பௌர்ணி நிலவு ஒளி மனிதர்களின் மனநிலையை பாதிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்
கரப்பான் பூச்சிகள் இல்லாத உலகம் சாத்தியம்!
ரியல்: கதிர்வீச்சிலும் கூட சமாளித்து வாழும் என்று கூறப்படுவது, கரப்பான் பூச்சி. மனித இனத்திற்கு பாக்டீரியா, ஒவ்வாமை பிரச்னைகளை ஏற்படுத்தியபடி வாழும் இந்த பூச்சி இனம், பத்தாயிரம் ஆண்டுகளாக நம்மோடு வாழ்ந்து வருகிறது. மரம், இலை ஆகியவற்றை உண்டு, நைட்ரஜன் சத்தை நிலத்திற்குப் பெற்றுக் கொடுக்கிறது. இயற்கையின் உணவுச்சங்கிலியில் கரப்பான் பூச்சி முக்கியமானது. எனவே, அவற்றால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம். அதன் இனத்தை ஹிட் ஸ்ப்ரே அடித்து கொல்ல நினைக்காதீர்கள். தற்போதைக்கு இம்முயற்சி சாத்தியமல்ல.
உலகிலுள்ள அனைத்து மக்களும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யத்தொடங்கினால் சூழல் மேம்படும்!
ரியல்: நிச்சயமாக சூழல் மேம்படும். இந்திய குடிமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முயன்றால், கழிவுகளை நிலத்தில் கொட்டுவது குறையும். இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன்கள் கழிவுகள் உருவாகின்றன. இந்த எண்ணிக்கை 2030இல் 165 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. திடக்கழிவாக உருவாகும் 43 மில்லியன் டன்னில் 11.9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதி அனைத்தும் நிலத்தில் கழிவுகளாக கொட்டப்படுகிறது. பிளாஸ்டிக்குகளை கவனமாக மக்கள் அனைவரும் கையாளத் தொடங்கினாலே அதனை மறுசுழற்சி செய்வது எளிதாக இருக்கும்.
யானை எலியைப் பார்த்து பயப்படும்!
ரியல்: இதுபோன்ற சங்கதிகள் குழந்தைகளின் கதைகளில் எழுதப்படும் புரளிகள். யானைகள் வலிமையான உடலையும், உறுதியான மனத்தையும் கொண்டவை. பெரிய விலங்குகள் சிறிய விலங்குகளுக்குப் பயப்படுவது வேடிக்கையாக இருக்கும் என்பதால் யானை எலியைப் பார்த்து பயப்படும் என்று கூறுகிறார்கள். யானையின் பார்வை துல்லியமானது கிடையாது. மோப்ப சக்தியை பெருமளவு நம்பி இயங்குகிறது. கதைகளில் வரும் வேடிக்கையை ரசிக்கலாம். ஆனால் அதனை அப்படியே நம்பி
விடாதீர்கள்.
பௌர்ணமி நிலவு மனிதர்களின் மனநிலையைப் பாதிக்கும்
ரியல்: நிலவைப் பார்த்து ஊளையிடும் ஓநாய்கள்தான், இதைப்பற்றி, யோசிக்கவேண்டும். நாம் அல்ல. சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று அதனை நிலவு பிரதிபலிக்கிறது. குளிர்ச்சியான நிலவு ஒளி ஒருவரின் மனநிலையை மாற்றும், குற்றச்செயல்பாடுகளைத் தூண்டும் என்று சிலர் கூறிவருகின்றனர். இந்தக் கூற்றுக்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. மூளையிலுள்ள திரவத்தின் மீது நிலவின் ஈர்ப்புவிசை செயல்படுகிறது என சொல்வது புனைவு நாவல்களுக்கு வேண்டுமெனில் நல்ல கருப்பொருளாக இருக்கும். உண்மையில் குற்றங்களுக்கும் நிலவொளிக்கும் எந்த தொடர்புமில்லை என்பது அறிவியலாளர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சர்க்கரை குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும்!
ரியல்: பிறந்தநாள், திருமணம், விருந்து என நமது அனைத்து விழாக்களிலும் கேக், லட்டு, மைசூர்பா, குலோப்ஜாமூன், என ஏகத்துக்கும் இனிப்புகள் நிறைந்துள்ளன. கூடுதலாக செயற்கை இனிப்பு சேர்த்த குளிர்பானங்கள், பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதால் ஒருவருக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், சிலவகை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சுறசுறுப்பாகச் செயல்படுவார்கள் என்று சொல்ல எந்த அறிவியல் ஆதாரங்களும் கிடையாது. இந்தியாவின் நகர்ப்புறங்களில் தினசரி 19.5 கிராம் அளவில் ஒருவர் சர்க்கரை உணவுப்பொருட்களை உண்கிறார். இதில் வயதானவர்கள், பெண்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவு அதிகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக