சோறு முக்கியம் பாஸ்! -



Image result for royapettah food hotels



சோறு தேடும் காக்கைகள்!


வேலை அமைவதும். அதன் கூடவே நண்பர்களின் ஜாகை அமைவதும் சாதாரண விஷயமல்ல. வேலை காரணமாக பெருங்குடிக்கு கிளம்பியபோது வயிற்றில் மெட்ரோ ரெயில்கள் டஜன் பெட்டிகளோடு மேலேறி சறுக்கின.பின்னே சோறு முக்கியமில்லையா?  நினைத்ததற்கு மாறாக இருந்த அத்தனை கடைகளும் எலைட். கம்பெனியில் சம்பளம் போடவே மேலேயும் கீழேயும் பார்ப்பார்கள். என்ன செய்வது?


எலைட் கடைகளை புரட்டிப்போடுட  சாப்பிட நானென்றும் சீப் எடிட்டர் சக்தி இல்லையே? உணவு தேடி ருசிக்கு சாப்பிடுவதில் அவர் கைதேர்ந்தவர். இப்படி நாங்கள் புகுந்து அலாசியதில் எங்களுக்கு நேரெதிரான போட்டி ஐடி ஆட்கள்தான். உள்ளேயே புட்கோர்ட் இருந்தாலும் ஒரு பயலும் உள்ளே உட்கார்ந்து கார்டு தேய்த்து சாப்பிடுவதில்லை. அத்தனை பேரும் நேராக கேரளா கடை, அல்லது ஆந்திரா மெஸ்ஸூக்கு வந்து பனிரெண்டு பேர் உட்காருகிற டேபிளை குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள்.

ஆம்லெட், சிக்கன் என தின்று கொழுப்பதால் நாங்கள் சென்றால் ஜனதா சாப்பாடு டிக்கெட் வந்தது போல பாந்தமான கவனிப்பு. என்ன செய்வது? பாபு பப்பு வரலை என்று கூவித்தொலைத்து தின்றுவிட்டு கல்லாவிலுள்ள பழத்தை முறித்து தின்றுவிட்டு வரவேண்டியதுதான்.

ஒருகட்டத்தில் தேடிச்சோறு நிதந்தின்று அலுத்துப்போக, வீட்டு உணவுக்கு சக்தி பழகினார். ஓகே மகாபந்தன் கூட்டணியை கைவிட்டு தனித்தனி திக்கில் சோறு தேடி அலைந்தோம். சிலசமயங்களில் தோழர் வருவார். இல்லையெனில் டிசைனர் வருவார்.

சாந்தி அக்கா கடை, நம்ம ஆச்சி கடை, திருமால் ஆந்திரா மெஸ், என பல்வேறு கடைகளில் சாப்பிட்டோம். பாரடைஸ் தாண்டி இரண்டாவது முறை வலதுபக்கம் திரும்பினால் ஒரு ஆந்திராமெஸ் வரும். நான் சொல்வது ராஜீவ் காந்தி சாலையில். சத்யம் விஷாலுக்கு மாமா மாதிரியே ஓனர் இருப்பார். தலையை நிமிர்த்தினால் சோற்றுப்பருக்கைகள் மழையாய் கொட்டும். விஷால் மாமா சபாரி சூட்டையே வெள்ளையில் அணிந்திருப்பார். அவருக்கு கேள்விகளே பிடிக்காது. கீரை, கூட்டு கேட்கும் முன்பு இலையை சோற்றால் நிறைப்பது அவருக்கு பிடித்த விளையாட்டு போல.

தயிர், கூட்டு இருந்தால் சாப்பாடு என மனதில் ஃபிக்ஸ் ஆகிவிடுவதால் எனக்கு பெரிய ஏமாற்றம் இல்லை. ஆனால் மகர ராசி கொண்ட பி.கே போல ஆசாமிகள் ஓனரிடமே போய் சமையல் வேஸ்ட் என சொல்லி விட்டு வந்த கதைகள் பொய்யல்ல. உண்மைதான்.

பொதுவாக கண்ணாடி திறப்பு கொண்ட ஏசி ஹோட்டல்களில் பெண்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, விஷால் மாமா ஹோட்டலில் இரு பெண்கள் தனியாக வந்து ஆம்லேட் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பெண்கள் சாப்பிடுவதில் நாம் சொல்ல என்னவிருக்கிறது? அவர்கள் தனி உலகில் அவர்கள் மட்டுமே இருப்பதாக நினைத்து பேசி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஆண் மேலாதிக்க பன்றி என வசவு வரவும் வாய்ப்பிருக்கிறது. உண்மையை சொல்லித்தானே ஆகவேண்டும்.

ஆந்திரா மெஸ் குறித்து கண்டபடி பேசி, ராயப்பேட்டைக்கு வந்தால் மூச்சே விடமுடியவில்லை. அனைத்து திசைகளிலும் பன்றிக்கறி, அண்டா பிரியாணி என வளைத்து வளைத்து தாக்குகிறார்கள்.

 வெஜ் ஹோட்டல் என நம்பி ஜி.ஹெச் அருகேயுள்ள  அம்மன் ஹோட்டலுக்கு போனால், தக்காளி சாதத்தில் பிரியாணிக்கு  முயற்சித்திருந்தார்கள். ஆபரேஷன் சக்சஸ், சாப்பிட்டவன் செத்தான்.

 அதிலுள்ள வாசனைப்பொருட்களை தூக்கிப்போட்டு சாப்பிட்டபோது 45 நிமிடங்கள் கரைந்திருந்தன. காரம் தாங்கவில்லை என கோல்டு ஹோட்டலுக்கு சென்று கடலைமிட்டாய் வாங்கினேன்.

எங்க ஹோட்டல்ல சாப்பிடலையா என்றார் முதலாளி.
சிரித்து சமாளித்தேன். அம்மன் முயற்சியைவிட கோல்டு ஹோட்டல் தக்காளி சாதம் சோலி முடிக்கும் ரகம். கேசரிப்பவுடருக்கென நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். தக்காளி சாதம் என இருமுறை கேட்டுத்தான் உறுதிப்படுத்தவேண்டும். வட இந்தியாவில் போடும் ஜிலேபி கலர்.

பட்டை, கிராம்பு போட்டு சாவுங்கடா ராஸ்கல்ஸ் என மாஸ்டர் கோபத்துடன் செய்த சாதக்கலவை. அதோடு கோல்டுக்கு ஒரு கும்பிடு. இங்கு ஒரே நல்லவிஷயம் தண்ணீர் கலந்து தயிர் சாதம் எவ்வளவோ தேவலை என்பதுதான். சீப் டிசைனர் நேராக அடையார் ஆனந்தபவன் போனேன் என்றார். போகலாம். ஆனால் என் வயிறு அவ்வளவு பெரிசு கிடையாது.

மயிலாப்பூருக்கே போய் மாமி மெஸ்ஸில் சாப்பிட்டு வந்துவிடலாமா என்று தோன்றுகிறது. இதுபோதாது என டீயில் பிரியாணி மசாலாவைக் கலக்கி ஸ்பெஷல் என்றார் பாலபாரதி. ஆசிட் வாங்கிக் கொடுத்து கொல்லப்பார்க்கிறீங்களா என்றேன். நீ வாடா எங்க ஏரியாவுக்கு வா, உன்ன என்ன செய்யறேன்னு பாருன்னு டென்ஷனாகி விட்டார். எடை கட்டாத டீ வாங்கிக்கொடுத்து சமாதானம் செய்தேன். பதிலுக்கு வெஜ் பப்ஸ் வாங்கி கொடுத்தார். நல்லமனுஷன். ஆனால் பெருந்தீனி மிருகம்.

வாடகைக்கு இடம்பார்ப்பதோடு பக்கத்து வீட்டுக்காரன் சைக்கோவா என பார்ப்பது ரொம்ப முக்கியம். அதேதான் வேலைக்கு வரும் ஏரியாவிலும் சரியான சோத்துக்கடையின் அட்ரஸ் பார்த்து இல்லையெனில் மகர ராசிக்காரர்களிடம் அனுபவம் கேட்டேனும் வரவேண்டும். இல்லையெனில் பிரியாணியா இல்லை தக்காளி சாதமா என நொடிக்கொரு தடவை டவுட் வரும்.

ச.அன்பரசு
தொகுப்பு: ஜனனி, மனோ