ட்ராஃபிக் கேரக்டர்கள் - நீங்கள் தினசரி பார்ப்பவை
வண்டியில் ஜாலியாக போகிறீர்கள். வீர விக்ராந்த், அவெஞ்சர், கவாசாகி கூட ஓகே. ஆனால் குறுக்கே ஏவியேட்டரில் கட் அடிக்கும் ஸ்பைக் மண்டையர்கள், ஆக்டிவாவில் சைட் கட்டில் வரும் மயிலை மாமா, ரன்வேயில் டயர்களை மேலே தூக்காமல் செல்லும் விமானம் போல செல்லும் சுடிதார் சிங்காரிகள், சைக்கிளில் டிஸ்கவரியின் பியர் கிரில்ஸ் செய்யாத சாகசங்களை செய்யும் பையன்கள் என சென்னை ஒரு வேடிக்கை நகரம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் அப்படி பதிவு செய்த சில கேரக்டர்கள் உங்களுக்காக
இன்னோவா எமன்
உலகிலேயே மக்கள் அதிகம் பயப்படுவது ஜிஎஸ்டிக்குத்தான் என நினைப்பீர்கள். இன்னோவாவுக்கும் முக்கிய இடமுண்டு. சாலையில் கணிக்க முடியாதவை அரசு பஸ், தண்ணீர் லாரி, ஆட்டோ அதற்கடுத்த இடம் இன்னோவாவுக்குத்தான். இட்லி தின்ற அமர முதல்வருக்கு பிடித்த வாகனம் என்பதாலோ என்னவோ எந்த சிக்னலிலும் நிற்பதற்கு பிடிப்பதில்லை. வேகம்தான். இன்னோவா வருகிறது என்றாலே அனைவரும் உறைந்து நின்றுவிடுகிறார்கள். நான் கூட பிரசவ அவசரத்திற்குத்தான் ஓட்டுகிறார்கள் என வெகுளியாக நம்பியிருந்தேன்.
ஹார்ன் அடி ரூட்டைப் பிடி
ஈரோட்டில் உள்ளூர்காரர்கள் டிரைவராக வேலை பார்க்கிறார்கள். நம்மை ஊர்க்காரர்களுக்கு நிரூபிக்க வேண்டும் அல்லவா? ஒரே வழி, ஊர் நெருங்கியதும் பம்பர பம்பர பாம்..ம்..ம் என ஹாரனை காலில் வைத்து தேய்ப்பது. உடனே ஊரே உஷாராகி மண்ணின் மைந்தனை அடையாளம் கண்டு கொள்ளும். இதற்கு தமிழ்நாட்டின் சென்னையும் விதிவிலக்கல்ல.
எஸ்யூவி, வேன், பஸ் என மூவரும் பூமியிலுள்ள எந்த போக்குவரத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்களல்ல என அவர்களே நம்புகிறார்கள். அதற்காகத்தான் ஊரே கூடி சொர்க்கவாசல் திறப்பு போல ட்ராஃபிக் சிக்னலைப் பார்த்துக்கொண்டிருப்போம். பச்சை விழுமா என்று. ஆனால் இவர்கள் பாம்... என காசு செவ்வு உடலிலிருந்து சில செ.மீ சென்று விழும்படி ஹாரன் அடிப்பார்கள். எப்படி சமாளிப்பது, திருப்பி நாமும் அவர்களுக்கு ஹார்ன் அடித்து நிரூபித்து காட்டுவோம் யாருடைய ஹார்ன் சத்தம் பெருசு என்று.
கட் அடி த்ரில்லா இரு!
மயிலாப்பூர் முதற்கொண்டு பெருங்குடி வரை இந்த கட் அடிக்கும் கேங் பல இடங்களிலும் உண்டு. மெயின் ரோட்டுக்கு பல சந்துகளில் ரூட்டைப் பிடித்து வருபவர்கள் சடாரென சங்கமமாகி அங்கிள், ஆன்டிகளின் ரத்த அழுத்தத்தை சில டிகிரி ஏற்றுவார்கள். அதிலும் நான் செஞ்சதுதான் கரெக்ட் என்ற முகபாவத்துடன் வீராப்பாக செல்லும்போதுதான் தெறி கோபம் வரும். கட் அடிக்கும்போது அருகிலுள்ள வண்டி பிரேக் பிடிக்குமா, காம்போ பிரேக் இருக்குதா என தெரியாமல் செய்வதால், பலர் 200சிசி வண்டியை காலால் நிறுத்த முயன்று குப்புற விழுந்து மண்டை ஃபேண்டா பாட்டில் போல திறப்பது எல்லாம் நவீன ட்ராஃபிக் துயரங்கள்.
கிசுகிசு மாமாக்கள்!
வண்ணத்திரை ,சினிக்கூத்து முதற்கொண்டு யுவகிருஷ்ணா கமுக்கமாக பேசிச்சிரிக்கும் கிசுகிசுக்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதுதான். ஆனால் அதனை ஆற அமர ரோட்டில் போகும்போது பேசுவதுதான் எரிச்சல். ராமாயணக்கதை பேசினால் ஆபீசில் எந்தப் பெயரில் நான் பர்மிஷன் போட்டு எடிட்டரிடம் தலையைச் சொறிந்துகொண்டு நிற்பது. பி.ஆர். சோப்ரா கால மாமாக்களே, செம்பருத்தி சீரியல் ரசிகர்களே கொஞ்சம் கருணை காட்டி ஒதுங்கி நின்று பேசுங்கள். புண்ணாக்காதீங்க மக்களே.
ஜீப்ரா கிராசிங் ஆன்டி
பெருந்தொடை ஆன்டிகள் எப்போதும் காரில்தான் வருவார்கள். டாமிக்கு இருக்கும் முடிதான் இவர்களின் ஹேர்ஸ்டைல். சுருங்கிய வெண்டைக்காய்க்கு ஃபிரிட்ஜ் எதுக்கு? என்பது போல லிப்ஸ்டிக் கலர் அபாயகரமாக இருக்கும். மேடம் ட்ராஃபிக்கில் பார்த்து பார்த்து நடக்கும் நடைபாதை வரிகளின் மேல் காரை நிறுத்தி பச்சை சிக்னலை பார்த்தபடி இருப்பார். இனி கவலைப்படாதீங்க, கார் மேலே ஏறிக்கூட போகலாம். பிஎம்டபிள்யூ மினிகூப்பர், லேண்டர் ரோவர் என பார்க்காதீர்கள். ஆன்டிகள் இந்த ட்ரீட்மெண்டில் ஐயம் சாரி சஃபரிங் ஃப்ரம் கேட்பார்கள்.
ட்ராஃபிக் சிக்னல்களில் பச்சை மட்டுமே நிறம் என நம்பி பாயும் தொண்டைமான் காளைகள், பெண்களுக்கு ட்ரைவிங் டிப்ஸ் வழங்கும் அம்பிகள், ஹெல்மெட்டை வண்டியில் பத்திரமாக பூட்டிவைத்து மின்னலாக பறக்கும் ஜென் இசட் கிறுக்கர்கள் என நிறையப்பேர் உண்டு.
நன்றி: ரோச்சனா மோகன், படம்: சௌமியாதிப் சின்கா