ஆசிரியரிடம் நான் சொன்ன பொய் - அனுபம்கேரின் குரு மரியாதை!



Image result for anupam kher biography


பாஜக ஆதரவாளர், படுகொலைகளை ஆதரிப்பவர்  என பல தூற்றுதல்கள் இருந்தாலும் நாடகம், சினிமா கதாபாத்திர விஷயங்களில் அனுபம் கேரின் திறமையை யாரும் மறுக்க முடியாது. அப்படி கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிப்பவர், டெல்லி நாடகப்பள்ளியின் முன்னாள் மாணவர்.

சிம்லாவைச் சேர்ந்த சிறுவன் உலகப் புகழ்பெற்ற திரை நட்சத்திரமாக உருவாகிறார் என்பது புதுமையான ஒன்றுதானே. பத்து வயதில் எனது வாழ்க்கையை எழுதி வைக்கத் தொடங்கினேன். எனது வாழ்க்கையை நூல் வடிவில் மக்களுக்கு வழங்கவே விரும்பினேன் என்று கூறியுள்ளார்.

1955 ஆம் ஆண்டு பிறந்த அனுபம் கேர், இன்று 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்கு பரிசாக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் அண்மையில் தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இதில் தேசிய நாடகப்பள்ளி காலத்தில் தனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்பகுதி பிரமாதமாக எழுதப்பட்டுள்ளது.

நாடகம் பற்றிய ப்ராஜெக்ட். ஆசிரியரிடம் கொடுக்க வேண்டிய நேரம். ஆனால் என்ன காரணத்தாலோ அனுபமால் எழுத முடியாமல் போய்விடுகிறது. ஆனால் குறிப்பிட்ட வகுப்பிற்கான ஆசிரியர் உறுதியாக சொல்லிவிட்டு போயிருக்கிறார். யாராவது எழுதாமல் வந்தால் நீங்கள் படிப்பை கைவிட்டு வீட்டுக்கு போவதுதான் நடக்கும் என்று. ஆனாலும் அனுபமால் குறிப்பிட்ட நேரத்தில் எழுத முடியவில்லை. நான் படிப்பை விட்டுவிடுகிறேன் என நண்பனிடம் கதறுகிறார். நண்பர் பொறு, ஆசிரியரிடம் தனிப்பட்ட முறையில் கூட மன்னிப்பு கேட்டுவிடலாம். அவசரப்படாதே என்கிறான்.

அனுபமுவுக்கு அந்த நொடி அந்த யோசனை சரியென தோன்றுகிறது. பின்னால் அதனால்தான் நடிகரானோம் என்பதையும் அவர் நினைத்துப் பார்க்கிறார்.

வகுப்பில் கோபக்கார ஆசிரியர், யார் ப்ராஜெக்டை செய்யவில்லை என்று மீண்டும் கேட்கிறார். அப்போது, அதற்கு யாரும் பதில் கூறவில்லை. அனைவரும் செய்துவிட்டதாக கூறுகிறார்கள். அனுபமும் பயத்துடன் செய்துவிட்டதாக கூறுகிறார். மெல்ல அனுபமைப் பார்க்கும் ஆசிரியர் புன்னகையுடன் கடந்துவிடுகிறார். பொய் சொன்ன குற்றவுணர்வில் அன்று நண்பனின் உதவியுடன் ப்ராஜெக்டை முடித்துவிடுகிறார் அனுபம் கேர்.
பின்னர் அனுபம் கேர்,  படிப்பை நல்லபடியாக முடித்து சினிமாவில் நடிக்கத் தொடங்குகிறார். புகழ்பெறுகிறார். பின்னொருநாள் தன்னுடைய ஆசிரியரைச் சந்திக்கிறார். அவருக்கு இவரது பெயர், யார் என்பதே மறந்துவிட்டிருக்கிறது. அப்போது அந்த கோபக்கார ஆசிரியர், நாடகப்பள்ளியை விட்டு வெளியேறி தனியாக நாடகங்களை எழுதி இயக்கி வந்தார்.

அப்போதும் தான் பொய் சொன்னது அனுபமுக்கு மனதில் உறுத்தலாகவே இருக்கிறது. அதனை ஆசிரியரிடமும் கூறுகிறார். சற்றே யோசித்துப் பார்த்த ஆசிரியர், அன்று உன்னிடம் நான் கடுமையாக பேசி வெளியேறச்சொல்லியிருந்தால் இன்று நீயும் நானும் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காதுதானே? அன்று நீ பொய் சொன்னாய் என்று எனக்குத் தெரியும் என்று கூறிவிட்டு தன் மாணவருடன் சேர்ந்து மது அருந்துகிறார்.

பெரிய விடுதலையை மனதில் உணர்கிறார் அனுபம் கேர். மகத்தான மன நிம்மதியுடன் அனுபமும் ஆசிரியருடன் சேர்ந்து மது அருந்துகிறார். இன்று நான் நிறைய குடிக்கிறவனாக மாறிவிட்டாலும்  அன்று நான் மதுவை நினைத்தே பார்க்காதவனாக இருந்தேன் என்கிறார்.


நன்றி: டெக்கன் கிரானிக்கிள்






பிரபலமான இடுகைகள்