ஊட்டச்சத்து பற்றிய கவனத்தை இந்திய அரசு கைவிட்டுவிட்டது! - சுமன்த்ரா ரே!




Related image
வலதுபுறம் சுமன்த்ரா ரே




இந்தியாவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. அதேசமயம் சில மாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர். அதில் தமிழ்நாடும் ஒன்று. போஷன் அபியான் எனும் ஊட்டச்சத்து திட்டத்தை நிறைவேற்றி அண்மையில் மத்திய அமைச்சரிடம் பரிசும் பெற்றாயிற்று. இதன் பொருள், இந்தியா இத்திட்டத்தில் வெற்றிபெற்றது என்பதல்ல.

இதுபற்றி இங்கிலாந்திலுள்ள சுமன்த்ரா ரேயிடம் பேசினோம். இவர் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையம் எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்தியாவில் மூன்றில் ஒருபங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு என்ன?

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பது தனிப்பிரச்னையல்ல. நிறைய பிரச்னைகள் இதில் ஒன்றாக இழைகளாகப் பின்னிப்பிணைந்துள்ளன. பொதுவாக ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பதை புரதப்போதாமை என குறிப்பிடலாம். பல்வேறு வைட்டமின்கள் பற்றாக்குறை எனலாம். இதற்கு குழந்தைகள் பிறக்கும் குடும்பத்தின் வறுமையும் முக்கியக்காரணம். அங்கு சாப்பிட ஏதுமே கிடைப்பதில்லை. எனவேதான் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஒற்றைப் பிரச்னையாக அணுகுவது தவறு என்று கூறினேன்.

குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது ஊட்டச்சத்தான உணவுகளைக் கொடுப்பதே இதற்குத் தீர்வு. ஆனால் நம் கொள்கைகளை சரியாக வகுத்தால் இதற்கான தீர்வுகளை காண முடியும்.

இந்தியாவின் மதிய உணவு திட்டத்தைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?

இது பாராட்டப்பட வேண்டிய திட்டம். உள்ளூர் பொருட்களை வைத்து பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் இத்திட்டத்தில் புரதம், நுண்ணூட்டச்சத்துகளின் அளவு பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இத்திட்டம் மிகப்பெரியளவு செய்யப்படுவதால், இதனைக் கண்காணித்து தரத்தை அளவிடுவதில் தடுமாற்றம் உள்ளது. தற்போது ஆசிரியர்கள் இத்திட்டத்தை கண்காணிக்கின்றனர். பிள்ளைகளின் பெற்றோரும் இதன் உள்ளே வரவேண்டும் என்பது என் ஆசை.

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து போதாமையை அரசு கண்டுகொள்ளாதது ஏன்? 

காரணம் மருத்துவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இந்த விவகாரத்தில் இன்னும் ஒன்றுபடவில்லை. முன்பு இந்த விஷயத்தில் தெளிவு இருந்தது. தற்போது சில பத்தாண்டுகளாக அரசு இதனைக் கண்டுகொள்வதில்லை. ஊட்டச்சத்து தொடர்பான ஒவ்வொரு பிரச்னைகளையும் நம்மால் தீர்க்க முடியாது. உணவு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்தாலே பல்வேறு குறைபாடுகளை நம்மால் முன்கூட்டியே தடுத்துவிட முடியும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கும் நீருக்கும் என்ன தொடர்பு? 

இந்தியாவில் தூய குடிநீர் என்பது மெல்ல குறைந்து வருகிறது. ஊட்டச்சத்தான உணவுக்கு நீர் முக்கியமானது. அதிலுள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடல்நலத்தை குலைக்கும் முக்கியக் காரணி. நீங்கள் இந்த இரண்டு விஷயத்தையும் பிரித்து ஊட்டத்து பற்றாக்குறை பற்றி பேச முடியாது.


நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 

ஆங்கிலத்தின் - சஞ்சீவ் வர்மா