என் அப்பாவின் வாழ்கையிலிருந்துதான் மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்! - டெரி வெய்ட், மனிதநேய செயல்பாட்டாளர்
டெரி வெய்ட்
1987-1991 காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் டெரி வெய்ட் உலகின் கவனத்தை ஈர்த்தார். ஹிஸ்புல்லா இயக்கத்தினரால் ஐந்து ஆண்டுகள் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர் இவர். லெபனானில் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவருக்கு இன்று வயது 81 ஆகிறது.
உங்கள் சிறுவயது எப்படி தொடங்கியது?
நான் செஷையர் பகுதியில் பிறந்தேன். நூற்பு ஆலை அருகே இருந்த ஸ்டைல் என்ற கிராமத்தில் வளர்ந்தேன். அது தொழில்நுட்ப புரட்சியின் தொடக்க காலம். சாமுவேல் கிரெக் ஊரக தொழில்துறையை உருவாக்கி வந்தார். பின்னர் அந்த தொழிற்சாலைகள் கைவிடப்பட்டன. இன்று அது அருங்காட்சியமாகி உள்ளது.
உங்கள் அப்பா காவல்துறை அதிகாரி அல்லவா?
அவரது சம்பளத்திற்கு நாங்கள் நல்ல வீட்டில்தான் வாழ்ந்தோம். அப்பாவின் குறைவான சம்பளத்தில் பெரிய வீடுதான் அது. அங்கேயே தோட்டமும் இருந்தது. நாங்கள் எங்கள் வீட்டிற்கான பழங்கள், காய்கறிகளை விளைவித்துக்கொண்டோம். சில சமயங்களில் குற்றவாளிகளை விசாரணை செய்யவும் வீட்டின் அறைகளைப் பயன்படுத்துவார். முடிந்தவரை அங்கு அமைதி நிலவுமாறு பார்த்துக்கொண்டார்.
பிறருக்கு உதவி செய்வதை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்?
எனக்கும் இந்த குணம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்த குணம் என் அப்பாவிடமிருந்துதான் வந்திருக்கிறது. பொருளாதார மந்த நிலையில் அவரின் வணிகம் தோற்றுப்போக, காவல்துறையில் சேர்ந்தார். பின்னர் இறுதிவரை அப்பணியில்தான் இருந்தார். செஷ்டர் காவல்நிலையத்தில்தான் அவருக்கு பணி.
என் தந்தை புத்திசாலி. அவர் பல்கலைக்கழகம் செல்லக்கூட வாய்ப்பு இருந்தது. ஆனால் குடும்பத்தில் கல்விக்கென செலவழிக்க பணம் இல்லை. அதுதான் எனது மனதில் இரக்கத்தை உருவாக்கியிருக்கவேண்டும் என நினைக்கிறேன். என் அப்பாவின் வாழ்க்கைப் போராட்டம் எனது வாழ்க்கையை உருவாக்கியதில் முக்கியமான பங்காற்றியிருக்கிறது.
இசை மீதான ஆர்வத்தை எப்படி கற்றீர்கள்?
எங்கள் தாத்தா, பாட்டி நாங்கள் வாழ்ந்த வீட்டிலிருந்து முப்பது கி.மீ. தொலைவில்தான் இருந்தனர். அவர்களும் செய்துவந்த வணிகம் பொருளாதார சிக்கல்களால் வீழ்ச்சியுற்றது. அவர்களும் வாழ்க்கைப்பாட்டிற்காக வேலைசெய்து வந்தனர். பாட்டிதான் நான் பியானோ வாசிக்கவேண்டுமென்று விரும்பினார். ஆனால் எங்களால் அதனை வாங்குமளவு பணத்தை கொண்டிருக்கவில்லை. நான் அதனை இறுதிவரை இசைக்க கற்றுக்கொள்ளவில்லை. பாட்டிக்கு அதனை வாசிக்க தெரியும், மௌனப்படங்களுக்கு அவள் இசை வாசித்து வந்தாள்.
சர்வாதிகாரிகளோடு உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?
நான் இடி அமீன், கடாபி, ஈரானின் புரட்சிப்படைகள், பெய்ரூட்டின் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பினரை சந்தித்துள்ளேன். இப்படித்தான் நான் கடத்தப்பட்டேன். நான் ஏன் கடத்தப்பட்டேன் என யோசித்து விடை கண்டபோது, அவர்கள் பயத்தில் வாழ்வதை உணர்ந்தேன். அவர்கள் எப்போதும் பிறர் மீது பயத்துடனே வாழ்கிறார்கள்.
ஐந்து ஆண்டுகளை எப்படி சமாளித்தீர்கள்?
நான் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் யார் வருவார்களோ அவர்களிடம் பேசுவேன். படிக்க புத்தகங்கள், எழுத பேனா என எதுவும் கொடுக்கப்படவில்லை. எனக்கு இருமுறை விதிக்கப்பட்ட மரண தண்டனை தள்ளி வைக்கப்பட்டது. அதனால் இன்று உயிருடன் இருக்கிறேன். நான் எழுத வேண்டிய விஷயங்களை மனதில் எழுதிக்கொண்டிருந்தேன். எனது மனநலனை சரியானபடி வைத்திருக்க அதிக மெனக்கெட வேண்டியிருந்தது.
நீங்கள் விடுதலையானதை எப்படி உணர்ந்தீர்கள்?
நான் வெளியானபோது நிறைய பத்திரிகையாளர்கள் என்னிடம் பேச முனைந்தார்கள். கடத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆன காரணத்தால் என்னை அனைவரும் மறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஒரு ஆண்டு முழுவதுமாக நான் ஊடகங்களுக்கு எந்த நேர்காணலும் அளிக்கவில்லை.
ரீடர்ஜ் டைஜெஸ்ட்
சுசந்திரிகா சக்ரபர்த்தி
கருத்துகள்
கருத்துரையிடுக