ஜியோவுக்கு மூன்று ஆண்டு நிறைவு! - இஷா அம்பானியின் கனவு!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவாகிறது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா, இந்த நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு காரணம், யேல் பல்கலையில் படித்தபோது விடுமுறைக்கு இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் இணைய இணைப்பு மிக மெதுவாக இயங்குவதாக தந்தை முகேஷிடம் கூறினார். அதுவே பின்னர் ஜியோவாக குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா என மாறி இன்று இந்தியாவை ஆக்கிரமித்துள்ளது. மேற்சொன்ன சம்பவம் நடந்தது 2011 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டு தனது துணிகர பிசினஸ் முயற்சிக்காக லண்டனில் விருது பெற்றுவிட்டார் முகேஷ்.
பேசும் அழைப்புகள் இலவசம். டேட்டாவுக்கு குறைந்த காசு என்ற திட்டம் ஏர்டெல் உள்ளிட்ட கம்பெனிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. எதிர்பார்த்தது போலவே இந்தியர்கள் ஜியோவைத் தேர்ந்தெடுத்தனர். இன்று இந்திய அரசு அமைப்புகள் கூட ஜியோவை தங்களது தொலைபேசி நிறுவனமாக ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்த நேரத்தில் உங்கள் மூளையில் பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் என்ற நிறுவனங்களின் பெயர்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
ஜியோ என்பதற்கான லோகோவும இஷாவின் ஐடியாதான். பழமையான ரிலையன்ஸ் லோகோவை கடாசிவிட்டு ஜெர்மன் டிசைனர்களோடு உட்கார்ந்து உருவாக்கிய லோகோதான் நீங்கள் பயன்படுத்தும் வியக்கும் ஜியோ லோகோ. இந்தியாவின் முக்கியமான எட்டு திருவிழாக்களை உள்ளடக்கிய நிறங்களை இந்த லோகோ கொண்டுள்ளது. இந்தியாவின் பன்மைத்தன்மைக்காக குடும்பத்திடம் போராடி ஜியோவை இஷா உருவாக்கியுள்ளார். தற்போது இணையம், இசை, மருத்துவம், கல்வி என பதினெட்டுக்கும் மேற்பட்ட சேவைகளை ஜியோ வழங்குகிறது. அடுத்தகட்டமாக ஜியோ ஃபைபர் இணைய சேவை விரைவில் தொடங்கவிருக்கிறது. சென்னையில் பல இடங்களில் சோதனை இணைய இணைப்பு, முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.
ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி என்ற லட்சியத்தை நோக்கி ஜியோ நடைபோட்டு வருகிறது.