உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா தடுப்பூசி? - உண்மையும் உடான்ஸூம் அறிவோம்!
உண்மையும் உடான்ஸூம்!
ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளிலிருந்தும் சென்ற கருப்பின அடிமைகள் உலகம் முழுக்க பரவினார்கள்
ரியல்: ஆப்பிரிக்கா என்பது ஓர் நாடு என சிலர் நினைப்பது போலவே இதுவும் தவறான நம்பிக்கை. ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் கருப்பினத்தவர்கள் விற்கப்படவில்லை. ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதியிலிருந்துதான் கருப்பினத்தவர்கள் அடிமை வணிகம் தொடங்கியது. தங்கம் தேடி ஆப்பிரிக்காவிற்கு சென்ற போர்ச்சுக்கீசியர்கள் 1442ஆம் ஆண்டு தங்கள் நாட்டிற்கு பத்து ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு சென்றனர். பின்னர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கானாவில் எல்மினா எனும் அடிமைகள் விற்குமிடத்தை தொடங்கினர். அங்கு அடிமைகள் விற்பனையோடு, தங்கம், யானைகளின் தந்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன. 1619ஆம் ஆண்டுவாக்கில் ஐரோப்பியர்களால் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நம் கைகளிலுள்ள கைரேகைகள் பொருட்களை இறுக்கமாக பிடிக்க உதவுகின்றன
ரியல்: நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிய நம்பிக்கை இது. ஆனால் இது உண்மையல்ல. மென்மையான, வழுக்கும் தன்மை கொண்ட பொருட்களை பிடிப்பதில் கைரேகைகள் உதவி செய்வதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருட்களை பிடிக்கும்போது நமது கரங்கள் ரப்பர் போலவே செயல்படுகின்றன. பொருட்களை பிடிக்கும்போது, சிறந்த பிடிமானத்தை ரேகைகள் அளிப்பதில்லை என இங்கிலாந்தைச் சேர்ந்த மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர். தாயின் கருப்பையில் உள்ள குழந்தையின் கைரேகை, ஏழாவது மாதத்தில் முழுமையாக உருவாகிவிடுகிறது. கைரேகை இன்றி பிறப்பவர்களுக்கு ஏற்படும் குறைபாட்டிற்கு, அடெர்மாடோகிளைபியா (adermatoglyphia) என்று பெயர்
பூமியின் வெப்பநிலை உயர்வது இயல்பானது. இயற்கையானது
ரியல்: மனிதர்களால் கார்பன, மீத்தேன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளிவரும் வாதங்களை மறைக்க மேற்சொன்ன கூற்று கூறப்படுகிறது. அது உண்மையல்ல. இயற்கையான மாறுதல்களால் பூமியின் வெப்பம் உயர்வது மெதுவாகவே நடக்கும். கடந்த 6.6 கோடிஆண்டுகளில் பசுமை இல்ல வாயுக்கள் பத்து மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கரிம எரிபொருட்களால் காற்றில் கார்பன் அதிகரிப்பு, காடழிப்பு, நச்சுப் பொருட்களின் வெளியீடு ஆகிய கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்களின் செயல்பாடு காரணமாகவே அதிகரித்துள்ளது என்கிறார் சூழல் ஆய்வாளரான ஜேக் ஹாப்ஸ்பாதர்.
தடுப்பூசி மூலம் பெறும் நோய் எதிர்ப்பு சக்தியை விட உடலில் உருவாகும் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியே சிறந்தது.
ரியல்:: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக வளர்ந்திருக்காது. அவர்களின் நோய்எதிர்ப்பு சக்தி நோயை கவனித்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டால் அவர்கள் இறப்பது உறுதி. தடுப்பூசி மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக தூண்டிவிடடு, தொற்றுநோயின் பாதிப்புகளை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சூழலுக்கு உடல் உடனே பழகாது. தடுப்பூசி உடலை அச்சூழலுக்கு தயார்படுத்துகிறது அவ்வளவுதான். உடலின் நோய் எதிர்ப்புசக்திதான் நம்மைக் காக்கிறது. முற்றாக தடுப்பூசி மருந்துகளை உடலில் செலுத்திக்கொள்ள மறுப்பது தவறு மட்டுமல்ல அறியாமையும் கூட.
இடிமின்னலின் போது காரில் இருப்பது பாதுகாப்பானது.
ரியல்: பெரும்பாலான கார்கள் இடி, மின்னலின்போது நமக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. முடிந்தவரை மழைக்காலங்களில் வெளியில் காரில் செல்லாமல் இருப்பது நல்லது. காரின் டயர் ரப்பர் என்பது மின்னல் தாக்கலின்போது பெரிய உதவியை செய்யாது. காரிலுள்ள உலோகங்களே மின்சாரத்தை பூமிக்கு கடத்துகின்றன. பைக், சைக்கிள், உலோகமல்லதாத மேற்கூரை கொண்ட வாகனங்கள் ஆகியவற்றில் மழைக்காலங்களில் வெளியில் செல்வது மின்னல் தாக்குதலிருந்து நம்மை பாதுகாக்காது.
கருத்துகள்
கருத்துரையிடுக