என்னைக்கொல்பவன் யார்? - பியோம்கேஷை மிரட்டும் புதிய வழக்கு!
அனிர்பன் பட்டாச்சார்யா, சுப்ரதா தத்தா, ரிதிமா கோஷ் சக்ரபோர்த்தி நடிக்கும்
பியோம்கேஷ் சீசன் 2
இயக்கம் சௌமிக் சட்டோபாத்யாய
இம்முறை வித்தியாசமான வழக்கை பியோம்கேஷ் எதிர்கொள்கிறார். தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தே அதனைக் கண்டுபிடிக்க காசு கொடுக்கிறார் ஊதாரி ஸ்த்ரீ லோலரான சத்ய காம்தாஸ். தான் இறக்கப்போகிறோம் என்பதை விட யார் மூலம் இறக்கப்போகிறோம் என்பதை அறியவே அவர் விரும்புகிறார்.
அப்போது பணத்தேவையில் இருந்த பியோம்கேஷ் ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு, துப்பு துலக்க சுசித்திரா எம்போரியம் செல்கிறார். அங்கு, அதன் முதலாளியான தாஸின் அப்பாவைச் சந்திக்கிறார். ஆனால் அவர்களின் வருகையைக் கண்டுபிடித்துவிட்ட தாஸ், அவர்களுக்கு அவராகவே கம்பளிக் கோட்டை தேர்ந்தெடுத்து 230 ரூபாய் பில்லை 100 ரூபாயாக குறைத்து தருகிறார். கூடவே என்னை பின்தொடர்ந்து வராதீர்கள் என எச்சரிக்கிறார்.
அப்போது தாஸின் காதலில் விழுந்து, கற்பைப் பறிகொடுக்கிறார் அன்னபூர்ணா தேவி. அவரின் கடையில் வந்து நின்று கல்யாணத்திற்காக கெஞ்சுகிறார். அங்கு கண்ணீர் மல்க நிற்பவருக்கு, உடனே புடவை ஐந்தைக் கொடுத்து அவரை அனுப்புகிறார் தாஸ். இதனை கடையே பார்க்கிறது. பியோம்கேஷ் மட்டும் பார்க்காமல் இருப்பாரா? விசாரித்தவரை ஊரே மறைமுகமாக தாஸ் தனியாக சிக்கினால் கொன்றுவிட நினைத்துக்கொண்டிருப்பதைத் தெரிந்துகொள்கிறார்.
இறுதியில் அவர் தாஸை கொல்ல நினைப்பவர்களிடமிருந்து காப்பாற்றினாரா? அவரை கொல்ல நினைத்தவர்கள் யார்? தாஸின் குடும்பம் ஏன் தனித்தனியாக விட்டேற்றியாக இருக்கிறார்கள்? ஜவுளிக்கடையில் பங்குதாராக தாஸ் இருக்கும் ரகசியம் ஏன்? என 53 நிமிடங்களில் அனைத்து விஷயங்களையும் சொல்கிறார் சௌமிக் சட்டோபாத்யாய.
கலை வடிவமைப்பு பிரமாதமாக இருக்கிறது. தமிழ் டப்பும் மோசமில்லை. என்ன கவிதை வரும்போது மட்டும், கேட்காதது போல இருந்து விடுங்கள். அவ்வளவுதான். மற்றபடி ரிதிமா கோஷின் நாசூக்கான அழகை ரசித்துக்கொண்டே சத்யகாம தாஸில ஸ்த்ரீலோல செயல்பாடுகளை ரசிக்கலாம்.
அதில் கொலைகாரர் பயன்படுத்தும் வெள்ளிக்காசு உத்தி ஆஹா சொல்ல வைக்கிறது. இறுதிப்பகுதியில் உண்மை கண்டறிந்ததும் ஆணவமாக பியோம்கேஷ் பகபகவென சிரிப்பது பொருத்தமில்லாததாக இருக்கிறது. பியோம்கேஷ் ஆயிரம் ரூபாய் செலவில் கண்டுபிடிப்பதை, அரசு சம்பளத்தில் போலீஸ்கார ர் யூகமாகவே கூறிவிடுவது கதையில் உதைக்கிறது.
சட்டத்தை மீறிய தர்மத்திற்காக பியோம்கேஷ் தனது விதிமுறையை தளர்த்திக்கொள்கிறார். அது எதற்கு என சீரீஸ் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
கோமாளிமேடை டீம்