நீதியின் வலதுகரமாக டைகர் பின்னி எடுக்கும் மின்னும் மரணம்!
image: devianart |
மின்னும் மரணம் - நீதியின் வலது கரம்
சார்லியர் - ஜிர் என எழுத்தாளர், ஓவியர் இணை இணைந்து செய்த சாகசம்தான் லெப்டினென்ட் டைகர் கலக்கும் மின்னும் மரணம்.
1860 களில் நடக்கும் கதை. உள்நாட்டுப்போரில் தெற்கத்திய ஆட்கள் மறைத்து வைத்த தங்கத்தை தேடி அமெரிக்க அரசு, வெகுமதிவேட்டையர்கள், மெக்சிகன்கள் அலையும் அநாயச கதை.
கேப்டன் டைகர் என்ற பெயரில் முத்து காமிக்ஸ் வெளியிட்ட கதை. இப்போது சரியான மொழிபெயர்ப்பில் லெப்டினென்ட் என திருத்தமாக வெளியாகிறது. என்ன விலைதான் ரூ. 1000. வாங்கிப்படித்து நண்பர்களுடன் பகிரலாம்.
லெப்டினென்டாக உள்ள டைகர், மாதத்திற்கு ஒருமுறை குளித்தாலும் நீதியின் வழுக்காத வலது கரம். மனிதர்களை அநாவசியமாக கொல்பவர் கிடையாது. செவ்விந்தியர்களோ, வெள்ளையர்களோ அனைவரையும் நம்மவராக கருதுபவர். அனைவரும் விக்ரமன் பட கேரக்டர்களாக இருந்தால் எப்படி கதை நகரும். ட்விஸ்ட் இங்கேதான் வருகிறது.
சும்மா காடுமேடு எல்லாம் சுற்றி அலைந்த டைகரிடம் மெக்சிகோவுக்கு அனுப்பிய தங்கத்தை தேடிப்பெறும் ஒப்பந்தம் கிடைக்கிறது. ஜிம்மி, ரெட் சகிதமாக கிளம்புவருக்கு சிகுவாகுவா சில்க் என்ற முன்னாள் காதலியும் உதவுகிறாள். ஆனால் தங்கம் என வந்துவிட்டால் காதலாவது, கல்யாணமாவது..
விகோ எனும் மெக்சிகன், கெல்லி, பிளேக், ஏஞ்சல் ஃபேஸ், லோபெஸ், ஜெனரல் அலிஸ்டர் ஆகிய வில்லன்களை சமாளித்து தன் பெயரில் விழுந்த கொலைப்பழி, கொள்ளைப்பழி, சமூகவிரோத வீண்பழி என அத்தனையும் டைகர் சிறுகச்சிறுக துடைத்துப்போட்டு கேப்டன் அமெரிக்காவாக மாறி நிற்கையில் 548 பக்கங்கள் முடிந்தே விடுகின்றன. அடுத்த பக்கம் புரட்டினால் என் பெயர் டைகர் என அடுத்த காமிக்ஸ் விளம்பரம். கண்ணைக் கட்டிவிட்டது. ஏராளமான கேரக்டர்கள் என்பதால் மனவலிமை
யைத் திரட்டி படிக்கவேண்டிய நூலாகிவிட்டது.
டூமில் சத்தம் குறைவு. ஏனெனில் டைகர் மனிதநேயவாதி. மக்களை காப்பாற்றுவதே முக்கியம் என நினைப்பவர். அதனால் ஆபத்து எனில் ரயில்வே ட்ராக் ஓரமாக ஓடிவிடுவோமா என்பதே டைகரின் முதல் யோசனையாக இருக்கும். பிடித்து ஜெயிலில் போட்டாலும் கைதிகளிடம் திரும்பத்திரும்ப ஆலோசனை கேட்டு தப்பித்து வில்லங்கத்தில் மாட்டி கொலைப்பழியோடு ஓடுவார். இதுதான் கதை முழுக்க நடக்கிறது.
செவ்விந்தியர்களின் கதைப்பகுதி நன்றாக படம் வரைந்து வசனம் மொழிபெயர்த்துள்ளனர். ரூமில் இருந்த மீகா, நல்ல காமிக்ஸை தமிழில் பிரிண்ட் செய்திருக்கிறார்களே என பகிரங்கமாக பொறாமைப்பட்டார். அப்படியே சாவுடா ராஸ்கல் என நண்பர் கா.சியிடம் போன் செய்து வின்சென்டின் பொங்கலை நடுவில் டிஸ்டர்ப் செய்து சந்தோஷப்பட்டோம்.
டைகரை அடித்து நொறுக்கும் ஆவேசம் கொண்ட கதாபாத்திரங்கள் ஏஞ்சல் ஃபேஸ் என முகம் ஆம்லெட்டாக வெந்த கூலிப்படை துப்பாக்கி வீரர், ஸ்டாண்டன், விகோ, கெல்லி, அலிஸ்டர் ஆகியோர். இவர்களே பல்வேறு இடங்களில் ஷி-நா.பா வை பயன்படுத்த முயன்று அவரின் சமயோசித புத்திக்கு பலியாகிறார்கள். காதலிகள் மிக குறைவு, செவ்விந்தியப் பெண் ஷீனி மட்டுமே டைகரை நேசிக்கிறாள். ஆனால் அவளும் ஒருகட்டத்தில் ஆங்கிலேயர்களின் உடைக்கு அடிமையாக சோலி முடிந்தது. சிகுவாகுவா சில்க் டைகரை இரவில் சில மணிநேரங்களுக்கு மட்டும் ஏற்கும் புத்திசாலி. சொகுசு வாழ்க்கைக்கு அவன் ஏற்றவனில்லை என புரிந்துகொண்டு பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட, டைகர் காதலால் அவளை விட்டுவிடுகிறார். அவள் செல்லும் ரயிலைப் பார்த்தபடி குதிரையில் நிற்பதோடு கதை முடிகிறது.
படங்கள் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்களால் வரையப்பட்டுள்ளது என்பதை படங்களின் நிறச்சேர்மானங்களே காட்டிக்கொடுக்கின்றன. தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் இக்காமிக்ஸில் நீங்கள் பார்க்க முடியும். 548 பக்க காமிக்ஸ் என்பதால் வயிறு அகோரமாக பசிக்கும் எனவே ஹால்திராம் அல்லது பக்கத்து பேக்கரியில் நேந்திரப்பழ சிப்ஸ் கூட வாங்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்து படியுங்கள். அப்போது படிக்க முடியும். இல்லையெனில் மன அயர்ச்சியில் எழுந்துவிடுவீர்கள்.
- கோமாளிமேடை டீம்
நன்றி: ஓவியர் பாலமுருகன், தினமலர் பட்டம்
ராஜாராம் ஸ்நாக்ஸ், ஹால்திராம் கட்டா மீட்டா