தவளையில் செல் மூலம் செயல்படும் பயோபாட்! - பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்களின் முயற்சி!
பரிணாம வளர்ச்சியை காட்டும் பயோபாட்!
டஃப்ட் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தவளையின் செல்களை வைத்து பயோபாட் என்ற உயிருள்ள கணினி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அறிவியலாளர்கள் இன்று தங்கள் சிந்தனையை கணினிக்கு அளித்து அதன் மூலம் வாழ்க்கையை வடிவமைக்க முயன்று வருகிறார்கள். இயற்கையிலுள்ள பல்வேறு உயிரினங்கள் கைகள், கால்கள் இல்லாமல் வினோதமான உடல் அமைப்பைக் கொண்டு வாழ்கின்றன. இவற்றை கண்காணித்து ஆராய்ச்சி செய்வது கடினம். இதற்காகவே இந்த உயிரினங்களின் செல்களைக் கொண்டு பயோபாட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் அவற்றின் பரிணாம வளர்ச்சியைக் கணிக்கலாம்.
இவற்றால் என்ற பயன் என்று கேள்விகள் எழலாம். இவற்றின் மூலம் மைக்ரோபிளாஸ்டிக், அணுஆயுதக் கழிவுகள் பிரச்னையைக் கூட தீர்க்க முடியும். இவை கணினி மூலம் வடிவமைக்கப்பட்ட உயிரிகள் (CDO) என்று அழைக்கப்படுகின்றன. இந்த உயிரிகளுக்கு மூளையோ, அறிவுத்திறனோ கிடையாது. இவை உலகின் நடைமுறைப் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு, செல்களுக்கு இடையிலான தகவல்தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் அறிய உதவுகின்றன. இதனால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், வயதாவது ஆகிய சிக்கல்களை எளிதாக சமாளிக்க முடியும்.
பல லட்சம் ஆண்டுகளாக இயற்கையிலுள்ள உயிரிகள் பரிணாம வளர்ச்சி பெற்று இன்றுள்ள உடல், அறிவுத்திறனைப் பெற்றுள்ளன. இவற்றை ஆய்வகத்தில் நம்மால் உருவாக்க முடிந்தால் இதுபற்றிய ஏராளமான கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க முடியுமே? ஆராய்ச்சியாளர்களின் நோக்கமும் அதுவேதான்.
அமெரிக்காவைச் சேர்ந்த மரபணு வல்லுநர் ஜே. கிரெய்க் வென்டர் செயற்கையான டிஎன்ஏ வரிசை ஒன்றை உருவாக்கினரார். இதனை எந்த உயிரினத்தின் செல்களிலும் நுழைக்க முடியும். இதன்மூலம் உயிரினங்களின் குணங்களை மாற்றினார். உயிரியல் வரலாற்றில் உயிரினத்தின் செயற்கையான டிஎன்ஏ வரிசையை ஆய்வகத்தில் உருவாக்கியது முக்கியமான சாதனை. கடந்த இருபது ஆண்டுகளில் அறிவியலாளர்கள் பல்வேறு செயற்கையான வாழ்க்கை முறைகளை உருவாக்கியுள்ளனர்.
பயோபாட்டில் ஆப்பிரிக்க தவளையின் தோல், இதய செல்கள் பயன்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகள் கணினியால் நெறிப்படுத்தப்படுகின்றன. ஹார்வர்ட் பல்கலையில் உருவாக்கப்பட்ட சைபோர்க் என்பது எலியின் செல்கள், சிலிகன் உடல் என வடிவமைக்கப்பட்டது. இதைப்போலவே மூலக்கூறு ரோபோக்களும் அமைக்கப்பட்டு உடலில் செலுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைகளிலிருந்து பயோபாட் வேறுபடுவது, இவற்றின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிப்பதில்லை. இவற்றின் செயல்பாடுகளை கணினியே வடிவமைக்கிறது என்பதில்தான்.
கணினி பயோபாட்டின் பரிணாம வளர்ச்சி அல்காரிதத்தை இருபது மணிநேரத்தில் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் இயற்கையின் லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும் பரிணாம வளர்ச்சி வேகத்தின் மாற்றங்களை இதன்மூலமே அறியலாம். அமெரிக்காவின் ஒரெகான் பல்கலையில் இதற்காக 100 பயோபாட்களை உருவாக்கப்படுகின்றன. இவற்றில் வேகமாக உள்ள பயோபாட்கள் மட்டும் செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றன. இந்த ஆராய்ச்சி மூலம் புற்றுசெல்களை குணப்படுத்தவும், அவற்றின் அமைப்பை சாதாரண செல்லாக மாற்றவும், குழந்தைகளின் பிறப்புக் குறைபாடுகளை தீர்க்கவும் பயன்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தகவல்
Computers creates new life form
Science Illustrated
கருத்துகள்
கருத்துரையிடுக