இதயத்தைக் காப்பாற்றும் டெக்னிக் என்ன?
SF |
இதயத்தை காப்பாற்றுவோம்!
1976 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கு மறக்கமுடியாத ஆண்டு. அந்த ஆண்டுதான் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் மைக்கேல் டேவிஸ், இதயத்தில் ஏற்படும் ரத்த அடைப்பு பற்றி கண்டுபிடித்தார். இதன் விளைவாக பல்லாயிரம் இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். கொழுப்பு படிந்து ரத்தக்குழாய் அடைத்துக்கொள்வது, அதனை சரி செய்வது, ஆக்சிஜன் போதாமை, ரத்தக்குழாய் அடைப்புக்கான புதிய கண்டுபிடிப்புகள் என மருத்துவத்துறை யோசிக்கத் தொடங்கியது அப்போதுதான்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதயக்குழாய்களில் கெட்ட கொழுப்பு படிந்து இறப்பு நேரிடும் அளவு, நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. இன்று என்ன மாறியிருக்கிறது. பெரியளவு மாற்றமில்லை. இன்றும் கூட இங்கிலாந்தில் ஏழுபேர்களுக்கு ஒருவர் என்ற அளவில் இதயநோய் மனிதர்களை தின்று வருகிறது.
அடுத்தகட்ட ஆராய்ச்சிகள்
”இதயநோய் ஆராய்ச்சியில் நாம் போகவேண்டிய தொலைவு அதிகம். இதில் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான மெடின் அவ்கிரன்.
இதயத்தில் ஸ்கேன் செய்வது, ஸ்டென்ட் வைப்பது, அறுவை சிகிச்சை என நோய்க்கு ஏற்றபடி சிகிச்சைகள் க்யூ கட்டி நிற்கின்றன. என்ன அதற்கேற்ப காசு கட்டி சிகிச்சை செய்வதுதான் சிக்கல்.
தற்போது இதயத்தில் கொழுப்புகள் சேர்வதை முன்கூட்டியே தடுக்கும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.
கணக்கு போட்டு காப்போம்
இதயநோய்கள், பரம்பரை நோய் வரலாறு, வயது, கொழுப்பு சதவீதம், ரத்த அழுத்தம், புகைப்பிடிக்கும் பழக்கம், சர்க்கரை வியாதி என பல்வேறு விஷயங்களை மருத்துவர்கள் பதிவு செய்துகொள்வது அடுத்த கட்ட முன்னேற்றம். இதன்மூலம் இத்தனாவது வயதில் குரு வந்துவிட்டார் கல்யாணம் செய்யலாம் என்று ஜோசியர் சொல்வது போல இதயநோய் வந்துவிடும் என மருத்துவர்கள் உறுதி செய்து உற்சாகமாகும் வாய்ப்பு உள்ளது. அதாவது, அதனை தடுக்க முயற்சிக்கும் திட்டங்களுக்காகத்தான்.
கடந்தாண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும், லெய்செஸ்டர் பல்கலைக்கழகமும் செய்த ஆராய்ச்சியில் இதயநோய்க்கான ரிஸ்க் டெஸ்ட் உருவாகியுள்ளது. இதன் விளைவாக மரபணுவை கண்காணித்து இதயநோயைக் கண்டுபிடிக்கலாம்.
சிகிச்சைதான் வந்துவிட்டதே என்று கருதாமல் கவனமான உணவுமுறையை தேர்வு செய்வது இதயநோய் அபாயத்தை தவிர்க்கும். இல்லையெனில் ஆல் ஸ்டோரில் டிஷர்ட்போட்டு தொந்தியை மறைக்க வேண்டி வரும். ஆனால் மாரடைப்பை தடுக்க முடியாது.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்