நண்பனின் காதலியை வளைக்கும் ஹரியின் காதல் லீலை! - டர்ட்டி ஹரி 2020 - எம்.எஸ். ராஜூ
டர்ட்டி ஹரி
செஸ் பிளேயரான ஹரி ஹைதராபாத்திற்கு பெரிய பணக்காரனாகவேண்டும் என வருகிறார். அங்கு நண்பரின் அறையில் தங்குகிறார். அவருக்கு வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற லட்சியம் உள்ளது. அதற்காக பெரிதாக ஏதும் செய்வதில்லை. செஸ் பயி்ற்சி கொடுக்கும் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். எதற்கு அங்குதானே பணக்கார ஆட்கள் வருவார்கள். அதைப்போலவே அங்கு ஒரு இளைஞன் வருகிறான்.
அவனை செஸ்சில் தோற்கடிக்கிறான் ஹரி, மெல்ல விளையாடிக்கொண்டே அவனது வாழ்க்கை, தொழில் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்கிறான். நண்பனின் அப்பாவுக்கு இசை ரசனை என்று அறிந்து கேசட்டுகளை வாங்கிக்கொடுத்து ஈர்க்கிறான். இந்த நேரத்தில் அந்த குடும்பத்து பெண் வசுதா, மெல்ல இவனைக் கவனிக்கத் தொடங்குகிறாள். அவனுக்கும் தேவை அதுதான். பின் எப்படி அந்த குடும்பத்தில் செட்டிலாவது? இதற்கு தேவைப்படுவது சதுரங்கப்பலகைக்கான காய் நகர்த்தும் வேகம்தான். அதனை சரியாக செய்பவன் அடுத்து சறுக்குவது, வசுதாவின் அண்ணன் காதலிக்கும் ஜாஸ்மினையும் காதல் செய்ய முயலும்போதுதான். அதைக்கூட ஜாஸ்மின் சிம்பிளாக ஒருமுறை சொல்லுகிறாள். உனக்கு எல்லா விஷயமும் சரியாக அமைஞ்சிருக்கு. நீயாக அதைக்கெடுத்துக்காத வரை பிரச்னை இல்லை என.
காமத்துக்கு துணைவியாக ஜாஸ்மின், பணம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மனைவியாக வசுதா என தேர்ந்தெடுத்து வாழ்கிறான் ஹரி. தொழிலும் முன்னேற்றமாக அவன் நிறுவனத்திற்கு சேர்மனாகிறான். இந்த நேரத்தில் ஜாஸ்மின் காதல் செய்த லீலையால் கர்ப்பிணியாகிறாள். இந்த தகவல் சொல்வதைக் கேட்பதற்கு கூட ஹரிக்கு நேரமில்லை. அவன் தன் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். ஜாஸ்மினுக்கு ஹரி தன்னை ஏமாற்றுகிறான் என்ற எண்ணம் மெல்ல மனதில் தோன்றுகிறது. வசுதாவிற்கு சந்தேகமேயில்லை. உனக்கு அஃபேர் இருக்கிறதா என மனசு விட்டே கேட்டு விடுகிறாள். இதனை ஹரி எப்படி சமாளித்தான், அவனது பணக்கார வாழ்க்கை அப்படியே தொடர்ந்து நடந்ததா? ஜாஸ்மினின் வாழ்க்கையை உலகம் ஏற்குமாறு ஹரி செய்தானா என்பதுதான் இறுதிப்பகுதி.
படம் முழுக்க நம்பியிருப்பது ஜாஸ்மினாக நடித்திருக்கும் சிம்ரத் கௌரைத்தான். வசுதாவுக்கு இதில் முக்கியமான பங்கு இறுதியில் வரும் ட்விஸ்டில்தான் உள்ளது. மற்றபடி அது ஒரு ஹரி விளையாடும் சதுரங்க காய்தான். ஹரியாக நடித்துள்ள ஷ்ரவன் ரெட்டி, தனது ஆசை, விருப்பம் சார்ந்து ஜாஸ்மினைத் தேடி போவது, அவளிடம் போனையே வீசிவிட்டு வருவது, குற்றம் செய்துவிட்டு எதுவும் செய்யவில்லை என நடிப்பது சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு ஈடுகொடுத்து அல்லது மிஞ்சும் பாத்திரம் ஜாஸ்மின் பாத்திரன் ஒன்றுதான்.
படம் தேவையில்லாத காட்சிகளைக் கொண்டிருக்கவில்லை. ஹரி நகருக்கு வருகிறார். நண்பர் வீட்டில் தங்கி வேலைக்கு செல்கிறார். என எவ்வளவு வேகமாக கதைக்குள் வர முடியுமோ அந்தளவு வேகமாக பயணிக்கிறது. வசுதா, ஹரிக்கு இடையிலான உறவு நெருக்கமாவதையும், விலக்கமாவதையும் இன்னும் கொஞ்சம் காட்சிகளாக காட்டியிருக்கலாம். ஜாஸ்மினின் மீதான ஹரியின் வேட்கை, அதன் விளைவாக நடக்கும் விபரீதம் நோக்கி கதை செல்வதால் மேற்படி காட்சிகளை குறைத்துவிட்டார்கள். இதனால் வசுதா, ஹரிக்கு இடையில் அந்தளவு நெருக்கம் இல்லையோ என்பதுபோலான தோற்றம் உருவாகிவிடுகிறது.
கொஞ்சம் டர்ட்டியாக இருப்பதும் சரிதான்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக