புதையல் டைரி என்ன சொல்கிறது?



Image result for treasure



புதையல் டைரி

யெஸ்.பாலபாரதி

பாரதி புத்தகாலயம்



விகடனில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நூலுக்காக பாலபாரதி விருதுபெற்றிருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவரது புதையல் டைரி என்ற நூல் வாசிக்க கிடைத்தது. மகேஷின் கைவண்ணத்தில் ஓவியங்கள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளன.

ஜான்சனின் தாத்தா இறந்துவிடுகிறார். தன் பேரனுக்கு பரிசாக ஒரே ஒரு டைரியை விட்டுச்செல்கிறார். அதில் பல்வேறு புதிர்கள். நண்பர்கள் எப்படி புதிர்களை விடுவித்து பொக்கிஷத்தை அடைகிறார்கள் என்பதே கதை.

புதிர்கள் அனைத்தும் சிறுவர்களின் புத்திக்கு ஏற்றபடி கிடையாது. சில இடங்களில் ஸமீரா, சில இடங்களில் சர்ச் பாதிரியார் என உதவி வழிகாட்டுகிறார்கள். இறுதியாக தாத்தா தன் பேரனுக்கு என்ன பரிசை தந்துவிட்டு சென்றார் என்பது நீங்கள் வாசித்து அறிய வேண்டியது அவசியம்.

கணிதம், வேதியியல், அளவீடுகள், சமயோசித திறன் என அனைத்து விஷயங்களையும் நூலில் பயன்படுத்தி கதையையும் சுவாரசியப்படுத்தி உள்ளார் பாலபாரதி. இவரது உழைப்பிற்கு சான்றாக விடுகதைகளின் இறுதி முடிச்சை அவிழ்க்கும் ஸமீராவின் பெயரைக் கூறலாம். இஸ்லாமிய தளங்களில் இப்பெயருக்கான அர்த்தத்தை தேடியபோது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கதைகளை சொல்லி மகிழ்விப்பவள் என்று வந்தது. அதிலேயே தெரிந்துவிட்டது, பாலபாரதி எவ்வளவு கவனமாக தன் கதைகளை, இடங்களை, கதாபாத்திரங்களை உருவாக்குகிறார் என்று. விருது அங்கீகாரம் என்பதைக் கடந்து அர்ப்பணிப்பாக இயங்கும் மனம் நூலின் ஆசிரியருக்கு உள்ளதை அறிய முடிவதால், கதை தாண்டியும் ஆசிரியரை நம் மனம் தொடர்கிறது. இவரின் ஆமை புகுந்த கடல் முக்கியமான சிறார் நூல் என்பதையும் குறிப்பிட வேண்டும்.


- கோமாளிமேடை டீம்