கல்வியில் தடுமாற்றம் என்ன? - இந்தியாவின் கல்வி பரிதாபங்கள்
கல்வியில் தடுமாறும் இந்தியா!
அண்மையில் வெளியாகியுள்ள அசெர் கல்வி அறிக்கை, இந்திய பள்ளி மாணவ, மாணவியரின் திறன் பெருமளவு பின்தங்கியுள்ளது என கூறியுள்ளது.
96 சதவீத மாணவர்கள் பள்ளியில் இணைந்திருந்தாலும் நான்கில் ஒருவருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களைக் கூட புரிந்துகொள்ளும் திறன் இல்லை என குண்டு வீசுகிறது இந்த அறிக்கை. மேலும் 50 சதவீதம் பேருக்கு அடிப்படை கணிதமான வகுத்தல், கழித்தல் கூட தடுமாற்றம் என நிஜத்தை பேசியுள்ளது.
அதுவும் பசுவின் நலன்களுக்கான வாழும் ராஜஸ்தான் மாநிலத்தில் 8 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே அடிப்படை கழித்தல் கணக்கு தெரிந்திருக்கிறது. அடுத்து யோகியின் மதியூக ஆட்சி நடக்கும் உ.பியில் 60 சதவீத குழந்தைகளுக்கு(மூன்றாம் வகுப்பு) வார்த்தைகளை வாசிக்கத் தெரியவில்லை என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமை சேர்க்காது.
குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் நாம் என்ன எதிர்பார்ப்போம்? எளிமையான வார்த்தைகள், அடிப்படை கணிதம் பற்றிய புரிதல். கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் ஆகியவை.
அதேசமயம் பயன்களும் இல்லாமல் இல்லை. பள்ளி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி செல்லாத இடைநிற்கும் மாணவிகளின் எண்ணிக்கை 10%-4% என சரிந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி.
ராஜஸ்தான், உ.பி, சட்டீஸ்கர், ம.பி ஆகியவை இடைநிற்கும், பள்ளிக்கு செல்லாத மாணவியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்கள். இவை இன்னும் கவனமாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.
எப்போதும்போல கேரளா சேட்டன்கள் இதிலும் நமக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே முன்னோடி. குறைந்தபட்சம் மூன்றாவது படிக்கும் மாணவருக்கு கழித்தல் கணக்கு தெரிந்திருக்கிறது. அடுத்த இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வருகின்றன. தமிழ்நாட்டின் இடம் 9.
ஆனால் ஆறாவது டூ எட்டாவது வகுப்பு படிப்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு கணிதம் கடினமாக உள்ளது என்பதை என்ன சொல்வது? ஆசிரியர்களின் பிழையா? மாணவர்களின் மேல் குற்றமா?
மதிய உணவு, கழிவறை வசதிகள் பள்ளிகளில் மேம்பட்டதை நெஞ்சார பாராட்டலாம்தான். ஆனால் கணினிகளின் பயன்பாடு குறைந்துள்ளதை கவனித்து சீர்படுத்தவேண்டும். அரசு மீது குற்றமாக என வயதான ஆட்களை வைத்து கமிஷன் அமைத்து பிரச்னைகளின் மீது கல் வைத்து அமுக்காமல் நேரடியான அரசின் கவனிப்பு கல்விக்கு தேவை.
அரசு இதில் அலட்சியம் காட்டினால் நீட் தேர்வு மட்டுமல்ல, வேறெந்தஅறிவியல் சார்ந்த மேற்கல்விகளுக்கும் மாணவர்கள் தேர்வாவது கடினம்.
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா ஸ்பென்ட் .காம்