பெலுடா கதைகள் - பம்பாய் கொள்ளையர் மற்றும் தங்கக்கோட்டை!





Image result for சத்யஜித்ரே பெலுடா




புத்தக விமர்சனம்

பம்பாய் கொள்ளையர்கள் - தங்க கோட்டை
சத்ய ஜித்ரே
பெலுடா தொடர்கதை வரிசை
தமிழில்: வீ.பா. கணேசன்
பாரதி புத்தகாலயம்



இரண்டு நாவல்களும் சந்தேஷ் என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்த துப்பறியும் கதைகள்தான். 

பெலுடா, தபேஷ் என்ற இருவர்தான் இதில் நாயகர்கள். பெலுடா  எனும் பிரதேஷ் மித்தர் புகழ்பெற்ற உண்மை ஆய்வாளர். இவரின் உறவினர், சிறுவன் தபேஷ்.

பம்பாய் கொள்ளையர்கள் கதையில் எழுத்தாளர் லால்மோகன், ஒரு கதை எழுதுகிறார். அதில் மும்பையிலுள்ள சிவாஜி கோட்டை பற்றி பெலுடா தகவல் கொடுக்க, கடத்தல் கும்பல் தங்கியிருப்பதாக எழுதிவிடுகிறார். இதனைப் படிக்கும் கடத்தல்காரர், அவரைப் பின்தொடர்கிறார். அப்போது, அதிர்ஷ்டவசமாக அவரது கதையை படமாக தயாரிக்க மும்பையைச்சேர்ந்த கோரே என்ற தயாரிப்பாளர் இசைகிறார். அதற்கு மும்பைக்குச் செல்லும்போது, அவரின் கையில் சன்யால் எனும் மற்றொரு படத்தயாரிப்பாளர் பார்சல் ஒன்றை கொடுக்கிறார். அதனை மும்பையில் சிவப்பு சட்டைக்கார ரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் இப்பணியை பெலுடா விரும்பவில்லை. எழுத்தாளர் லால்மோகன் சின்ன உதவிதானே, அடுத்த கதையை சன்யால் வாங்கிக்கொள்கிறார் என்று கூறியிருக்கிறேன் என மகிழ்கிறார்.

ஆனால், பார்சல் மாற்றப்பட்டு விட லால்மோகனுக்கு மர்ம போன்கால்கள் வரத்தொடங்குகின்றன. இதன் விளைவாக, இரு கடத்தல் கும்பல்களுக்கு இடையில் நடக்கும் வன்முறையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவரருகில் எழுத்தாளர் லால்மோகனின் பெயர், தோற்றம் குறிப்பிட்ட சீட்டு கிடக்கிறது. லால்மோகன் போலீசின் சந்தேகப்பார்வையில் மாட்டிக்கொள்ள என்ன ஆனது நிலைமை? பெலுடா அவரைக் காப்பாற்றினாரா, யார் அந்த கடத்தல் கும்பல், சன்யால் என்பவர் யார் என்ற முடிச்சுகள் அவிழ்ந்தால் கதை சுபம்.

பரபரவென நகர்கிற கதைமொழி, பார்வைக்கேற்றபடி விசுவலாக எழுதப்பட்டுள்ளது. இதனால் மொழிபெயர்ப்பில் சில இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது. ஆனால் சத்யஜித்ரேயின் பரபரப்பான கதை நன்றாக இருக்கிறது.


தங்க கோட்டை!

தங்க கோட்டை எழுத்து மொழியில் எடுபடவில்லை. முழுக்க பார்வைக்கான எழுத்துதான்.இதில் தமிழ்மொழிபெயர்ப்பில் கதைக்கான வேகம் கிடைக்கவில்லை. கதையில் நிறைய விஷயங்களைச் சேர்த்து விட்டனர். குறிப்பாக, ஆள்மாறாட்டம், சண்டைக்காட்சிகள், ரயில் சண்டை, கோட்டை தேடிச்செல்வது, நண்பர் துரோகியாக மாறுவது என நிறைய விஷயங்களை சொல்லுவதால், தலையே கிறுகிறுக்கிறது. நான் சாத்தூர் காபிக்கடையில் டீக்குடித்து விட்டு வந்து படித்தும் விளங்கவில்லை. ஒருவழியாக பெலுடா டாக்டர் ஹஜ்ராவைக் கண்டுபிடித்ததும் அப்பாடா கதை முடிந்ததே என மகிழ்ச்சி வந்தது.

கதை, முன்ஜென்ம நினைவுடன் உள்ள முகுல் தங்க கோட்டையில் உள்ள புதையலைப் பற்றி பேட்டி அளிக்கிறான். இதன் விளைவாக, குற்றவாளி ஒருவன் அவனைக் கடத்திச்செல்கிறான். அதனை எப்படி பெலுடா, தபேஷ் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை. கூடவே ஜூனியர் கலைஞர்களாக லால்மோகன் கங்குலி, மந்தர்போஸ் ஆகியோர் பயணிக்கிறார்கள். கல்கத்தா, ராஜஸ்தான், ஜெய்ப்பூர் என விதவிதமான நிலப்பரப்புகளில் பயணிக்கிற கதை இது. கதாபாத்திரங்கள் குடிக்கிற ஒட்டகப்பால் டீயை நாமும் குடித்தால் தேவலை என நிறைய இடங்கள் சோதிக்கின்றன. இன்னும் கவனமாக குறிப்புகளை எழுதி மொழிபெயர்த்திருக்கலாம். பல இடங்களில் துப்பறியும் தகவல்களைக் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபோன்ற கதைகளை நமது ஆட்களும் எழுதலாம். இன்னும் நேர்த்தியாக வர வாய்ப்புள்ளது.



கா.சி.வின்சென்ட்

நன்றி: பாலகிருஷ்ணன்