இந்திய மாணவர்களுக்கு எகிறும் டென்ஷன்!


Image result for hypertension



 இந்தியாவின் நான்கு மாநிலங்களில் எடுத்த ஆய்வில் மாணவ மாணவியர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இந்திய மாநிலங்களான குஜராத், கோவா, ஹரியானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில்  யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் கார்டியாலஜி பத்திரிகை மாணவ, மாணவியரிடம் செய்த மருத்துவ ஆய்வில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்காக நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 957 மாணவர்களை ஆய்வு செய்ததில் பலருக்கும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. முறையான உடற்பயிற்சி இல்லாததும், உப்பு அதிகமுள்ள நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதும் முதன்மையாக காரணங்கள் என தெரிய வந்துள்ளது. இவர்களின் ரத்த அழுத்த விகிதம் 120/80, 125/85, 135/90 எனும் அளவில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

”தற்போதைய மாணவர்களில் 23 சதவீதத்தினருக்கு அபாய அளவில் ரத்த அழுத்த விகிதம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் கடல் மட்டத்திற்கு மேலேயுள்ளதால் ஏற்படும் பாதிப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதிக ஈர்ப்பதம், வியர்வையால் உடல் தன் இயக்கத்திற்கு தேவையான உப்பை இழக்கிறது” என்கிறார் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான அனிதா சக்சேனா.  இந்த ஆய்வை எய்ம்ஸ் மருத்துவமனை, கோவா மருத்துவக் கல்லூரி, மணிப்பூரின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கழகம் ஆகியவற்றுடன் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையும் இணைந்து செய்துள்ளது.

வெவ்வேறு மாநிலங்களிலுள்ள நிலப்பரப்பு, உணவுமுறை, சாப்பிடும் பழக்கம் ஆகியவை ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம். மணிப்பூர் (29%),ஹரியானா(26.5%), குஜராத்(15%), கோவா(10%) ஆகிய மாநிலங்களில் மாணவ, மாணவியர்க்கு ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்த ஆய்வுகளை நடத்தினால் பின்னாளில் அவர்களுக்கு ஏற்படும் இதயநோய், பக்கவாதப் பிரச்னைகளை தவிர்க்க முடியும். இதில் உணவு குறித்த விழிப்புணர்வும், தினசரி உடற்பயிற்சி என்ற கட்டுப்பாடும் அவசியம் தேவை. 

நன்றி: தினமலர் பட்டம்