புத்தகத்திருவிழாவில் குழந்தைகள் புத்தகங்கள்!



Image result for bapasi book fair


கோலாகல புத்தகத் திருவிழா 2019!

சென்னையின் தனித்துவமான அடையாளமாக மாறியுள்ள புத்தக திருவிழா இந்த ஆண்டு 42 ஆவது வயதை எட்டியுள்ளது.   பாரம்பரிய பதிப்பாளர்கள், புதிய பதிப்பகங்கள், புதிய தலைமுறை  வாசகர்கள் என புத்தகத் திருவிழா இந்த ஆண்டும் சரவெடியாய் தொடங்கிவிட்டது. சென்னை நந்தனத்தின் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன. 4 முதல் 20 ஆம் தேதிவரை பதினேழு நாட்களும் நூல் வாசிப்பாளர்களுக்கான  தனித்துவமான திருவிழா தூள் கிளப்பவிருக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(BAPASI), 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பபாசி, அன்றிலிருந்து  இன்றுவரை புத்தகத் திருவிழாவை பிரமாண்டமாக நடத்திவருவதோடு, அதனை பிரபலப்படுத்த பல்வேறு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சமூகத்திற்காக உழைத்த மனிதநேய மனிதர்களை  அழைத்து புத்தகத் திருவிழாவின் இறுதியில்    வாசிப்பு குறித்து உரையாட வைக்கிறது. 

பள்ளி மாணவர்களுக்கு நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப் பரிசுகளை பபாசி வழங்கிவருகிறது. 
சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது, சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது, சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது, சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கி எழுத்தாளர்களை அங்கீகரித்து உச்சிமுகர்ந்து பாராட்டிக் கொண்டாடுகிறது பபாசி.

ஆண்டுதோறும் இலக்கியம், இலக்கணம், போட்டித்தேர்வுகள், கட்டுரைகள் என பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்கள் தனக்கான வாசகர்களுக்காக நூல் அரங்குகளில் காத்திருக்கின்றன. பாரம்பரிய நூல்களோடு அடுத்த தலைமுறை  வாசகர்களை ஈர்க்கும் விதமாக சிடி,டிவிடி, இணையம் என கல்வியை நவீன ஊடகங்களின் கற்பிக்கும் டெக் கல்வி நிறுவனங்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். 
குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான நூல்களை பாரதி புத்தகாலயம்(புக்ஸ் ஃபார் சில்ரன், 60 நூல்கள்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(50 நூல்கள்), வானம்(10 நூல்கள்), தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (25 நூல்கள்)இரட்டைவால் குருவி ஆகிய பதிப்பகங்கள் சிறப்பு கவனம் எடுத்து தயாரித்து வெளியிடுகின்றன.

1976 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற முதல் புத்தக திருவிழாவில் 22 புத்தக அரங்குகள் மட்டுமே இடம்பெற்றன. கடந்தாண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 708 நூல் அரங்குகளை ஆங்கில, தமிழ் பதிப்பாளர்கள் அமைத்திருந்ததை  பபாசி நடத்தும் புத்தகத் திருவிழாவின் சாதனையாகவே கூறலாம். இதோடு நின்றுவிடாமல் இந்திய அரசின் நேஷனல் புக் ட்ரஸ்ட், பாரதி புத்தகாலயம், தமிழக அரசின்  பாடநூல் விற்பனைக்கழகம் ஆகிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் புத்தகத் திருவிழாக்களை நடத்திவருகின்றன. 




 
 
    

பிரபலமான இடுகைகள்