வன்முறை குழந்தைகளுக்கு உதவும் ஓவியர்!
குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் கலைஞர்
1996 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிடி ஜெயின், மதுரைக்கு வந்தார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அருகில் பதினான்கு வயதுப்பெண் உட்கார்ந்து பூ விற்றபடி இருந்தார். எதேச்சையாக பேச்சு கொடுத்தபோதுதான் அச்சிறுமி கல்வி அறிவு இல்லாதவர் என்பதும், பகுதிநேரமாக விபச்சாரம் செய்து வருவதும் தெரிந்து அதிர்ச்சி ஆனார் சிடி ஜெயின்.
அன்று உறுதியாக ஜெயின் எடுத்த முடிவினால்தான் அவரைப்பற்றி இப்போது நாம் கோமாளிமேடையில் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறோம். என்ன முடிவு எடுத்தார்? வறுமை, பாலியல் தொழிலாளியாக உள்ள பெண்களுக்கு உதவி விழிப்புணர்வு ஊட்டுவதென. இதன் விளைவாக தான் வரைந்த 550 ஓவியங்களை இதற்காக பயன்படுத்தினார்.
“ தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலுள்ள பாலியல் வன்முறைக்குள்ளான சிறுவர் சிறுமியர்களிடையே பேசி அவர்களது வாழ்க்கையை ஓவியங்களாக்கினேன். அதில் நூறு ஓவியங்களை தேர்ந்தெடுத்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் காட்சிப்படுத்த முயற்சித்து வருகிறேன்” என்கிறார் ஜெயின். மதுரையில் இதற்கான முன்னோட்டத்தை சென்டிமென்டாக தொடங்கியுள்ளார் கலைஞர் ஜெயின்.
குழந்தைகள் காணாமல் போவது, குழந்தை தொழிலாளர், வன்முறை ஆகியவற்றை பேசுபொருளாக கொண்ட ஓவியங்களை தீட்டியுள்ளார் ஜெயின். இவர் சந்தித்து பேசிய சிறுவர் சிறுமியரின் கதைகள் எவரையும் மிரட்டுபவை. பதினாறு வயதான சிறுமியை அவரது தாயே பாலியல் தொழிலுக்கு விற்றுள்ளார். ஏஜெண்ட் அவரை நேராக பாலியல் ஏரியாவுக்கு ஏற்றுமதி செய்ய, அங்கு சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்றியிருக்கிறது. நோய் தொற்றிய சரக்குக்கு சந்தையில் என்ன மதிப்பு? உடனே வீடு வந்தார் சிறுமி. ஆனால் காசு பார்க்கும் ஆசையில் அவரது தாய் மீண்டும் ஏலமிட முயற்சித்தார். சிறுமி வீட்டை விட்டு ஓடிவந்துவிட என்ஜிஓ ஒன்று அரவணைத்து காப்பாற்றியிருக்கிறது. அதன் மூலமாக ஜெயின் சிறுமியிடம் உரையாடி இக்கதையைக் கேட்டு அதிர்ந்து போனார்.
பள்ளிகளில் தன்னுடைய ஓவியங்களை இலவசமாக காட்சிப்படுத்துபவர், செயல்பாடுகளுக்கு தேவையான நிதிக்கு ஓவியங்களை விற்கவும் செய்கிறார். ஓவியங்களைக் குறித்த கட்டுரைப் போட்டிகளையும் நடத்தி வருகிறார். வரும் டிசம்பரில் ஓவியக்கண்காட்சி திட்டம் முடிந்ததும் ஓவியக்கட்டுரைகளை நூலாக்கும் பணியைத் தொடங்கவிருக்கிறார் ஜெயின். நல்லதொரு கலைஞர்.
நன்றி: ஆனந்த் எம்.கே. தி டைம்ஸ் ஆப் இந்தியா