நாய்களுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் பிடிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்
1.ஸ்காட்லாந்திலுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து நாய்கள் தற்கொலை செய்துகொள்கின்றன.
ரியல்: இந்த மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஸ்காட்லாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலம் ஒன்று உள்ளது. அதன் பெயர் ஓவர்டூன். இங்கு செல்லும் நாய்கள் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்பட்டது. இதில் தற்கொலை என்பது மனிதர்களால் கூறப்பட்ட கருத்து. ஆனால் அங்கு சென்ற நீளமான மூக்கு கொண்ட மோப்பசக்தி அதிகமுள்ள நாய்கள் மட்டுமே கீழே எட்டிக்குதித்துள்ளன. பிற விலங்குகளின் வாசத்தை மோப்பம் பிடித்த நாய்கள் கீழே தட்டையான பரப்பு உள்ளது என தவறாக புரிந்துகொண்டு குதித்துள்ளன என்றார் நாய்களின் குணங்களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர் டேவிட் சாண்ட்ஸ். இருண்ட, மேகங்கள் சூழ்ந்த, வறண்ட காலநிலை கொண்ட நேரங்களில் நாய்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும், தீயசக்தியும் இதற்கு காரணம் என பல கருத்துகள் கூறப்படுகின்றன. இதுவரை 50க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த பாலத்திலிருந்து கீழே குதித்து இறந்துள்ளன.
2. பள்ளிப் பேருந்துகளில் மாணவர்களுக்கு சீட் பெல்ட்டுகள் தேவையில்லை!
ரியல்: அவசியமில்லை. பொதுவாக பள்ளிப் பேருந்துகளில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்கும். மேலும் பள்ளிப் பேருந்து என்று எழுதியிருப்பதால் விபத்துகள் நேர வாய்ப்பு குறைவு. கார்களை விட பள்ளிப் பேருந்துகளில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது 70 சதவீதம் பாதுகாப்பானது. 2018ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு போர்டு, பள்ளி வாகனங்களுக்கான பாதுகாப்பு பரிந்துரைகளை வழங்கியது. இதன்படி எட்டு மாநிலங்களில் பாதுகாப்பு பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன. இதன்படி சிறிய, பெரிய பேருந்துகளில் சீட்பெல்டுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் சீட் பெல்ட்டுகள் அமைப்பது அதிக செலவுபிடிப்பன என்று கூறி இதனை புறந்தள்ளியுள்ளனர். பள்ளிப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கினால் அரசு சீட்பெல்ட்டுகளை கட்டாயமாக்கக்கூடும்.
3. நாய்களுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் பிடிக்கும்.
ரியல்: நிஜம்தான். நாய்கள் விளையாடுவதற்கான மனநிலையில் இருக்கும்போது, அதன் வயிற்றைத் தொட்டால் உங்களை அனுமதித்து தரையில் படுத்து புரளும். உடலிலுள்ள நரம்புகளுக்கும், மூளையிலுள்ள நியூரான்களுக்கும் உள்ள தொடர்பில் உருவாகும் வேதிப்பொருட்கள் நாய்க்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் உங்களின் கிச்சு கிச்சு மூட்டலை, அதன் வயிற்றைத் தடவிக் கொடுப்பதை அனுமதிக்கிறது. நாய்களோடு விளையாடுவது மனிதர்களின் மூளையில் ஆக்சிடோசின் எனும் காதல் ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இதன்மூலம் நமக்கும் மனப்பதற்றம் குறைகிறது. தாய்க்கும், குழந்தைகளுக்கும் நெருக்கமான பந்தம் உருவாக இந்த வேதிப்பொருளே காரணம்.
4. யுனிகார்ன் எனும் ஒற்றைக் கொம்புள்ள குதிரை உலகில் உள்ளது.
ரியல்: ஒற்றைக் கொம்புள்ள யுனிகார்ன் குதிரை, புராணங்களில் வரும் கற்பனையான படைப்பு. 4 ஆயிரம் ஆண்டுகளாக இந்த கற்பனைக் குதிரை பற்றி பேசி வருகிறார்கள். சிந்து சமவெளி மக்கள் தங்களது கற்பனையில் உருவான இந்த குதிரையை வரைந்து வைத்தார்கள். அது ஏறத்தாழ நாம் இன்று வரைந்துவரும் ஒற்றைக் கொம்புள்ள குதிரை போன்றே உள்ளது. சிங்கம் என்பதை எப்படி காட்டு விலங்குகளின் ராஜாவாக, கூறுகிறோமோ அதைப்போலவே கடினமான விலங்காக இதனை சில எழுத்தாளர்கள் கூறிவந்துள்ளனர். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம எழுத்தாளரான பிலினி தி எல்டர், ஒற்றைக் கொம்புள்ள குதிரையை உயிரோடு பிடிப்பது மிகவும் கடினம் என்று தனது நூலில் கூறியுள்ளார்.
5. டிராகன்கள் மூச்சு விட்டால் நெருப்பு வரும்!
ரியல்: கதைகளுக்கு கனமும் ஃபேன்டசியும் சேர்க்க எழுத்தாளர்களின் மூளையில் உதித்த யுக்தி இது. டிராகனின் வயிற்றிலிருந்து மீத்தேன் வாயு கிளம்ப, அதனை பற்களிலுள்ள வேதிப்பொருட்கள் எரித்து தீயை ஏற்படுத்துகிறது என பல்வேறு எழுத்தாளர்களும் புனைவாக எழுதிவந்தனர். ஆனால் உயிரியல் விதிகளின்படி, இப்படி செய்தால் அந்த விலங்கின் பல்வேறு உறுப்புகள் நெருப்பால் எரிந்து சாம்பலாகிவிடும். குறிப்பாக நுரையீரல் மற்றும் பற்கள். மனிதர்களின் பற்கள் 200 முதல் 400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கும். ஆனால் மீத்தேன் மூலம் உருவாகும் நெருப்பின் வெப்பம், 1,949 டிகிரி செல்சியஸ் ஆகும். இதனை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. டிராகன் அப்படி தாங்கினால் அதன் பற்கள் எரிந்துபோய் திரும்ப முளைக்கும் (Polyphyodont) ரகத்தைச் சேர்ந்தது என புரிந்துகொள்ளலாம். உதாரணம்: சுறா, யானை. இவற்றுக்கு பற்கள் இருமுறைக்கு மேல் விழுந்து முளைக்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக