ஆத்மா உலகில் மாட்டிக்கொள்ளும் பியானோ ஆசிரியர்! சோல் -2020
சோல்
சிறந்த முறையில் ஜாஸ் இசையைக் கற்றுக்கொண்ட பியானோ ஆசிரியர். ஆர்வமே இல்லாத மாணவர்களுக்கு இசையில் ஆர்வம் பிறக்க போராடிக்கொண்டிருக்கிறார். பள்ளியில் பகுதிநேரமாக ஆசிரியராக உள்ளவருக்கு முழுநேர ஆசிரியர் என்ற பதவி உயர்வும் கிடைக்கிறது. அதேநேரத்தில் அவரது நண்பர் மூலமாக புகழ்பெற்ற டோரத்தி வில்லியம்சின் குழுவில் சேர்ந்து பியானோ வாசிக்கவும் வாய்ப்பு வருகிறது.
அந்த சந்தோஷத்தில் சாலையில் நடந்து செல்லும்போது பாதாளச்சாக்கடையில் விழுகிறார். அவரது ஆயுள் முடிந்துவிடுகிறது. அவரது ஆத்மா, கிரேட் பியாண்ட், கிரேட் பிஃபோர் என பல்வேறு உலகங்களுக்கிடையில் மாட்டிக்கொள்கிறது. சொர்க்கம், நரகம், அடுத்த பிறப்பு என பல்வேறு விஷயங்களை அவரது ஆன்மா எப்படி கற்றுக்கொள்கிறது, பியானோ வாசிப்பது என்பதில் ஆசிரியருக்கு ஆர்வம் இருந்தாலும் அவரது அம்மாவைப் பொறுத்தவரை அது பைசாவுக்கு பிரயோஜனமில்லாத வேலை. அவரது கனவு நிறைவேறும் நேரத்தில் அவரது உயிர் சொர்கத்திற்கு வந்துவிடுகிறது. பிறகு எப்படி மீண்டும் உலகிற்கு சென்றார், அவரது கனவை நிறைவேற்றிக்கொண்டாரா என்பதை நகைச்சுவை நெகிழ்ச்சி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
எப்போதும் போல இசையும் உணர்வுகளும் கலந்த இக்கதையை பீட்டே டாக்டர் இயக்கியிருக்கிறார். பூமியில் வாழ்வதற்கான நோக்கம் என்பதை ஒரு ஆத்மா பெற்றால் அது உடனே பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி நோக்கம் இல்லாத ஆத்மாக்கள் திரும்ப திரும்ப பயிற்சியில் உள்ளன. 22 என்ற ஆத்மா அப்படி பலமுறை தோற்றுப்போன ஒன்று. அதனை எப்படி பியானோ ஆசிரியர் வாழ்வதற்கான ஆசையை மனதில் விதைக்கிறார் என்பதுதான் கதையின் மையம். இதே வழியில் அவரது பியானோ வாசிப்பு பற்றிய அவரது ஆசை, உண்மையில் ஆழமான ஆசையாக மனதில் உள்ளதா என்பதையும் அவர் அறிந்துகொள்கிறார்.
ஆத்மாக்களின் உலகினை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளனர். சியான் நிறத்தில் அமைந்துள்ள ஆன்மாக்கள், மோட்சம் பெறும் கிரேட் பியாண்ட் எனும் இடம், அதனை கணக்கிடும் டெரி எனும் கணக்காளர், இவற்றை தடையின்றி செய்யும் ஜெர்ரி என பாத்திரங்கள் என வடிவமைப்பு அனைத்திலும் பிக்ஸாரின் தரம் மிளிர்கிறது.
ஒருவர் அவருக்கான விஷயங்களைப் பெற நாம் வாய்ப்புகளை உருவாக்கலாமே தவிர அவருக்கு தகுதியில்லை. திறமையில்லை என நிராகரிப்பது தவறு என்பதை சொல்லியிருக்கிறார்கள். ஒருவருக்கு வாழ்க்கை லட்சியமாகவும், பிறந்ததே இதற்காகத்தான் என்று தோன்றும் விஷயம் இன்னொருவருக்கு இவ்வளவுதானா என்று தோன்றலாம் அல்லவா?
பிரகாசிக்கிறது
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக