காவிரி - கோதாவரி இணைப்பு விவசாயிகளை காக்குமா?


Image result for காவிரி


 காவிரி - கோதாவரி ஆறுகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது.

அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ”காவரி - கோதாவரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை தயாரித்துவிட்டோம். 60 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டத்தை மத்திய அமைச்சரவையிடம் அனுமதி பெற்று உலகவங்கியின் நிதியுதவியுடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

புனித கோதாவரி!

மகாராஷ்டிரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள திரியம்பக்கேஷ்வரில் உருவாகும் கோதாவரி 1,465 கி.மீ  தொலைவுக்கு பயணிக்கிறது. மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ஒடிஷா, சட்டீஸ்கர், ஆந்திரம், தெலுங்கானா, புதுச்சேரி  ஆகிய மாநிலங்களை பொன் கொழிக்கும் பரப்பாக மாற்றும் நீளமான இந்திய ஆறுகளில் ஒன்று இது. மத்தியப் பிரதேசத்தை வடக்குப்புற எல்லையாக கொண்டு தெலுங்கானாவின் நிஜாமாபாத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களை வளப்படுத்தி பின்னர் வங்காள விரிகுடாவில் கலக்கிறது கோதாவரி.

செல்லும் வழியில் தார்ணா, பூர்ணா, மஞ்சிரா, பிரான்கிதா, இந்திரவதி ஆகிய துணை ஆறுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு புகையிலை சாகுபடியை அள்ளித் தருகிறது கோதாவரி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆந்திராவின் ராஜமுந்திரியில்  ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் தாமஸ் காட்டன்  கோதாவரிக்கு நடுவில் முதல் அணையைக் கட்டிய பெருமை பெற்றார்.

நடந்தாய் வாழி காவிரி

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில்(பிரம்மகிரி மலை) உருவாகி வரும் காவிரி, 800 கி.மீ நீளம் கொண்ட ஆறு. கர்நாடகாவின் குடகு, பெங்களூரு, சாம்ராஜ் நகர், மைசூர், மாண்டியா ஆகிய பகுதிகளையும், தமிழ்நாட்டின் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களை செழிப்பாக்குகிறது.  பின்னர் பூம்புகார் அருகே வங்காள விரிகுடாவில் சங்கமமாகிறது.  ஒகேனக்கல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் அருவியாக விழும் காவிரிக்கு பவானி, அமராவதி, நொய்யல், மணிமுத்தாறு ஆகிய துணை ஆறுகளும் உண்டு.
காவிரியின் மீது கல்லணை, மேலணை, மேட்டூர், கிருஷ்ணராஜ சாகர் அணையும் கட்டப்பட்டுள்ளது. இவை தவிர பல தடுப்பணைகளும் உண்டு. 

இணைப்புத்திட்டங்கள்

என்.டபிள்யூ.டி.ஏ(NWDA) எனும் அரசின் நீர் மேம்பாட்டு ஆணையம், ஆறுகளை இணைக்கும் ஒன்பது திட்டங்களை உருவாக்கியது. அதில் முதல் கட்டமாக கோதாவரி - காவரி ஆறுகளை இணைப்பது இடம்பெற்றுள்ளது.

திட்ட அறிக்கைப்படி  மகாநதி - கோதாவரி இணைப்பு, இஞ்சபள்ளி - நாகார்ஜுனா சாகர் இணைப்பு, இஞ்சபள்ளி - புலிசிந்தலா இணைப்பு, போலாவரம் - விஜயவாடா இணைப்பு, அல்மாட்டி - பெண்ணாறு இணைப்பு, ஸ்ரீசைலம் - பெண்ணாறு இணைப்பு, நாகார்ஜுனா சாகர் - சோமசீலா அணை இணைப்பு, சோமசீலா அணை - கல்லணை இணைப்பு, காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு ஆகிய திட்டங்களை  நீர் மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்ளவிருக்கிறது. 

முதல் கட்டத்தில் கோதாவரியின் துணை ஆறான இந்திராவதியின் உபரி நீர், மூன்று இணைப்புகள் மூலம் காவிரி படுகையில் கொண்டு சேர்க்கப்படும். இதன்படி, தெலுங்கானாவில் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அக்னிபள்ளி என்ற இடத்தில் இந்திராவதி - கோதாவரி இணைப்பு ; நாகார்ஜுனா அணை - சோமசீலா அணை இணைப்பு; பெண்ணாறு( சோமசீலா) - காவிரியின் கல்லணை இணைப்பு மேற்கொள்ளப்படும்.

வீணாகும் நீர் விவசாயத்திற்கு!

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தங்களுடைய நீர்ப்பாசன ஆய்வுக்குழுக்களின் ஆய்வுக்கு பிறகு இத்திட்டத்தை அதனை ஏற்போம் என அறிவித்துள்ளன. மத்திய அரசு ஆறுகள் இணைப்பில் 90 சதவீத நிதியும், மாநில அரசுகள் பத்து சதவீத நிதியும் அளிக்க விருக்கின்றன.

கடலில் கலக்கும் 1,100 டிஎம்சி நீரைத்தான் வீணாக்காமல் பயன்படுத்த திட்டமுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார். உபரி நீரை தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தினால் லாபம்தானே ! கால்வாய் வெட்டினால் வெப்பத்தால் ஆற்று நீர் ஆவியாகி விடும் என்பதால் அதற்கேற்ப ஸ்பெஷல் குழாய்களை அமைக்கவிருக்கிறார்கள்.

இக்கட்டுரை எழுதும்போது நதிநீர் இணைப்பு திட்டத்தின்(அந்திரி-நிவா நீர் இணைப்பு) காரணமாக சித்தூருக்கு கிருஷ்ணா நதிநீர் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.


நன்றி: தினமலர் பட்டம்