சமூகப்பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் பலகை விளையாட்டுகள்!






Keywords Letters, Scrabble, Word



சமூகப்பிரச்னைகளைப் பேசும் விளையாட்டுகள்!

செய்தி: தற்போது இளைஞர்களால் விரும்பி விளையாடப்பட்டு வரும் விளையாட்டுகள் சமூகப்பிரச்னைகளையும் கவனப்படுத்தி வருகின்றன. அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்களையும் மேம்படுத்த உதவுகின்றன.

பெங்களூருவைச் சேர்ந்த ஃபீல்ட்ஸ் ஆஃப் வியூ (Fov) நிறுவனம், பலகை விளையாட்டுகளை(Board games) உருவாக்கி வருகிறது.இதில் குப்பைகள் பெருகுவது, பாலின பாகுபாடு, மக்கள் இடம்பெயர்வு ஆகிய சமூக பொருளாதாரப் பிரச்னைகள்  மையமாகி உள்ளன. இதில் ரப்பிஷ் எனும் விளையாட்டு, திடக்கழிவை நிர்வகிப்பவர்களாக நான்கு அல்லது ஆறுபேர் விளையாடும் ஆட்டம்.

 இதில் கிடங்கு முழுக்க குப்பைகளாக நிறைந்தால் ஆட்டக்காரர்கள் தோற்றுவிட்டனர் என்று பொருள். இதில் விளையாடுபவர்கள் பணம், ஆட்கள், தகவல் என பல்வேறு விஷயங்களையும் பயன்படுத்தலாம். ”இந்த விளையாட்டு மக்கள் கழிவுகளை எப்படிக் கையாள்வது எனப் புரிந்துகொள்வதற்காக உருவாக்கினோம்” என்கிறார் ரப்பிஷ் விளையாட்டை உருவாக்கியவரான பரத் பாலவல்லி.

இதில் மேட் டு ஆர்டர் எனும் விளையாட்டு பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிறது. மேற்கத்திய நாடுகளில் கோட்நேம்ஸ் அண்ட் பாண்ட்டெமிக் ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இந்தியாவில் தற்போதுதான் இந்த விளையாட்டுகளுக்கான கிளப்புகள் தொடங்கப்பட்டு பிரபலமாகி வருகின்றன. தற்போது இந்திய பலகை விளையாட்டுகளின் சந்தை 300 கோடியாக (2017படி) வளர்ந்துள்ளது. டெக் உலகில் மனிதர்களை இணைக்கும் புள்ளியாக இந்த விளையாட்டுகள் மாறியுள்ளன. நம்மைச் சார்ந்துள்ள உலகம் இயங்கும் விதம், நடப்புச் செய்திகளையும் அறியக்கூட இந்த விளையாட்டுகள் உதவுகின்றன. விளையாட்டு வெளியாகி புகழ்பெற்றால் மட்டுமே நிதி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சி நிலையில் நிதி கிடைப்பது கடினமாக உள்ளது.
அதிலும் தற்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டுக்கான ஐடியா மட்டும் இருந்தால் போதும். கிக்ஸ்டார்டர், விஸ்பெரி எனும் வலைத்தளங்களின் மூலம் நிதிதிரட்டி விளையாட்டை சந்தைப்படுத்தும் வாய்ப்பு இன்று உள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த பர்ஸ்பெக்டிவிடி எனும் தன்னார்வ நிறுவனம், கல்வி நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு ஊதியமும் வழங்குகிறார்கள்.

இதைப்போன்றே பிளாக்ஸ் (flocks) , 8இன்ஃபினிட்டி(8Infinity) உள்ளிட்ட நிறுவனங்கள்  பலகை விளையாட்டுகளை உருவாக்கி வருகின்றன.  சமூக அக்கறையையும், கல்விக்கான ஊக்கமும் அளிப்பது இவர்களின் தனித்துவமாக உள்ளது. “திறன் ஊக்குவிப்புக்குமான விளையாட்டுகள் ஒரு நாள் இரவில் எதையும் மாற்றிவிடாது. விளையாட்டுகளுக்கான ஆராய்ச்சி, அதன் மையம் ஆகியவற்றைக் கவனித்து உருவாக்கி பயிற்சி பெற்றால் கிடைக்கும் பயன்கள் அதிகம்” என்கிறார் பரத் பாலவல்லி. 

தகவல்: Forbes india

வெளியீடு - தினமலர் பட்டம்