ஆராய்ச்சிகளில் இந்தியாவின் இடம்? - பத்துபேர் பரிதாபம்
உலகின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பட்டியலில் 4 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் இந்தியாவின் பங்கு எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள்? வெறும் பத்து பேர்தான் இடம்பெற்றுள்ளனர் என்பது அதிர்ச்சி தகவல். பத்து பேரில் ஐஐடி மெட்ராஸ், பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு என்பது தமிழகத்திற்கு பெருமை.
கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் ஐந்தாவது ஆண்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் ஐஐடி கான்பூர், ஜேஎன்யூ, ஐஐடி மெட்ராஸிலிருந்து தலா ஒருவர், என்ஐடி போபாலில் இருவர். உலகின் அறுபது நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து நாடுகளிலிருந்து மட்டும் 70 சதவிகித ஆராய்ச்சியாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்ச்சைக்குள்ளானாலும் தனது கல்வித் தரத்தின் மூலம் உயர்ந்து நிற்கிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த 186 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்தியாவைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. சீனா லிஸ்ட்டில் மூன்றாவது இடத்திற்கு வந்து விட்டது.
”கடந்தமுறை குறைந்தது ஐந்து பேர் ஜேஎன்யூவில் தேர்வாகி இருந்தனர். உலகளவில் தாக்கம் ஏற்படுத்தும் ஆய்வுகளை கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் கருத்தில் கொள்கிறது. வெப்பமயமாதல், நீர்பற்றாக்குறை, ஆற்றல் போன்றவை’’ என்கிறார் ஜேஎன்யூவின் தினேஷ் மோகன். “ கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் சீனாவும் ஆராய்ச்சிகளில் ஒரே நிலைமையில் இருந்தன. ஆனால் இன்று சீனா 15% அறிவியல் ஆராய்ச்சிகள் பொருட்கள் என உலகில் கோலோச்சுகிறது. ஆனால் இந்தியாவின் பங்கு வெறும் 4% தான்.” என்கிறார் பாரத ரத்னா வென்ற ஆராய்ச்சியாளர் சிஎன்ஆர் ராவ்.
ஆராய்ச்சிகளின் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஜெர்மனி, ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ளது.