கதை கேட்கிறதுக்கென ஒரு மனுசன்!




Image result for story


கதை சொல்லப்போறோம்!


வேலைக்கு எடுக்கும்போது கூட கேட்டார்கள். கதை, கவிதை எல்லாம் எழுதுவீர்களா? உடனே நேர்மையின் எவரெஸ்டாய், கட்டுரைகளை நேர்த்தியாக எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார் என்று சொல்லி விட்டேன். ஆனால் அதற்கப்புறம் கேட்டதெல்லாம் என்னுடைய வருங்கால உயரதிகாரியின் வாழ்க்கைக் கதை, அதோடு நான் எப்படி தங்கப்பதக்கம் சிவாஜியாய் நேர்மையாக எப்படி இருக்கவேண்டும் என்கிற கதைகள்தான்.

என் பச்சை மூஞ்சிதான் காரணமா என தெரியவில்லை. பேசிய பத்தாவது நிமிடம் தன் கதைகளை சொல்லி ஆறுதலை கேட்கிறார்கள். மே ஐ ஹெல்ப் யூ என ஒரு அப்பாவி பதவி வங்கியில் இருக்கும்.

அதே விஷயத்திற்கு முழு மனிதன் பிறந்திருக்கிறான் என்றால் அதற்கு பக்கத்தில் சமம் போட்டு என் பெயரைத்தான் எழுதவேண்டும்.

வின்சென்டின் மணி என்னப்பா கதைக்கு பிறகு, காலையில் பேப்பர் வாங்க போகும்போது முதல் ஆளாக ஆயா ஒருவர் மணி என்னப்பா என கேட்டுவிடுகிறார். சாபம் அப்படியே தொடருகிறதா என நினைத்தேன். நேற்றிரவு நிகழ்ச்சி அதனை உறுதி செய்தது.

நேற்று இரவில் வண்டி ஏற நின்று கொண்டிருந்தேன். நான்கு பேர் டாஸ்மாக் போதையில் தள்ளாடி வந்தார்கள். ஒதுங்கினேன்.  திடீரென ஒரு நொடியில் நடுவில் வந்தவன் பின்னால் வந்தவன் அடிவயிற்றில் எட்டி உதைத்தான். அவன் கீழே விழ, பின்னால் வந்தவர்கள் அவனை ஆட்டோவில் வைத்து கூட்டிப்போனார்கள்.

 நம் ஆக்சன் நாயகன், பீடியை ரிலாக்ஸாக பற்ற வைத்து என்னை அலட்சியமாக பார்த்து மணி என்னம்மா? என்றார். எட்டுண்ணே என ஓரமாய் ஒதுங்கிவிட்டேன். வின்சென்ட் மகாபாவி, நட்புக்காக கமர்கட் தின்னது குத்தமாடா? நானும் இனி டைம் சொல்லி சாவணுமா என தோன்றியது. ஆனால் ஆண்டவர் எனக்கு வேறு வேலைகளை அலாட் செய்திருந்தார். 


பொதுவான சுய அறிமுகம் என்பது வேறு. ஆனால் தன்னுடைய வாழ்க்கை கதையை இன்ச் பை இன்ச்சாக சொல்லி இரவிலும் என்னை அழவைத்தவர் இன்ப லட்சுமி என்கிற ஆயிஷா அலி.

நான் தங்கியுள்ள மேன்ஷனின் சமையல் வேலைக்காரர். இதைச்சொன்னால், என்னையும் கெட்ட வார்த்தையால் வைவார். பரவாயில்லை சமாளித்து கொள்கிறேன். அவர் பேசினால் முத்து கிருஷ்ணன் தெருவிலிருந்து கச்சேரி ரோடுக்கே சத்தம் கேட்பதுதான் பிரச்னை. அவர் கூடவே காது கேட்காத, ஆனால் தனக்கு காது நிச்சயம் கேட்கிறது என நம்பிக்கை கொண்ட அம்மாள் இருக்கிறார்.

ஆயிஷா அன்று தன் வாழ்க்கைக் கதையில் கூறியது அனைத்தும் பத்து மணிக்கு தொடங்கி பதினொன்றரை வரை பாதி தூக்கத்திலேயே கேட்டேன். அரசு, செல்போன் கம்பெனி எச்சரிக்கும் டெசிபல் தாண்டிய சத்தம் ஆயிஷாவின் வாயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. கதை இதுதான். அரபு நாடுகளான குவைத், கத்தார் வரை வேலை செய்து வந்தவரை அவரின் சக பணியாளர் அரசியல் செய்து வீழ்த்துகிறார் என்பதுதான் அவர் கூற வந்த தேவ செய்தி.

அவரின் கதையைக் கேட்டதும் முடிவு செய்துவிட்டேன். துயருற்று காது சிவந்த எனக்கு விண்ணரசு கிடைக்க ஏசுவிடம் அந்த கணமே அப்ளிகேஷன் போட்டேன். ரூமில் சும்மா இல்லாமல் டைனிங் ஹாலில் வந்து உட்கார்ந்தது மாபெரும் குற்றமாகிப் போனது. ஆயிஷா  என் அருகே உட்கார்ந்து நியூ இயர் இனிப்பை கொடுத்து பேச தொடங்கினார். இனிப்பே கசந்து போனது என்றால் கதை எப்படி இருக்கும் பாருங்கள்.

கணவர் குடித்துவிட்டு செவுளில் தினசரி சவட்ட, போடா மயிறு என கிளம்பி மகன் அப்துல்லாவோடு வந்தவர் ஆயிஷா. வீட்டு வேலைகள், வெளிநாட்டு வேலைகள் பார்த்தே பையனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார். இப்போது பேத்திக்கு மாப்பிள்ளை பார்த்து சீருக்கு பணம் சேர்த்தி வருகிறார்.

அவர்மேல் எந்த குற்றமுமில்லை. ஆனால் ஆப்பி நியூ இயர்ப்பா என பூரிப்பாக என்னை பார்த்து சொல்லும்போதுதான் சற்றே குலை நடுக்கமாகிறது. கதைகள் மறுபடியும் தொடங்கிவிடுமோ என்று திகிலாகிறது. மறுபடியும் இந்த கதைகளை வலைதளத்தில் திருப்பி விட்டுவிட்டேன். இது எத்தனை கதைகளாகி வருமோ? கடவுளே கடவுளே

ச.அன்பரசு
தொகுப்பு: மீனாட்சிராமன்,  பூங்கொடி