பருந்து காப்பாற்றும் குழந்தை போர்மங்கையாக மாறும் கதை! - சீதா - மிதிலையின் போர்மங்கை- அமிஷ்

 






சீதா மிதிலையின் போர்மங்கை








சீதா 
மிதிலை போர்மங்கை
அமிஷ் திரிபாதி
வெஸ்லேண்ட் பதிப்பகம்

தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன்

அமிஷ் எழுதிய ராமாயணம் நான்கு நூல்களைக் கொண்டது. நான்காவது நூல் இன்னும் வெளியாகவில்லை. ராமன், சீதை, ராவணன் இந்த மூன்று நூல்களுமே நிறைய இடங்களில் சந்தித்து மீள்கின்றன. அவற்றை கச்சிதமாக நூலில் பொருத்திப் பார்த்து செம்மை செய்திருக்கிறார்கள். மூன்று நூல்களுமே வாசிப்பில் சிறப்பாகவே இருக்கின்றன. 

இப்போது நாம் சீதாவைப் பார்ப்போம். ராமன், சீதை, ராவணன் என்ற மூன்று நாவல்களின் அடிப்படையும் அவர்களின் பிறப்பு, அதற்குப் பிறகு நடைபெறும் சில சிக்கலான சம்பவங்கள் அவர்களை எப்படி வடிவமைக்கின்றன, அதன் பொருட்டு அவர்கள் நடந்துகொள்ளும் விதம் என செல்கிறது. 

சீதாவைப் பொறுத்தவரை அவள் யார் என்பது மூன்றாவது நூலான ராவணனைப் படித்தால் தான் தெரியும். இதிலும் நிறைய திருப்பங்களை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். குறிப்பாக ஸமீச்சி பாத்திரம். இது ஆண்களின் மீதான வெறுப்பு கொண்ட பெண் தளபதி பாத்திரம். இவள், தானாகவே முன்வந்து சீதாவுக்கு உதவுகிறாள். சிறுவயதில் நடந்த விபத்தில் சேரியில் வாழும் போக்கிரிகளை அடித்து உதைத்து மண்டையை பிளந்து சீதாவை மீட்கிறாள். இதன்பொருட்டு நாட்டின் தளபதியாகிறாள். 

அவளுக்கு நாட்டின் மீதான பற்றை விட சீதாவின் மீதே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஏறத்தாழ சோறிடும் எஜமானை நேசிக்கும் நாய் போல. சொல்லும்போது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அப்படித்தான் அவளது செயல்பாடும் போக்கும் இருக்கிறது. இவளது ஆக்ரோஷத்தைக் குறைக்க துணை படைத்தலைவராக ஆண் ஒருவர் இருக்கிறார். 

சீதா, ஜனகர், சுனேனா கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் நிலையில் கிடைக்கிறாள். அவள் குழந்தையாக இருக்கும்போது, இறக்க வேண்டியவள். ஆனால் ஏதோ பட்சி தெய்வம் அவளைக் காப்பது போல காட்சியை உணர்ச்சிகரமாக்கியிருக்கிறார். அக்காட்சியில் கழுகு போன்று நீண்ட இறக்கைகளை விரித்து குழந்தையை தின்ன வரும் ஓநாய்களை விரட்டுகிறது. இக்காட்சி அபாரமான உணர்வெழுச்சியை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இதைப் பார்த்து சுனேனா, அங்கு ஏதோ நடக்கிறது என புரிந்துகொண்டு சென்று குழந்தையைக் காப்பாற்றுகிறாள். அவள்தான் சீதா. 





அவளின் பிறப்பு என்பது மர்மமாகவே இருக்கிறது. வளர்ப்பு பிள்ளையாக இருந்தாலும் வீரம், வேகம், புத்தி என அத்தனையிலும் முந்திக்கொள்வது சீதாதான். சுனேனாவுக்கு பின்னர் ஊர்மிளை பிறந்து பாசம் காட்டுவது சார்ந்து பாரபட்சங்கள் ஏற்படுகிறது. ஆனாலும் கூட சீதா அதைப்பற்றி கவலைப்படாமல் பாடங்களை குருகுலத்தில் கற்கிறாள். அங்கு, அவளைப் பார்த்து விஸ்வாமித்திரர் வியக்கிறார். அப்போதே முக்கியமான முடிவை எடுக்கிறார். அதுதான் கதையின் முக்கியமான திருப்பு முனை. 

ஜனகரின் நாடு ஆன்மிக வளர்ச்சிக்கானது. இவரின் நாட்டில் பல்வேறு தத்துவ விவாதங்கள் நடக்குமே ஒழிய தொழில் சார்ந்த மாநாடுகள் ஏதும் நடப்பதில்லை. ஆனால் இவரின் சகோதரர் குஷத் வஜர், மிதிலையை கைப்பற்ற அந்நாட்டிற்கு கிடைக்கும் இயற்கை வளங்களை வேண்டுமென்றே தடுக்கிறார். இது சீதாவுக்கு தெரிய அவள் கொந்தளித்து செய்யும் ஒரு செயல், இரு நாட்டிற்குமான பெரும் பகையை உருவாக்குகிறது. 

பிறகு குருகுலப்படிப்பை முடித்து வரும் சீதா, அம்மா சுனேனாவின் இறப்பைச் சந்திக்கிறாள். கூடவே நாட்டையும் மேம்படுத்த நினைக்கிறாள். இதற்காக மலயபுத்ரர்கள் தரும் பணத்தை பயன்படுத்திக்கொள்கிறாள். இதை வைத்தே நாட்டின் மக்கள் வாழும் தேன் கூடு அமைப்பு வீடுகளை கட்டுகிறாள். இதனை எழுத்தாளர் பிரமாதமாக  கண்ணில் காட்சியை விரிவது போல விளக்கியுள்ளார். 

மலயபுத்ரர், வாயு புத்ரர் என இரு வம்சங்கள் உள்ளன. இவர்கள் ஒருங்கிணைத்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள்தான் இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் மனிதராக இருப்பார்கள். இதற்கு யார் சரியான தேர்வு என்பதே கதையின் முக்கியமான பகுதி. ராமனை வசிஷ்டரும், சீதாவை விஸ்வாமித்ரரும்  தேர்ந்தெடுக்கிறார்கள். இதனை மலயபுத்ரர், வாயுபுத்ரர் ஆகியோர் ஏற்றனரா இல்லையா என்பதை பல்வேறு திருப்பங்களுடன் அமிஷ் கூறியுள்ளார். 

பவித்ரா ஸ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பில் கதை துல்லியமான தொனியில் வேகமாக செல்கிறது. காதல், நெகிழ்ச்சி, துரோகம், வஞ்சம், நட்பு, பாசம், அன்பிற்கான ஏக்கம் என அனைத்தும் கச்சிதமாக அமைந்த நூல் இது என வாசிக்கும் போது உணர்வீர்கள். 

கோமாளிமேடை டீம்








கருத்துகள்