மக்களுக்காக உருவான சட்டத்தை மக்கள் தங்களை உயிரைக்கொடுத்து காப்பாற்றிக்கொண்டு வருகிறார்கள்! - நிகில் தே, ஆர்டிஐ செயற்பாட்டாளர்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் அரசின் செயல்பாட்டையே மாற்றியது
நிகில் தே
அனுபமா கடகம்
பிரன்ட்லைன்
15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிஐ சட்டம் நிறைவேற்றப்பட்டது உண்மையிலேயே முக்கியமானது. ஆனால் அண்மைய காலங்களில் மெல்ல அச்சட்டம் முடக்கப்பட்டு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இதற்கான முயற்சிகள் 30 ஆண்டுகளாக இருந்ததால் ஆர்டிஐ சட்டம் அமலுக்கு வந்தது. ஏராளமான போராட்டங்கள், பேரணிகள் என மக்கள் போராடியதால்தான் இச்சட்டம் நாடு முழுக்க நடைமுறைக்கு வந்தது. இதனை மக்களுக்கான சட்டம் என்று கூட சொல்லலாம். எனவேதான் நாடு முழுக்க பரவலாக பயன்பட்டு வருகிறது.
இந்த சட்டத்தின் வெளிப்படைத்தன்மை தற்போது கேள்விக்குறியாகி வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வலிமையைக் குறைப்பதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. முதலில் சட்டத்தை அமலாக்க போராடிய செயல்பாட்டாளர்கள் இப்போது அதனை நீர்த்துப்போகாமல் பாதுகாக்க போராடவேண்டியுள்ளது.
இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை தினசரி எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள்தான் அரசின் வெளிப்படைத்தன்மையை உலகம் முழுக்க வெளிச்சமிட்டு காட்டுபவர்களாகவும், அதனைப் போராடி காப்பாற்றுபவர்களுமாக இருக்கிறார்கள். ஆர்டிஐ சட்டத்திற்கான போராட்டம் அரசியல் அமைப்பின் ஜனநாயகத்தை காப்பாற்றி, எளிய மக்களும் அதில் கேள்வி கேட்க முடியும் என்ற துணிச்சலைத் தருகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என இரண்டு அரசுகளும் இந்த சட்டத்தை அணுகுவதில் வேறுபாடுகள் உண்டா? வெளிப்படைத்தன்மையை இரண்டு அரசுகளும் எப்படி பேணுகின்றன?
ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நிறைவேற்றியது. அவர்கள் அப்படி நிறைவேற்றுவதற்கு மக்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது. அவர்களின் போராட்டம் இன்றுவரை நிற்கவில்லை. தொடர்ந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் நிறைவேற்றும் சட்டங்களின் விளைவுகள் பற்றி எந்த கருத்துகளையும் மக்களிடம் கேட்பதில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் புகார்தாரரை பாதுகாக்கும் சட்டம், லோக்பால் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. யுஏபிஏ எனும் தேசவிரோத சட்டம், சூழல் பாதிப்பு சட்டம் ஆகியவற்றை பொதுமுடக்க காலத்தில் யாருடைய கருத்துகளையும் கேட்காமல் நிறைவேற்றிவிட்டது. புதிய சட்டங்கள், மசோதா உருவாக்கப்பட்டால் அதனை மக்களிடம் விவாதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. விவகாரமான சட்டங்களை பாராளுமன்ற கமிட்டியில் விவாதித்து முடிவெடுக்கவும் அரசு எண்ணாதது
அதிர்ச்சியாக உள்ளது.
உலகிலேயே வலிமையான சட்டம் என்று ஆர்டிஐயை சொல்லலாம். இதனை எந்த அம்சங்கள் வலிமையாக்குகின்றன. இதில் மக்களின் ஈடுபாடு எப்படி உள்ளது என்பதைக் கூறுங்கள்.
இது மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டம் என்பதுதான் இதனை முக்கியத்துவப்படுத்துகிறது. இதில் மக்கள் வழக்குரைஞர் இல்லாமலேயே அரசிடம் தனக்கு தேவையான விவரங்களைப் பெறமுடியும்.தகவல்களை முப்பது நாட்களுக்குள் தராதபோது தொடர்புடைய ஊழியர் தாமதத்திற்கான அபராத தொகையை புகார்தாரருக்குக் கொடுக்கவேண்டும். இந்த அபராத முறை அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சட்டங்களை ஒத்துள்ளது. இப்படி அரசின் பல்வேறு செயல்பாடுகளை வெளிக்கொண்டு வந்த காரணத்திற்காகவே 85 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் மக்கள் ஆர்டிஐ மூலம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டுதான் உள்ளனர். ஆர்டிஐ தொடர்பாக ஒருவருக்கு ஏற்படும் பிரச்னைகள், மிரட்டல்களை தீர்ப்பதற்கான சட்டங்கள் இயற்றப்படவில்லை. ராஜஸ்தானில் ஜன் சூச்னா போர்டல் இம்முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் சார்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை 20 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
தற்போதுள்ள சூழலை தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு உவப்பானதாக புரிந்துகொள்கிறீர்களா?
தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பது அரசின் வெளிப்படைத்தன்மையை மக்களுக்கு வெளிக்காட்டும் கண்ணாடி போல உள்ளது. இதனை சட்ட விதிகள் மூலம் மாற்றுவது தவறானது. இது தனியாக உருவாக்கப்பட்ட சட்டம் என பலரும் நினைக்கிறார்கள். பேச்சுரிமை, ஜனநாயகம் ஆகியவற்றுடன் இணைந்துதான் தகவல் அறியும் உரிமைச்சட்டம் செயல்படுகிறது. அரசிடமிருந்து தகவல்களைப்பெறும் மக்கள் அதன்மூலமே பல்வேறு செயல்பாடுகள் பற்றி குரல் எழுப்பி அரசை விழிப்புறச்செய்கிறார்கள்.
கோவிட் -19 காலத்தில் அரசு பல்வேறு சட்டங்களை உருவாக்கியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மேலிருந்து கீழாக அனைத்து காரியங்களும் நடைபெறவேண்டும் என அரசு நினைக்கிறது. அதன்காரணமாகவே தேச பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு ஜனநாயகப்பூர்வமற்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன. மத்திய அரசு கோவிட் -19 சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சட்டங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்தியது. ஆர்டிஐ சட்டம் இந்தவகையில் மக்களுக்கு ஜனநாயகப்பூர்வ சூழலை உருவாக்க பயன்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக