://www.historyofvaccines.org/content/articles/history-anti-vaccination-movements
https://measlesrubellainitiative.org/anti-vaccination-movement/

நன்றி: தினமலர் பட்டம்



பிரபலமான இடுகைகள்