கற்பைக் கேள்வி கேட்கும் திருமணச் சான்றிதழ்!
வங்கதேசத்தில் ஐந்து ஆண்டுகளாக போராடி, திருமணச்சான்றிதழில் உள்ள குமாரி என்ற சொல்லை நீக்கியுள்ளனர். குமாரி என்பது, கல்யாணப் பத்திரிக்கையில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அங்கு அரசின் திருமணச்சான்றிதழில் இருப்பது விவகாரமானது. காரணம், குமாரி என்பது பெண்ணின் கன்னித்தன்மையைக் குறிக்கிறது.
1974 ஆம் ஆண்டு வங்கதேச திருமணம் மற்றும் விவாகரத்து சட்டப்படி, மேற்சொன்ன விஷயங்கள் கறாராக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இஸ்லாமியர்கள் திருமணம் என்பதால், அரசு இவற்றை பெரிய மாறுதலுக்கு உட்படுத்தவில்லை. அங்கு செயல்படும் பிளாஸ்ட், மொகிலா பரிஷத், நாரிபோகோ ஆகிய அமைப்புகள் பெண்ணை குமாரி - திருமணமாகதவர் அல்லது கற்புள்ளவர் என்பதை மாற்றி ஒபிபாகிதோ என்ற வார்த்தையை அச்சொல்லுக்கு பதிலாக சேர்க்க விண்ணப்பித்தன.
மேலும் அந்நாட்டு அரசியல் சட்டப்படி குமாரி என்று கூறுவது சில குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் படி தவறு என்றும் வாதிட்டு பொதுநல வழக்கைத் தொடர்ந்தன. இதில் உயர்நீதிமன்றம் அரசை இது பற்றிய ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யக்கூறியது. அதில்தான் குமாரி என்ற சொல்லை இனி சான்றிதழில் பயன்படுத்தவேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது. திருமணச் சான்றிதழை கபின் நாமா என்று கூறுகின்றனர்.
பெண் திருமணம் செய்யும் போது இனி அதில் திருமணமானவர், விதவை, விவாகரத்தானவர் என்ற பிரிவுகள் குறிப்பிடப்படாது. ஒபிபாகிதோ என்ற சொல் திருமணமாகாதவர் என்ற பொருளை மிகச்சரியாக குறிப்பிடுகிறது. இறைத்தூதர் முகமது, விதவைப் பெண்களைக் கூட திருமணம் செய்து வாழலாம். கற்புள்ள பெண்களையே தேர்வு செய்ய அவர் எந்த வற்புறுத்தல்களையும் செய்யவில்லை.உண்மையில் இஸ்லாமிய நெறியைப் பின்பற்றுபவர்கள் ஏன் விதவை அல்லது விவாகரத்தானவர்களை தங்களது துணையாக ஏற்க கூடாது? என சமினா அன்வர் சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டுள்ளார்.
இதுபற்றி ரகத் முஸ்டாஃபிஷ் தனது வலைத்தளத்தில், அன்றிலிருந்து இன்றுவரை படித்த வங்காள ஆண்கள், வெள்ளைத்துணி வைத்து தங்களது மனைவியின் கன்னித்திரையை சோதித்து வருகின்றனர். இதுபோன்ற மேலாதிக்க சிந்தனையின் எழுத்து வடிவச் சொல்தான் குமாரி என்பது என எழுதியுள்ளார்.
மாறினால் சரிதான்.
நன்றி: குளோபல் வாய்ஸ் - சமயா அன்ஜூம்