ஒவ்வாமையோடு வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள்- பொருட்களை வாங்கும்போது கவனிங்க!
கவனம் கொள்ளாத வேறு சில ஆபத்துகள்!
தாலேட்டுகளைப் பற்றி என்னென்ன ஆபத்துகள் என்று பார்த்தோம். அது மட்டும்தானா என்றால் கிடையாது. இது மலையாளப் படம் போல, ஒரே படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் குணச்சித்திர பாத்திரத்தில் நடிப்பார்கள். அதேபோல நிறைய வேதிப்பொருட்கள் உடலை பாதிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
அசிடோன்
மூச்சுக்குழல், ரத்தம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், தோல், மூளை, நரம்பியல் அமைப்பு என பாகுபாடில்லாம் நிறைய உறுப்புகளை பாதிக்கிறது. இங்கு குறிப்பிட்ட உறுப்புகள் குறைவுதான். அசிடோன் உள்ளே போகும்போது, உடலிலுள்ள நிறைய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பியூடேன், ஐசோபியூடேன்
எடை குறைவான திரவம்தான். ஆனால் மூளையையும், நரம்பு அமைப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது. உடலில் நடக்கும் வேதிவினைகளை மூளைதான் தீர்மானிக்கிறது. அதுவே சீர்குலையும்போது, உடல் தடுமாறி தளரும்.
திர்வ பெட்ரோலியம்.
ஏர் ஃப்ரெஷ்னர் வகைகளில், திரவ பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். வண்டிக்கு போடுவதை உடலுக்குள் அனுப்பினால் உறுப்புகள் மைலேஜ் காட்டுமோ என நினைக்காதீர்கள். எல்லாம் களைத்து விழுந்துவிடும்.
புரோபேன்
தோல், இதயத்தசைகள், தோல், ரத்தம், கல்லீரல், சிறுநீரகம், நரம்பு அமைப்புகள் என பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கும். முடிந்தளவு இந்த வேதிப்பொருட்களை தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவதை தவிருங்கள்.
வாசனை திரவியங்கள்.
இவை, 95 சதவீதம் பெட்ரோலிய பொருட்களால் ஆனவை. ஏராளமான நச்சுப்பொருட்கள் இதில் உள்ளன.
பென்ஸேன்
மூச்சக்குழல் சார்ந்த நிறைய பிரச்னைகளை உருவாக்கும். லுக்குமியா நோயையும் தரும்.
ஃபார்மால்டிஹைட்
புற்றுநோய், மூச்சுக்குழல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும்.
எனவே, முடிந்தளவு ஏர் ஃப்ரெஷ்னர்கள் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால்,வீட்டில் ஜன்னல்களை திறந்து வையுங்கள். அதில் ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் அரோமாதெரபியை முயற்சி செய்யுங்கள்.
பிஹெச்டி
நரம்புகளை பாதிக்கும் நச்சு. மூளை, ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி என பலவற்றையும் கெடுக்கும்.
அசிட்டால்ஹைட்
புற்றுநோயை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் வேதிப்பொருள். மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். தோல், கண்கள், நுரையீரல் என பிற உறுப்புகளிலும் எரிச்சலையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
புரோபைலீன் கிளைகால்
நோய் எதிர்ப்பு சக்திக்கு இடைஞ்சல் செய்யும் பொருள். உடல், தோல், கண்கள், நுரையீரல் ஆகிய உறுப்புகளைப் பாதிக்கும்.
லிமோனீன் என்ற பொருளையும் இதே வகையில் சேர்க்கலாம். இதுவும் முன்சொன்ன அத்தனை பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
மெத்தில் பைரோலிடன்
பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி, தோல், கண்கள், நுரையீரல் ஆகிய உறுப்புகளை பாதிக்கிறது. பென்சால் டிஹைட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தும்போது தோல், நுரையீரல், கண்களை பாதிக்கிறது. நரம்புகளைப் பாதிக்கும் நச்சு இது. எத்தில் அசிடேட் என்ற வேதிப்பொருள், மலட்டுத்தன்மை ஏற்படுத்துவதோடு, குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
வீடுகளை துடைப்பதில் கூட ஏராளமான பிராண்டுகள் உண்டு. அதையும் வீட்டு ஹாலுக்குள் கொண்டு வந்து டாக்டர் கோட்டைப் போட்டுக்கொண்டு வந்து விற்றுவருகிறார்கள். பியூடைல் செல்லோஸால்வ், குளோரினேட்டட் பினால்ஸ், டைஎத்திலின் கிளைகால் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு வாங்குங்கள். இவை ஆபத்தான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள்.
துணி துவைக்கும் சோப்பில் நோனிலைபீனால் இதோக்ஸிலேட் வேதிப்பொருள் இல்லாமல் பார்த்து வாங்குங்கள். கறைகளை நீக்கும் பொருட்களில், பெர்குளோரோஎத்திலீன் என்ற வேதிப்பொருட்களைத் தவிர்க்கலாம்.
ஒவ்வாமை நூலிலிருந்து....
பின்டிரெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக