காப்பீடு பணத்திற்காக கொலை செய்யும் ஜெகஜ்ஜால குற்றவாளி! - குருப்பு - ஸ்ரீநாத் ராஜேந்திரன்
குருப்பு
மலையாளம்
துல்கர் சல்மான்
பணத்திற்காக ஆசைப்படும் ஒருவனின் குற்றத்தடங்களைப் பற்றிய விவரிப்புதான் மையக்கதை.
கேரளத்தில் நடைபெற்ற முக்கியமான கொலைக்குற்றத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். நடந்த சம்பவத்திற்கு வருத்தப்படவேண்டுமா என்பதை தொடர்புடையவர்கள்தான் சொல்லவேண்டும். படத்தில் நாயகன் தனது திறமையைப் பயன்படுத்தி குற்றங்களின் உச்சிக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருக்க படம் நிறைவடைகிறது.
கோபாலகிருஷ்ணன் என்பவரைப் பற்றி அவரது பெற்றோர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் படம் கேரளத்தில் தொடங்குகிறது. அப்படியே கோபாலகிருஷ்ணன் பற்றி நோக்கி நகர்கிறது. பிறரை அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டி வைப்பதில் ஆர்வம் கொண்டவன், விமானப் படைப் பிரிவில் பயிற்சிக்கு செல்கிறான். ஆனால் அவனது பணம் சம்பாதிக்கும் வேகத்திற்கு விமானப்படை பயிற்சியும் வேலையும் கசப்பாக இருக்கிறது. அங்குதான் பீட்டர் என்ற நண்பன் கிடைக்கிறான். அவனுக்கும் வெளியில் உள்ள அழகைக் காட்டுகிறான். ஆனால் தான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை மறந்தும் கூட சொல்வதில்லை.
கோபாலகிருஷ்ணன் யார் என அவனது நண்பர்கள், மனைவி, சுற்றம் என பலரும் பல்வேறு கருத்துகளை சொல்லுவார்கள். ஏன் அப்படி? அவன் அப்படித்தான் கருத்துகளை உருவாக்கி வைத்திருக்கிறான். 1980களில் நடக்கும் குற்றம் என்பதால், போலீஸ் குருப்பை பிடிக்க தலையால் தண்ணீர் குடிக்கிறது. கோபாலகிருஷ்ணன், சுதாகர குருப்பு, அலெக்ஸாண்டர் என பெயர் மாற்றி சென்று கொண்டிருப்பதாக கதை செல்கிறது. இதில் முக்கியமான பாத்திரம் இன்ஸ்பெக்டராக வரும் இந்திரஜித்திற்கு.... சில காட்சிகள் நேரடியாக, மறைமுகமாக மாற்றி அடுக்கி இருப்பது படத்தை சுவாரசியமாக்குகிறது.
படத்தில் சாரதாம்மா பாத்திரத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார்கள். சாதியில் கீழ்நிலை என்றாலும் கூட அவளை குருப்பு மனமுவந்து விரும்பி திருமணம் செய்துகொள்கிறான். இதற்கு அவன் குடும்பத்தினர் பெரிதாக அவனுக்கு விருப்பம் தெரிவிப்பதில்லை. குருப்பும் அதை கண்டுகொள்வதில்லை. குருப்புக்கும் சாரதாம்மாவுக்குமான காதல் காட்சிகள் வழக்கம் போல இல்லாதது பெரிய ஆறுதல்.
விமானப்படை, கேரளம், பெர்சியா என செல்லும் இடங்களில் குருப்புக்கு ஈர்ப்பாக இருப்பது அங்குள்ள விதிகளை மீறிச்செய்யும் வணிகங்கள்தான். அதில் யாரும் அடித்துக்கொள்ள முடியாத வித்தகனாகிறான். அப்போது அவனுக்கு வரும் யோசனைதான், காப்பீடு பணத்திற்காக தான் இறந்துபோய்விட்டதாக நாடகமாடுவது. இதற்காக தனது ஊரில் உள்ளவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறான். இதற்கு ஒரே காரணம்தான், பண ஆசை அத்தனை பேரையும் அலைக்கழிக்கிறது அதை பயன்படுத்திக்கொண்டு கம்பி நீட்டுகிறான்.
இயக்குநரின் திறமை என்பது குருப்பின் உடல்நிலை, அவனது புத்திசாலித்தனம் என்பதையெல்லாம் இன்ஸ்பெக்டர் தனது விசாரணை வழியாகவே கண்டுபிடிப்பதாக காட்டிவிட்டதுதான்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக