மருத்துவர்களுக்கு எதற்கு விடுமுறை? - ஒடிசா பரிதாபம்!
தோல் பாதிப்புக்காக அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவமனை கூட வேண்டாம் என்று ஞாயிறு ராயப்பேட்டை கிளம்பினேன். பொதுவாக எங்கள் ஊரில் அனைத்து நாட்களும் மருத்துவமனைகள் உண்டு. கொடுமுடி, சிவகிரி என இரண்டு மருத்துவமனைகளும்தான். ஆனால் ராயப்பேட்டையில் அப்படியில்லை. ஞாயிறு ஒருநாள் மட்டுமே எனக்கு விடுமுறை. நான் மற்ற வேலைநாட்களில் வந்து பார்ப்பது நடக்காத விஷயம்.
மருத்துவமனையில் பாதுகாவலரை அடையாளம் காட்டச்சொல்லி யோகா இயற்கை வாழ்வியல் மையம் நோக்கிச் சென்றேன். கதவு திறந்திருந்தது. உள்ளே நோயாளிகளின் இருக்கையில் ஒருவர் அமர்ந்து அங்கு பணியாற்றும் பெண் ஊழியருடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தார். நான் நுழைந்து மருத்துவரைத் தேடினேன். ஏன் என்கிறீர்களா? சித்த மருத்துவரைப் போல அடக்கமான மனிதர்களை எங்குமே பார்க்க முடியாது. அமைதியாக அறையில் சம்மணங்கால் போட்டு அகத்தியர் போல அமர்ந்துவிடுவார்கள். நாள்பட்ட வியாதிக்கார ர்கள் மட்டுமே வருவார்கள். அவர்களும் ஆறு மாதங்களுக்குள் காலாவதி ஆகிவிடுவார்கள்.இவர்களுக்கு வைத்தியம் செய்து அவரும் விரக்தியாகி விடுவார்.
உடனே ஊழியர் கேட்டார். என்னப்பா வேணும்? சித்தா டாக்டரைப் பார்க்கணும் என்றேன். லீவு நாளில் வந்து டாக்டரைக் கேட்கிறயேப்பா? இன்னிக்கு லீவு என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காவல், மருத்துவம் போன்ற துறைகளில் மாற்று மருத்துவர் போலீஸ்கார ர் வந்தால் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். தன்னிச்சையாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் விடுப்பு எடுத்தால் நோயாளிகள் சிகிச்சைக்கு எங்கு போவார்கள்?
அரசு இதுபோல சலுகை அளிப்பதால்தான், தனியார் மருத்துவமனைகள் பிரமாதமாக செயல்பட்டு கொள்ளையில் ஈடுபடுகின்றன. கேட்டால் அரசு மருத்துவமனைகளில் பிரமாதமான டாக்டர்கள் உண்டு என சில ஆர்வக்கோளாறுகள் கொந்தளித்து எழும். இது என்னுடைய சொந்தப்பிரச்னையாக மட்டும நினைக்கவில்லை. இப்படி திடீரென விடுமுறை எடுத்துக்கொண்டால் அவசர உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்வார்கள் என யோசித்தேன். அடுத்தநாள் இதே விஷயம் செய்தியாகவும் வந்துவிட்டது. ஒடிசாவில் இருபத்தேழு வயது பெண், கர்ப்பிணி. முதன்மை மருத்துவ மையத்திற்கு பிரசவத்திற்காகச் சென்றிருக்கிறார்.
அன்று பார்த்து மருத்துவமனை மூடியிருந்திருக்கிறது. என்ன செய்வார்கள்? கையில் காசில்லாத ஏழைகள். இரண்டு மணிநேரம் அங்கேயே காத்திருந்து பின் மரத்தின் கீழேயே குழந்தையை பிரசவித்திருக்கிறார். அங்கிருந்து அடுத்த மருத்துவமனை இருபது கி.மீ . தூரம். குழந்தை பிறந்து அழாமல் இருக்க, உடனே வண்டி பிடித்து அங்கே ஓடியும் பயனில்லை. குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது.
எப்படி இப்படி ஒரு அலட்சியம் மருத்துவர்களுக்கு மனதில் பிறக்கிறது என்று தெரியவில்லை. காவல்துறை, மருத்துவம் துறைகளில் சேரும்போதே தெரியாதா? அங்கு விடுமுறைகளுக்கு இடமில்லை என்று. அரசு சம்பளம் இனிக்கிறவர்களுக்கு, கடமையை நிறைவாக செய் என்றால் உடனே கொடி தூக்கிவிடுகிறார்கள். இதேபோல காவல்துறையும் ஆண்டில் இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றால் நாடு என்னாகும்? அதைக்கூட அரசு பரிசீலிக்கலாம். ஏனெனில் இறப்பது காசில்லாத சதைப்பிண்டங்கள்தானே? அமைச்சரின் மகன் இறந்தால்தான் இங்கு வேகத்தடை என்ற சமாச்சாரமே அரசு இலாகாவுக்கு நினைவு வருகிறது.
ஒடிசாவில் 28 சதவீத மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. கிராம மருத்துவமனைகளில் இதன் அளவு 90 சதவீதம். 1508 மருத்துவர்கள் தேவைப்படும் மருத்துவ மையங்களில் 253 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். அனைத்து வசதிகளையும் அரசு நகரங்களுக்கு மட்டுமே செய்யும் என்றால் கிராமத்தில் வசிப்பவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. குழந்தை இறப்பு என்பது சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. இதுபோல நிறைய சம்பவங்கள் ஊடக கவனங்களுக்கு வராமலே உள்ளன.
அரசு இனி மருத்துவர்களுக்கு தரும் சலுகைகளை கவனமான பரிசீலித்து கிராமங்களுக்கு பணிசெய்ய சம்மதிப்பவர்களுக்கு ஊதியம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கூடுதலாக்குவது அவசியம். அரசு சலுகைகளை அனுபவித்துவிட்டு பணி செய்யாமல் இருப்பவர்களை மருத்துவர் என்ற தகுதியிலிருந்து தகுதியிழப்பு செய்வது அவசியம். அரசு சலுகையில் படித்துவிட்டு தனக்கான சுயநலத்தை மட்டுமே தேடுபவர்கள், சமூகத்திற்கு அவசியமில்லை. மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் அதிக பணிச்சுமை என்பது ஒடிசாவில் மட்டுமல்ல; இந்தியா முழுக்கவே இந்த பிரச்னை உள்ளது. காரணம், சுகாதாரத்துறைக்கு இந்திய அரசு மிக குறைந்த தொகையை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதைக்காரணம் காட்டி கடமையை மறப்பதில் நியாயமில்லை. பிஜூ பட்நாயக், பாஜகவை எதிர்ப்பதோடு மக்கள் நலனைக் காப்பதிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் - தலையங்கம்