பத்ம விருது கௌரவம்!
இந்திய அரசு, குடியரசு தின விழாவில் நூற்று பனிரெண்டு நபர்களுக்கு பெருமைக்குரிய பத்ம விருதுகளை அறிவித்துள்ளது
பத்ம விருதுகள் 1954 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசால் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் மட்டுமே இருந்ததன. பின்னர் அடுத்த ஆண்டு ஜன.8 அன்று பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இதனுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டன.
பாரத ரத்னா விதி!
விருதுப் பரிந்துரைகளை பிறர் அல்லது நாமே சுயமாக பரிந்துரைத்து இந்திய அரசுக்கு அனுப்பலாம். இதில் பாரத ரத்னா விருது மட்டும் இந்திய பிரதமர் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்து வழங்குகிறார். இதுவரை 45 பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஓராண்டுக்கு மூன்று பாரத ரத்னா விருதுகளை மட்டுமே வழங்க முடியும்.
பத்ம விருதுகளை ஆறுபேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கிறது. இந்தியப் பிரதமரை தலைவராக கொண்ட இக்குழுவில் உள்துறை செயலர், குடியரசுத் தலைவரின் செயலர், கேபினட் செயலர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள்.
அண்மையில் இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுப்பட்டியலில் 12 விவசாயிகள், 14 மருத்துவர்கள், 9 விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கும் இடமுண்டு. 50 ஆயிரம் பரிந்துரைகளிலிருந்து 112 நபர்களை சமூகத்தின் பல்வேறு துறைகளிலிருந்து இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இம்முறை தன்னலமற்ற சேவையாளர்கள் பலர் விருது பெற்றுள்ளது விருதுக்கு சிறப்பு.
விவசாயிகளுக்கு விருது!
இதில் இந்தியாவிலுள்ள 9 மாநிலங்களிலிருந்து பனிரெண்டு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் காளான் விவசாயி கன்வால்சிங் சௌகான், காலிப்ளவர் விவசாயி ஜக்தீஸ் பிரசாத் பரிக், காரட் விவசாயி வல்லபாய் வஸ்ராம்பாய் மர்வானியா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதோடு விவசாயத்தில் அறிவியல் நுட்பங்களை புகுத்திய ராம் சரண் வர்மாவுக்கும் பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு ஏழு விருதுகள்!
தமிழகத்தின் சினிமா, விளையாட்டு, மருத்துவம் என துறை சார்ந்து ஏழு நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் அறியப்படாத முகங்களைப் பார்ப்போம். இதில் மதுரை சின்னப்பிள்ளை என்ற பெண்மணி, களஞ்சியம் என்ற நிதி அமைப்பைத் தொடங்கி கிராமத்தினருக்கு நுண்கடன்களை வழங்கி சாதனை செய்துள்ளார். அடுத்து, மருத்துவர் ராமநாதன் வி ரமணி என்பவர் கண் மருத்துவர். சங்கரா ஐ பவுண்டேஷனை நிறுவி சிகிச்சைகளை செய்துவருகிறார்.
ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த ராமஸ்வாமி வெங்கடஸ்வாமி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு கழகத்தை நிறுவி சாதித்தவர்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர் பட்டம்