விவசாயிகளுக்கு மரியாதை - பத்ம விருதுகள் 2019
விவசாயிகளுக்கு மரியாதை
பனிரெண்டு விவசாயிகள் பத்ம விருதுகளை வென்றுள்ளனர். அதில் நான்கு பேர் மரபான விவசாயம் சார்ந்தவர்கள். அதில் கமலா புஜ்ஹாரியும் ஒருவர். இவர் கோரபுட் மாவட்டத்திலுள்ள(ஒடிஷா) தொன்மையான பயிர்வகைகளை காக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட விவசாயி.
இவர் 2002 ஈக்குவடார் இனிசியேட்டிவ் என்ற விருதை தென் ஆப்பிரிக்காவில் பெற்று சாதித்தவர். மாநில திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமை உடையவர்.
பீகாரின் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி தேவி, நிலத்தின் தரத்தை உறுதிசெய்து அதனை நேர்த்தியாக்கும் செயல்பாடுகளை முன்னெடுத்தவர். இவருக்கு பெயரே கிசான் சாச்சி என்பதுதான். 300 க்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழுவை உருவாக்கிய பெருமை கொண்டவர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாபுலால் தாகியா, இரண்டு ஏக்கர் நிலத்தில் நூற்றுபத்து வெரைட்டி பயிர்களை விதைத்தவர். மரபான பயிர்களை 2005 ஆம் ஆண்டிலிருந்து சேகரித்து வருகிறார் பாபுலால் தாகியா. பாடல்களில் மட்டுமே இருந்த பயிர்கள் பெருமளவு அழிந்தாலும் அவற்றை காக்க முயற்சித்து வருகிறார் பாபுலால் தாகியா. விதைக்கான யாத்திரையை அரசின் பல்லுயிர்த்தன்மை போர்டும் அங்கீகரித்துள்ளது. இருபத்து நான்கு மாவட்டங்களில் 1600 வெரைட்டிகளை சேகரித்துள்ளார் பாபுலால் தாகியா.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஹூகும்சந்த் பதிதார், நாற்பது ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து நான்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்த்து வருகிறார். சுவாமி விவேகானந்தா விவசாய ஆராய்ச்சி பண்ணையின் நிறுவனர் இவர். 2004 ஆம் ஆண்டிலிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயத்தில் டெக்னாலஜி இல்லாமலா? வெங்கடேஸ்வர ராவ் யட்லாபள்ளி, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ரைத்துநெஸ்தன் என்ற ஆப்பை உருவாக்கி இயற்கை விவசாயத்தை பிரசாரம் செய்து வருகிறார்.
விளைபொருளை மார்க்கெட்டிங் செய்வது, உரம், ஆலோசனைகள் என அனைத்தும் இதில் உண்டு. இதோடு மண் வளச்சோதனைக்கான நிலையங்கள் எங்கு உண்டு, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பற்றிய தகவல்களும் உண்டு.
- டவுன் டூ எர்த்