உங்கள் உரிமைக்காக கல்வி பெறுங்கள்! - மிஸ் மேஜர் கிரேசி!
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்
மிஸ் மேஜர் கிரிஃபின் கிரேசி
அமெரிக்காவில் பிறந்த மனித உரிமைப் போராளி. ஸ்டோன்வால் கலவரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஆர்வமாக கலந்துகொண்டவர். மாற்றுப்பாலினவருக்கான அங்கீகாரத்திற்காக பல்வேறு பேரணிகளை நடத்தியிருக்கிறார். நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.
சிகாகோவின் தெற்குப்பகுதியில் 1940 ஆம் ஆண்டு பிறந்தார். பிறப்பால் ஆணாக இருந்தவர், இளம் வயதிலேயே தன்னை பெண்ணாக உணரத்தொடங்கினார். 1950களில் அவரின் பாலினத்தை அறிவிப்பதை நினைத்துப் பாருங்கள். அமெரிக்காவில் தன் கருத்துகளை வெளியிட்டு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். மேலும் பல சம்பவங்களில் மாற்றுக்கருத்து கொண்டவர்களால் தாக்கவும் பட்டிருக்கிறார்.
தன் உடலை பெண்ணாக மாற்ற ஹார்மோன் மருந்துகள் தேவை என்பதை உணர்ந்தார். அதற்கு காசு சேர்க்க, விபசாரத்தை நாடினார். திருட்டுகளில் ஈடுபட்டார். பிற சட்டவிரோத செயல்களையும் செய்தார். ஏனெனில் வாழ அப்போது வேறுவழி இருக்கவில்லை.
நாம் நம்மைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கென இருக்கும் இடத்திற்கு செல்லலாம் என்று தன் மனதில் தோன்றிய கருத்தைச் சொன்னார் கிரேசி. அப்போதுதான் படிக்க சேர்ந்திருந்த இரு கல்லூரிகளில் தன்னுடைய அடையாளத்தைச் சொன்னதால் விரட்டப்பட்டிருந்தார். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான பாரில் கூட தீண்டாமையைச் சந்தித்தார். பிறகுதான் ஸ்டோன்வால் இன் எனும் இடத்தை அடைந்து நிம்மதியானார்.
1969 ஆம் ஆண்டு ஸ்டோன்வால் இன் பாரில் தனக்கு ஏற்ற பெண் தோழியைச் சந்தித்தார் கிரேசி. பின்னர் அங்கு போலீஸ் ரெய்டு வர கலவரம் மூண்டது. போராட்டத்திற்கு தலைவராய் இருந்தது கிரேசிதான். போலீஸ் அடித்ததில் கிரேசிக்கு தலையிலும் தாடையில் அடி. தன் தாடையை அடித்து உடைத்தனர் என புகார் சொன்னார் கிரேசி. பின்னர் மாற்றுப்பாலினத்தவரின் உரிமைகளுக்காக தீவிரமாக போராடத் தொடங்கினார். 1971 ஆம் ஆண்டு திருட்டு முயற்சி என்று சொல்லி போலீஸ் கிரேசியை கைது செய்து சிறையில் அடைத்தது. 1974 ஆம்ஆண்டு தண்டனையை அனுபவித்து வெளியே வந்தார். இக்காலகட்டத்தில் தன் அடையாளத்தை வெட்கப்பட்டு நாணிக் கோணி சொல்லும் பழக்கத்தை கைவிட்டுவிட்டார்.
1978 ஆம் ஆண்டு சாண்டியாகோ சென்றவர் போராட்டங்களில் ஈடுபட்டார். எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு உதவியவர், அங்கு மக்களை ஒருங்கிணைத்து உணவு வங்கி ஒன்றையும் தொடங்கினார். இக்காலகட்டங்களில் தங்க வீடின்றி தடுமாறிக் கொண்டுதான் இருந்தார். உடல்நல பாதிப்புகளையும் எப்படியோ சமாளித்தார். தன்னைத்தானே பெண்ணியவாதி என்று அறிவித்துக்கொண்டார்.
மாற்றுப் பாலின பெண்கள் பிறரைப் போல பள்ளிகளில் கல்வியைக் கற்பது அவசியம். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தாற்போல வாழலாம் என்று பேசினார்.
புவர்டோ ரிகோ பெண்ணான பப்பி, அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். விபசாரத்தை தொழிலாக செய்து வந்தவர் இவர். அப்போது அந்த வீட்டில் கிரேசி இருந்தார் என்றாலும், அது தற்கொலை என்று கூறப்பட்டது. இதனை இவரது எதிர்ப்பாளர்கள் புரளியாக கிளப்பினர்.
இதன்பிறகு மாற்றுப்பாலினத்தவருக்கான போராட்டத்தில் அவர்களின் பாதுகாப்பு பற்றியும் கிரேசி கவனம் கொண்டார். ஏறத்தாழ 78 வயதாகிற அவருக்கு, 50 ஆண்டு பொதுவாழ்வு அனுபவம் உண்டு. மேஜர் என்ற பெயரில் இவரது வாழ்க்கை குறித்து ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படம் எடுத்து தனது வாழ்க்கையை பிறர் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இல்லை என்று கிரேசி கூறிவிட்டார். ஆனாலும் பிறர் இதில் அக்கறை காட்டியதால் அதில் சமூக செயற்பாட்டாளராக நடித்தார். இவருக்கு நான்கு குழந்தைகள் உண்டு.
நன்றி: அவுட்.காம்,. விக்கிப்பீடியா.ஆர்க்
தமிழில்: வின்சென்ட் காபோ