நிதானமான படம் பார்க்கணுமா? சம்மோகனம் இருக்கு!
சம்மோகனம் (தெலுங்கு)
தெலுங்கு படங்களில் நீங்கள் என்னென்ன எதிர்பார்க்கிறீர்களோ அது எதுவும் சம்மோகனம் என்ற இந்தப்படத்தில் கிடையாது. குத்துப்பாட்டு, பன்ச் டயலாக், முதுகுத்தண்டு சில்லிடும் ஃபைட் என எதுவும் கிடையாது.
கதையை 21 பஸ் டிக்கெட்டில் எழுதிவிடலாம். அப்புறம் என்ன விசேஷம்? எடுத்த விதம்தான் அம்சமாக இருக்கிறது. பதட்டமே இல்லாமல் படம் செல்கிறது. இல்லை நான் போயபட்டி ஸ்ரீனு படம்போல வேகமாகவேண்டும் என்று சொன்னால் இந்தப்படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது.
குழந்தைகளுக்கான படங்கள் வரையும் ஓவியர், நடுத்தர வர்க்கத்திற்கு மேலுள்ள குடும்பம். சினிமா நடிகர்கள், நடிகைகளை தீவிரமாக வெறுப்பவர். ஆனால் தந்தையின் சினிமா ஆசைக்காக வீட்டில் நடக்கும் ஷூட்டிங்குக்கு ஒப்புக்கொள்கிறார். அங்கு வரும் நடிகை மீது காதலாகிறார். ஆனால் நடிகை ஓவியரை காரணமேயின்றி தயக்கத்துடன் மறுக்கிறார். மறுக்க என்ன காரணம், ஓவியரின் தந்தைக்கு இருக்கும் நடிகர் ஆசை என்னவானது? ஆகியவற்றுக்கு இதமான இசை, இசைவான நடிகர்களின் பங்களிப்புடன் கதை சொல்கிறார்கள்.
மோகன கிருஷ்ண இந்திரகாந்தியின் படம்(அமிதுமி, ஜென்டில்மேன்படங்களை இயக்கியவர்) என அழுத்தியே சொல்லலாம். எங்கும் அவசரப்படாமல் கதை சொல்கிறார். கதை சொல்லுவதில் தேக்கமிருந்தால் இசையமைப்பாளர் விவேக் சாகர் பார்த்துக்கொள்கிறார். மிருதுவான இசையில் அழகான நிதானமான பாடல்களை ரசித்து கேட்கலாம்.
அதிதியின் தெலுங்கு வசன முயற்சி, காதலை ஏற்காத பெண்களை இயல்பாக காட்டுவது, மோசமான வசனங்கள் என இண்டு இடுக்கில் தேடினாலும் படத்தில் அவை கிடையாது. அதிதி தன் மனதிலுள்ளதை தெளிவாக சொல்ல வாய்ப்பு கிடைத்தும் சொல்லாதது ஏன் என்று புரியவில்லை. காதலனை காப்பாற்றுவதற்கு என்ற காரணம் நிறைய இடங்களில் செல்லுபடியாகவில்லை.
அதனால் நஷ்டம் ஒன்றுமில்லை. டயலாக் வலுவாக இல்லையா, நாமே போட்டு நிரப்பிக்கொள்ளலாம். காரணம், காட்சிகளின் நிதானம். நடிகர்களுக்கு நடிக்க கொடுத்த இடம் அவ்வளவு அழகாக இருக்கிறது.
சுதீர்பாபு, பெரிய ஸ்டார் ஆகமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியான படமாக பார்த்து நடிக்கிறார் என்று இந்தப்படத்தை சொல்லலாம். அதிதிக்கு தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது நல்ல விஷயம். பட த்தில் கமர்ஷியல் தெலுங்கு படங்களை கிடைத்த இடத்தில் எல்லாம் வெளு வெளுவென வெளுக்கிறார்கள். சினிமா சம்பந்தமாக நாம் என்ன நினைப்போமோ அத்தனையையும் வெளிப்படையாகவே நாயகி தவறு என கூறுவதாகவே காட்சி இருக்கிறது.
தெலுங்குப்படங்களும் முன்னேறிவருகிறது என்பதற்கு விகடனில் நிறைய படங்களை குறிப்பிட்டிருந்தார்கள். சம்மோகனம் படத்தையும் தாராளமாக பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம். தவறில்லை. சுதீர்பாபு, அதிதிராவ் ஹைதாரி, சுதீரின் நண்பர்கள், படக்குழு, சுதீரின் தந்தை, அம்மா, தங்கை என குறையில்லாத நடிப்பு.
பிரபஞ்சத்திடம் எதை வேண்டுகோளாக வைக்கிறீர்களோ அது கிடைக்கும் என்பார்கள். நாயகி தனக்கு அன்பு தேவை என கோருகிறார். ஓவியன் மூலம் அது கிடைக்கிறது. அதைப் பெற அவள் தன் மனதிலுள்ள தடைகள், சில போலி உறவுகளை கைவிட்டு உடைத்தெறிந்து வருகிறாள் என்பதே கதை.
- கோமாளிமேடை டீம்