சோதனை ஜெயித்தால் இந்தியா நொறுங்குவது உறுதி!
படம்: தி இந்து |
நேர்காணல்
அசாமின் குடியுரிமைச்சட்ட மசோதா இந்தியாவின் அடிப்படைடையைத் தகர்க்கிறது.
யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியா கட்சி தலைவர்
தமிழில்: ச.அன்பரசு
ஆங்கில மூலம்: பிரீத்திகா கன்னா(லிவ் மின்ட்)
அசாமின் குடியுரிமை சட்ட மசோதாவை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்திய நாடாளுமன்றத்தில் அமலான மசோதாக்களிலேயே பெரும் நாசகர அழிவை ஏற்படுத்தும் மசோதா இதுவே. ஏனெனில் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது இம்மசோதா. மதம் சார்ந்து மக்களை குடியுரிமை பெற வற்புறுத்துவதாக இம்மசோதா அமைகிறது. மதம் பொறுத்து ஒருவரை தீண்டத்தகாதரவராக கருதமுடியாது என்று கூறும் அரசியலமைப்பின் 15 ஆம் பிரிவுக்கு இது எதிரானது.
முஸ்லீம்கள் வாழ்வது பாகிஸ்தான், இந்துக்கள் மட்டுமே வாழ்வது இந்தியா என்ற பொருளை அழுத்தமாக இம்மசோதா ஏற்படுத்துகிறது. ஜின்னா மற்றும் சாவர்க்கரின் சிந்தனைவழியே இச்சட்ட மசோதா செல்கிறது. இவ்வழியில் நாம் நடப்பது குடியரசு நாடான இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றாக அழித்துவிடும். இம்மசோதாவுக்கு எதிராக நிற்பது இந்தியர் ஒவ்வொருவரின் கடமையும் கூடத்தான்.
வடகிழக்கு மாநிலங்களை பிரிவினை செய்ய பாஜக நினைக்கிறதா?
பாஜக தன் அரசியல் விளையாட்டுகளின் விளைவை தெரியாமல் இம்மசோதாவை அமல்படுத்தவில்லை. இதன் சமூகப்பிளவு ஏற்படுத்தும் சட்டங்களின் உதவியால், சில தேர்தல் தொகுதிகளைப் பாஜக பெறலாம். ஆனால் அடுத்த முறை அசாமில் பாஜக வெல்லாது. ஏனெனில் அதன் கூட்டணிக்கட்சி பாஜகவின் உறவிலிருந்து விலகி விட்டது. அசாமில் பாஜவை ஆதரிப்பவர்கள், வங்காளிகள் மட்டுமே. அசாமில் செய்யும் சோதனையை வெற்றிகரமாக்கினால் பாஜகவினர், பிற மாநிலங்களிலும் இதே சோதனையை வெற்றிகரமாக செய்வார்கள். குடியரசு நாட்டிற்கு ஒருங்கிணைந்த மதச்சார்பற்ற சமூகத்திற்கும் இது தீங்கான சூழல் என்பது உறுதி.
இட ஒதுக்கீடு மசோதாவை குடியரசுத்தலைவர் அமலாக்க அனுமதித்து உள்ளாரே?
காங்கிரஸ் அரசு 2013 ஆம் ஆண்டு கொண்டுவர நினைத்த சட்டம் இது. மக்களவை தேர்தல் சமயம் அது, அப்போது ஜாட்டுகளின் ரிசர்வேஷன் கோரிக்கை தலைதூக்கியிருந்தது. ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரிக்கும் வாய்ப்பும் இருந்தது. எனவே காங்கிரஸ் தயங்கியது. பின்னர் மசோதாவை உச்சநீதிமன்றம் நிராகரிக்க, மக்கள் காங்கிரஸை புறக்கணித்தனர். பாஜகவின் இட ஒதுக்கீடும் அப்படி நிராகரிக்கப்படும். ஏனெனில் இது அரசியலமைப்புக்கு எதிரானது. ஆண்டுக்கு எட்டு லட்சம் வருமானம் பெறுபவருக்கு இட ஒதுக்கீடு என்பதை எப்படி ஒப்புக்கொள்வீர்கள்?
குடியுரிமை சட்ட மசோதாவை, உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு மசோதாவுடன் மக்களவையில் தாக்கல் செய்யவிருக்கிறது அரசு. இது பற்றி தங்களது கருத்து?
பாஜக, பப்ளிசிட்டி செய்வதில் பெரும் வளர்ச்சி கொண்டுள்ளது. யாரும் கண்டுபிடித்து தன்னை கேள்வி கேட்க கூடாது என பாஜக நினைக்கிறது. ஆனால் மக்கள் அடையாளம் கண்டு போராடத் தொடங்கிவிட்டார்கள். கடந்த இரு ஆண்டுகளாக போராட்டம் நடைபெறுகிறது. அதனால் எப்போதும் இல்லாதபடி இந்த விவகாரத்தின்மீது ஊடக கவனம் இதன்மேல் உள்ளது.