ஆட்டிசக்குழந்தைகளுக்கான வழிகாட்டல்! - எழுதாப் பயணம்
புத்தக விமர்சனம்!
எழுதாப்பயணம்
லஷ்மி பாலகிருஷ்ணன்
கனி புக்ஸ்
ரூ.100
இந்த நூல் அனைவரும் படிக்கவேண்டிய நூல். காரணம் பேசியுள்ள பொருள் ஆட்டிசம் தொடர்பானது என்பதால்தான்.
சாதாரணமாக ஆட்டிசம் என்பதை பொதுப்படையாக ஒருவர் பேசுவதையும், அதற்கான தீர்வுகளை முன்வைப்பதும் எளிது. காரணம், இந்த விஷயத்தை அவர் மூன்றாவது நபராகத்தான் பார்க்கிறார். ஆனால் அதே பிரச்னையை அவர் தினசரி சந்திப்பவராக இருந்தால் எப்படியிருக்கும்? இடதுசாரி சிந்தனையாளரான குழந்தை இலக்கிய எழுத்தாளரான பாலபாரதி (பாலகிருஷ்ணன்) தினசரி சந்தித்துக்கொண்டிருப்பது இத்தகைய சூழ்நிலையைத்தான். அவரின் பிள்ளை கனிவமுதன் ஆட்டிசக்குழந்தை.
பாலகிருஷ்ணனின் மனைவி லஷ்மி இந்த நூலை, ஒரு தாயாக இருந்து எழுதியுள்ளது இதன் சிறப்பம்சம். ஆட்டிசம் என்பதை என்னவென்றே தெரியாமல் உள்ளவர்கள் அநேகம்பேர். இதற்கான பள்ளிகள் இன்று மெல்ல உருவாகி வளர்ந்து வருகின்றன. இக்குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதை ஏராளமான டிகிரிகளை தங்கள் பெயரின் பின்னால் கொண்டவர்கள் கூட அறிந்திருப்பதில்லை.
அதைத்தான் இந்த நூலில் லஷ்மி மிக அழுத்தமாக கோடிட்டு காட்டியிருக்கிறார். தங்கள் மகனைப் பார்த்துக்கொள்ள, தெரபிக்காக அலைந்து திரிந்து ஆட்டிசம் பற்றி கற்றுக்கொண்டிருக்கிறார். அந்த வாழ்க்கை நம் கண்முன்னே நூறு பக்கங்களில் விரிகிறது.
நூலை வாசித்துவிட்டு இளைப்பாறுதலுக்காக கண்களை மூடினாலும் கூட கண்ணீர் நம் கண்களில் நிற்பதில்லை. அத்தனை துயரங்களை லஷ்மி - பாலகிருஷ்ணன் தம்பதியினர் சந்தித்துள்ளனர். சிறப்புக் குழந்தைகளுக்கான உரிமை கோரல்கள் அவர்களுக்கு மட்டுமல்ல; அவர்களையொத்த பிற சிறப்புக் குழந்தைகளுக்குமானது என்ற வகையில் அவர்கள் போற்றத்தக்கவர்கள். லஷ்மி, தன் குழ்ந்தைக்கு தெரபி அளிக்கும் போராட்டத்தோடு, சிறப்புக்குழந்தைக்கான கல்வியையும் பெற்றுள்ளார் என்பது சிறப்பு.
பொதுவான ஆட்டிசம் பற்றி புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறியவும் இந்த நூல் உதவியாக இருக்கும். மற்றபடி தங்களுடைய குழந்தையை சமூகத்தில் காலூன்றி நிற்கவைப்பது பெற்றோரின் பொறுமையிலும் நிதான நடவடிக்கையிலும்தான் இருக்கிறது.
ஆட்டிசக்குழந்தைகளை அரசுப்பள்ளியில் அனுமதிக்காத ஈகோ பிடித்த ஆசிரியர்களைப் பற்றி பேசுகிற பகுதி, மிகவும் வேதனை தந்தது. தங்கள் கடமையைச் செய்ய இவ்வளவு அலுப்பா? தெரபி என்றபெயரில் பணம் பிடுங்குவது, அடிப்பது என்ற விஷயங்களை மூன்றாவது நபராக வாசிக்கும்போதே கண்கள் கசிகிறது என்றால் இதனை நேரடியாக அனுபவித்த எழுத்தாளருக்கு உண்மையில் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கவே கஷ்டமாயிருக்கிறது.
ஆசிரியர்கள் கைவிட்டாலும் கனிக்கு நீர் கொடுக்க முயன்ற சக மாணவியின் முயற்சி போன்ற நம்பிக்கைதான், இந்த உலகில் ஆட்டிசக்குழந்தைகளுக்கு மிச்சமிருக்கும் ஒரே ஆறுதல். டவுன் சிண்ட்ரோம், மனநல குறைபாடு, கற்றல் குறைபாடு என பல்வேறு சிக்கல்களைக் கொண்டவர்களை எப்படி அழைப்பது என்று கூட ஊடகங்களில் இன்னும் தெளிவில்லை. இந்நிலையில் இதுபோன்ற நூல்கள் அத்தகைய தெளிவை உருவாக்கும் என நம்பலாம்.
கோமாளிமேடை டீம்