வேலை செய்யுங்க மக்கா! - மயிலாப்பூர் டைம்ஸ்!
சப்பாத்தியா, அப்பளமா? |
மயிலாப்பூர் டைம்ஸ்!
யாராவது வேலை செய்யறீங்களா?
மயிலாப்பூரில் வாழ்ந்து விட்டு சோற்றை பற்றி எழுதாமல் எப்படி இருப்பது? நானும் லஸ்கார்னர் முருகன் கடை , தள்ளுவண்டி சரவணன் கடை, ரெக்ஸ் கடையருகே உள்ள சைவத்திருநீறு வைத்த காசாளர் கடை, அதற்கு எதிரில் உள்ள இளைஞர்கள் கடை, 30 ரூபாய் பிரியாணி கடை , தங்கம் ஹோட்டல் என சாப்பிட்டாயிற்று. ஆனால் கூட திருப்தி வரவில்லை.
காரணம், வாங்குகிற காசுக்கான நேர்மை குறைந்து வருவதுதான். மயிலாப்பூரிலுள்ள பஜார் தெருவில் பல்வேறு கடைகள் இருந்தாலும் சில மாதங்களாக புதிய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. (அ)சைவம் என இரண்டுமே உண்டு. அப்போதுதானே காசு பார்க்க முடியும். ஆனால், அதற்கு உழைக்க வேண்டுமே! புதிய கடை. வெளிச்சம் அதிகமாக இருக்கிறது. அப்போது வேலை குறைவாக நடக்குமே என்று நினைத்தேன். அதேபோல ஆயிற்று. மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இரண்டு சப்பாத்தி இரவு உணவுக்கு வாங்க வந்தேன். முதலில் கல்லாவில் உட்கார்ந்திருப்பவருக்கு மரியாதை செய்யவேண்டுமே என்று அவரிடம் போனேன். கருப்பு நிறத்தில் பிள்ளையார் போல இருந்தார். லூசு என்றால் கூட அதனால் என்ன என்ற த த்துவத்தெளிவு அவர் முகத்தில் பார்த்தேன். அதற்காக அந்த வார்த்தையை சொல்லிவிட முடியுமா? ரெண்டு சாப்பாத்தி பார்சலுங்ணா என்றேன்.
அப்போது அவரது முகத்திலிருந்து பிரபுத்துவ களை குறைந்தது. மாஸ்டர் ரெண்டு சப்பாத்தியை கல்லில் போடுங்க என்று காசுக்கு கை நீட்டினார். கொடுத்தேன். உடனே அவரது முகத்தில் மீண்டும் அமரத்துவச் சிரிப்பு வந்து உட்கார்ந்தது. திரும்ப சப்பாத்தியை பார்த்தால் கிடைக்கும் நம்பிக்கை வந்தது. சேரில் உட்கார்ந்தேன். அடுத்து சர்வர் ஐயா என்னிடம் வேகமாக வந்தார். மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டவர் போல முகம் இருந்தது என்ன வேணும்? ரெண்டு சப்பாத்தி பார்சல் என்றேன்.
அவ்வளவுதான் அப்படியே ரவுண்டானா சுற்றிவரும் பஸ்ஸாக சுற்றிச்சென்றுவிட்டார். சப்பாத்தி கல்லில் கிடக்க ஒரு பயலும் பார்சல் கட்டுவதாக தெரியவில்லை. கடைக்குள் சாப்பிடுபவர்களை வேலையாட்கள் தெலுங்கு படம் போல நடந்துகொண்டிருந்தார்கள். எங்கு போகிறார்கள் என்று தெரியவில்லை. பார்சல் மானாவாரியாக கட்டி எடுத்துச் சென்றனர்.
பார்சல் கட்டியவர்கள் அனைவரும் கல்லாவில் இருந்தவரை ஏனோ பொறாமையாக பார்த்துக்கொண்டிருந்தனர். கவர்னர் பதவிக்கு பரிந்துரைத்திருப்பது போல வெள்ளை சட்டைக்காரர் முகத்தில் சிரிப்பு மாறவே இல்லை.
அடுத்து உள்ளிருந்து வேகமாக வந்த தாடிக்காரர் எனக்கு யாரையோ நினைவூட்டினார். எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று நினைத்தேன். பின்னர், தம்பி என்ன சொல்லியிருக்கீங்க என்று அக்கறையாக கேட்டார். சப்பாத்தி கிடைச்சிரும்போல என்று ரெண்டு சப்பாத்தி பார்சல் என்றேன். அதை அவர கவனிக்கவே இல்லை. சாப்பிடவா என்றார். உடனே எஸ்பிஎஸ்ல வேலை செஞ்சிட்டு இருந்தீங்க இல்ல என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் வெளியே போய்விட்டார்.
அடுத்து சிறிது நேரத்தில் அருகில் நின்ற சிறுவன் அதே கேள்வியை மீண்டும் கேட்டார். எனக்கு இந்த ஹோட்டல் வந்ததே தவறு என்று தோன்றியது. ரெண்டு சப்பாத்தி பார்சல் என்றதும், உடனே சென்று பார்சல் கட்டத் தொடங்கினார். ஒரே ஒரு தவறு நேர்ந்துவிட்டது. சாம்பார் கட்டுவதற்கு பதிலாக சிக்கன் குருமாவை நேர்த்தியாக கட்டிக்கொடுத்துவிட்டார்கள்.
சப்பாத்தியின் தரம் இருக்கிறதே, அப்பளம் போல மாஸ்டர் சுட்டிருந்தார். உடைத்தே சாப்பிட்டேன். அம்பிகா ரைஸ் பேஸ்ட் இருக்க என்ன கவலை? கடையின் யோக்கியம் தெரிந்துவிட்டதல்லவா? இனி அந்தப் பக்கம் போவோம்.
தெரிந்த முகம் என்று கூறினேன் அல்லவா? அவர் வேறு யாருமல்ல; மேற்பத்தியில் கூறிய தங்கம் ஹோட்டலில் பணிசெய்தவர்தான். அந்த ஹோட்டலை மூடியபின் அண்ணன் இங்கு வந்துவிட்டார். பஜார் ஹோட்டலில் வேலையை விட அதைச் செய்வதான பாவ்லா அதிகம். எவ்வளவு நாள் ஓடும் என்று தெரியவில்லை.
சோறு சாப்பிடும் விஷயத்தில் சம்பாதனை அதிகம். ஆனால் நியாயமாக நேர்த்தியாக செய்பவர்கள்தான் புகழ்பெறுவார்கள். அதில் வள்ளலார் போன்ற உணவகங்கள் எவ்வளவோ தேவலை. அனைத்தையும் தருகிறோம் என இழுத்துப்போட்டு தொடங்கி எதையும் உருப்படியாகச் செய்வதில்லை. எதற்கு இந்த வேலை?
குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை லட்சியமாக கொண்டு வேலை பார்ப்பது நல்லது. அவர்களுக்காக மட்டுமேனும் உழைத்து காசு பெறலாம். அனைவருக்கும் என்பது இந்தக்காலத்தில் வேலைக்காகாது.