குற்றங்களைத் தீர்க்க இளைஞர்களால் முடியும் - நம்பிக்கை அதிகாரி



Image result for harsh poddar



உங்களுடைய நாட்டு பிரச்னைகளை நீங்களே தீர்க்க முன்வராவிட்டால் எப்படி? சரி, யார்தான் அதனை தீர்ப்பது? என யதார்த்தமான கேள்விகளை முன்வைக்கிறார் வழக்குரைஞராக இருந்து ஐபிஎஸ் ஆபீசராக சாதித்த ஹர்ஸ் போடர்.


வழக்குரைஞராக இருந்து பிரச்னைகளை பார்த்தவர் தற்போது அதனை தீர்க்கும் வழிதேடி மாற்றங்களை விதைத்து வருகிறார். கடந்த ஆண்டின் டெட்எக்ஸ் கேட்வேயில் தனது சிந்தனைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.

வெறும் சிந்தனை மட்டுமல்ல செயலிலும் புலிதான். மகாராஷ்டிராவில் குற்றங்களை களைய மகாராஷ்டிரா இளைஞர்கள் நாடாளுமன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி 42 ஆயிரம் இளைஞர்களை ஈர்த்துள்ளது சாதனை அல்லவா? மேலும் பார்வையற்றோருக்கான ஆதரவு சட்டங்களையும் இயற்ற முயற்சித்து வருகிறார். “நான் அடிப்படையில் வழக்குரைஞர் என்பதோடு ஆக்ஸ்போர்ட்டில் பெற்ற கல்வி அறிவும் பிரச்னைகளை எளிதாக புரிந்துகொள்ள உதவியது. அரசின் உதவியுடன் மக்களுக்கு என்னவிதமான உதவிகளை செய்யமுடியும் என யோசித்து செயல்படுகிறேன்” என நம்பிக்கை பெருக பேசுகிறார் ஹர்ஸ் போடர்.

மாலேகானில் போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றவர் உடான் எனும் திட்டத்தை உருவாக்கி கலவரங்களில் ஈடுபட்ட இளைஞர்களை நல்வழிபடுத்தியுள்ளார்.  சமூக விரோத செயல்பட்ட 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தந்து அவர்களின் எதிர்காலத்தை தனியொருவராக காப்பாற்றிய சாதனை ஹர்ஸ் போடருக்கு உண்டு. ”நான் சிவில் தேர்வுகளுக்கு தயாராகியபோது திடீரென என் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். மனம் குலைந்த எனக்கு தாய் ஆதரவாக இருந்தார். அவர் இல்லையென்றால் இன்று நான் இல்லை. ” என கண்களில் நீர் திரள பேசுகிறார் ஹர்ஸ்.

இளைஞர்களை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற அமைப்பை உருவாக்கியவர், நாக்பூரிலும் ஊழல் ஒழிப்பு, குற்றங்களை ஒழிக்க இதே டெக்னிக்கை பயன்படுத்தி வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக பணிபுரிந்தவர், போலீஸ் துறைமீதான ஆசையில் சிவில் தேர்வுகளை எழுதி ஐபிஎஸ் அதிகாரி ஆகியிருக்கிறார்.


”ஹைதராபாத்திலுள்ள தேசிய போலீஸ் அகாடமி என்னை பெரியளவு மாற்றியது. இந்த அகாடமி பயிற்சி பெறும் போலீஸ் அதிகாரிகளை சமூக விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்றுகிறது. அதன் செயலராக நான பணிபுரிந்தபோது பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்படியான செயல்பாடுகளை உருவாக்கினேன்” என்கிறார்.  சமூக செயல்பாடுகளோடு காவல்நிலையத்தை ஸ்மார்ட் ஸ்பாட்டாக மாற்றுவதோடு வசதிகளையும் ஏற்படுத்தி ஐஎஸ்ஓ அங்கீகாரம் கூட பெற்றுத்தந்து சாதித்திருக்கிறார்.

நன்றி: டெக்கன் கிரானிக்கல் - சூருச்சி கபூர் கோம்ஸ்