வங்கிகள் இணைப்பு- பலமா, பலவீனமா?



Image result for bank merger
நியூஸ்18




வங்கிகள் இணைப்பு பொருளாதாரத்தை பலப்படுத்துமா?


அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார். இதில் முக்கியமானது, 27பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து 12 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஆகும். 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் வங்கி இணைப்பு அறிவிக்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் மாதத்தில் தேனா, விஜயா வங்கிகள் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதற்கு முன்பு, பாரத வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன.

 ”பலவீனமான வங்கிகளாக தனித்தனியாக இருப்பதற்குப் பதில், ஒருங்கிணைத்தால் பலம் பொருந்திய ஒரே வங்கியாக மாறும் ”என மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தார். இதில் கூறாத உண்மையும் ஒன்று உண்டு. அது கடன்சுமைதான்.
விஜயா வங்கி, வாராக்கடன் குறைவாகவும், லாபம் ஈட்டல் அதிகமும் கொண்டது. ஆனால் தேனா வங்கி, வாராக்கடன் விகிதம் அதிகம் கொண்டது. பரோடா, விஜயா ஆகிய இரு வங்கிகளும் தேனாவுடன் இணைக்கப்படும்போது, தேனா வங்கியின் வாராக்கடன் சுமையையும் மற்ற இரு வங்கிகள் பகிர வேண்டி வரும். 

வங்கிகள் இணைப்பு என்பது மின்னஞ்சல் இணைப்பு போல எளிதல்ல; இணைக்கப்படும் வங்கிகளின் இயக்குநர் குழு ஒன்றாக கூடி பேசுவார்கள். அதன் பின் பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெற்று, வங்கி இணைப்பு நடவடிக்கைகள் தொடங்கும். முறையாக வங்கிகள் இணைய ஆறு மாதங்கள் தேவை. 
வங்கிகள் ஒன்றிணைப்பால் கடன் வழங்குவது , சேவை ஆகியவற்றிலும் முன்னேற்றம் கிடைக்கும். மக்களுக்கு சேவைக் கட்டணங்கள் பெருமளவில் குறையும். உலகளவில் இந்திய வங்கிகள் வணிகரீதியாக போட்டியிட முடியும் என்று நிதிவட்டாரம் கூறுகிறது.  2016-17 ஆம் ஆண்டிலேயே வங்கிகள் இணைப்பு பேச்சு எழுந்தது.

அப்போது ரிசர்வ் வங்கி இயக்குநரான ரகுராம் ராஜன், ”ஆரோக்கியமான வங்கிகளை இணைப்பது வங்கிகளை வலுப்படுத்தும். ஆனால் வாராக்கடனால் தடுமாறும் வங்கிகளை இணைப்பது மற்றொரு வங்கியையும் பலவீனப்படுத்தும் ” என்று எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை நேர்காணலில் கூறினார். இவர் இக்கருத்தை கூறியபோது, ஒன்பது பொதுத்துறை வங்கிகள் 18 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் பிரச்னையில் சிக்கியிருந்தன. இதில் ஆறு வங்கிகளுக்கு கடன் கொடுப்பதற்கான உரிமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. தற்போது இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தனிநபர் உற்பத்தி அளவு 5% குறைந்துள்ளது.

பிரதமரின் கனவான 5 ட்ரில்லியன் டாலர்கள் கனவுக்கு, ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதம் என்பது எப்படி உதவும்?  இதுபற்றி நிதிக்கூட்டத்தில் பேசிய தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “கடந்த நிதியாண்டில் இருந்து மக்களின் தேவை குறைந்து, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. விவசாயத்துறை சரிந்ததால் வளர்ச்சி குறைந்துள்ளது” என்றார். கடந்த ஆண்டில் 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, தற்போது 3 சதவீதம் சரிந்து 5 சதவீதமாகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று அரசு தன் நிதிக்கொள்கையையும், ரிசர்வ் வங்கி பணக்கொள்கையையும் சீர்த்திருத்திக்கொள்வது மிக அவசியம்.

கூடுதல் தகவல்: உலகின் டாப் 100 வங்கிகளில் எஸ்பிஐ குழுமம் இடம்பிடித்துள்ளது. அதில் பிற வங்கிகளும் இனி இடம்பிடிக்கும் என்று இந்திய அரசு கூறியுள்ளது. மேற்சொன்ன பட்டியலில் சீனாவின் நான்கு அரசு வங்கிகள் இடம்பெற்றுள்ளன. வங்கிகள் இணைப்பு விஷயத்தில் நிறைய கிளைகள் மெல்ல குறைக்கப்பட்டு பெரிய வங்கிக்கிளைகளாக இந்த வங்கிகள் மாறும். இதன்மூலம் இதன் நிர்வாகச்செலவுகள், ஊழியர் ஊதியம் ஆகியவை மெல்ல குறைக்கப்படும். இச்செலவுகளைக் குறைக்காமல் வங்கிகள் இணைப்பு வெற்றியடையாது என்பதே வரலாறு உண்மை.


தகவல்:ET,TH

வெளியீட்டு அனுசரணை - தினமலர் பட்டம்

நன்றி: பாலகிருஷ்ணன்




பிரபலமான இடுகைகள்